Wednesday, May 19, 2010

நேற்று பெய்த மழையில்...


இந்த கதையை சென்னையை ஆட்டுவிக்கும் லைலா புயலுக்கு சமர்பிக்கிறேன்.

புகைப்படம்: நன்றி அவ்யுக்தா கீர்த்தி

நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையில், இன்று ஈரச்சேலை அணிந்திருந்தாள் சாலைப்பெண். மழை நீரை குடித்து பள்ளங்கள் தங்களது வயிற்றை நிரப்பி காட்சியளித்தன.

"யூஸ்லெஸ் ஃபெல்லோ" என்று சத்தமாக கத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்துகொண்டிருந்தார் திருவாளர் காளிதாஸ். தாஸ் அண்ட் கோ முதலாளி. சாதாரணமாக இருந்த தொழிலை இன்று பல நாடுகளுக்கு கொண்டு சென்றவர். வேலை விஷயத்தில் பயங்கர கறார் பேர்வழி.சொன்ன நேரத்தில் சொன்ன வேலை முடியவில்லை என்றால் மனிதன் ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். சில நேரங்களில் இவர் மனிதாபிமானமற்றவர் என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு நடப்பார். இவ்வளவு கோவக்காரறாய் இருந்தாலும், தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால், அனைவரையும் தனது பிள்ளையை போல பார்த்துக்கொள்வார்.
'எல்லாருக்கும் பொறுப்பு இருக்கணும்ன்னு நெனைக்கறது தப்பா?' என்று கேட்பார்.
'அதுக்குன்னு அவங்களுக்கு வேற முக்கியமான வேல இருக்கலாம் இல்லீங்களா?' என்றால்.
'அவனுக்கு என்ன குடி முழுகி போற வேல, இங்க வராம?' என்று அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்.

'சரோஜா, இந்தா ஐயாவுக்கு காப்பி கொண்டு போ... ஆறிட போகுது' காளிதாஸ் மனைவி செண்பகம் வேலைக்காரியிடம் காபியை நீட்டினாள்.
'அம்மா, ஆறினாலும் ஐயா சூடா இருகாரு... ' என்று சரோஜா காமெடி பண்ண... செண்பகம் முறைத்தாள், மனதிற்குள் சிரித்தபடி.

காபியை சரோஜா நீட்ட, 'இது ஒண்ணுதான் கொறச்சல், கொண்டு போய் கீழ கொட்டு' என்று எரிந்து விழுந்தார்.

'அம்மா, மூஞ்சி செவந்துருக்கான்னு பாருங்க... '
'ஏண்டி...'
'ஐயா நெருப்ப மூஞ்சில துப்பிடாறு, என்னத்துக்கு ஐயா இம்புட்டு சூடா இருக்காரு'
'கணேசன் இன்னும் வரல இல்ல அதான்'

கணேசன், அவரது டிரைவர். காலை எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். இன்னும் ஆளக்காணோம். மணி ஒன்பது.

'நேத்து பேய் மழை பெஞ்சதுல, எதுனாச்சும் பிரச்சனையா இருக்கும்'
'உனக்கு அவர பத்தி தெரியாதா, அதெல்லாம் அவரு பொருட்டே பண்ண மாட்டாரு. நேத்துக்கூட அவர் பியோன் உடம்பு சரியில்லன்னு லடே-ஆ வந்தானாம், அவன பத்துநாள் சஸ்பென்ட் பண்ணிட்டார்'
'அம்மா என்னதான் இருந்தாலும்......' சரோஜா இழுக்க
'என்னடி...' செண்பகம் அதட்டினாள்
'ஒண்ணுமில்லைம்மா...' என்று சொல்ல வந்ததை மென்று முழுங்கிவிட்டாள்.

'என்னங்க, அவனுக்கு போன் பண்ணி பார்க்க வேண்டியதுதான?' என்று அம்மா கேட்க
'போன் பண்ணி பாத்தாச்சு, கன்ட்ரி ஃப்ருட், என்ன பண்றானோ, இன்னிக்கு அவன் சீட்ட கிழிக்கணும்'

'அம்மா, ஐயா இப்போதான காபி குடிச்சாறு, இப்போ ஏதோ ஃப்ருட் ஜூஸ் கேக்கறாரா?'
'நீ உன் வேலைய பாரேன், யாரு என்ன பேசறாங்கன்னு கேகரதுல நேரத்த செலவழி'

அங்கும் இங்கும் நடந்த தாஸ், சோபாவில் அமர்ந்து டிவி-யை தட்டினார். சன் நியூஸ் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

'நேற்று பெய்த அடைமழையால், சென்னை வேளச்சேரி பகுதியில் அனைத்து வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.' இங்கு இருக்கும் மக்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாப்போம். கேமேராவை திருப்பினால், கணேசன் வெள்ளை சட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

'சார், நகருங்க சார். வேலைக்கு ஏற்கனவே நேரம் ஆச்சு. முதலாளி காத்துட்டு இருப்பார்'
'என்ன சார், உங்க வீடு தண்ணீல இருக்கு. வேலைக்கு போறேன்னு கெளம்புறீங்க'
'சார், நான் இருந்தாலும் தண்ணி லெவல் கொறஞ்சதும்தான் ஏதும் பண்ண முடியும். என் பொண்டாட்டி தண்ணி அள்ளி வெளிய ஊத்தினப்புறம் வந்து பாத்துக்கலாம்'
'இதோ இந்த தொழிலாளி, குடியே முழுகினாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது முதலாளி கொடுத்துவைத்தவர்'

இதை கேட்ட காளிதாஸ் அவரின் கண்ணில் நீர் வந்தது. நேற்று பெய்த மழையில், இன்று இவர் மனதில் ஈரம்.


Thursday, May 13, 2010

எனக்கு பிடித்த படங்கள் - தொடர் பதிவு

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அனன்யா அக்காவிற்கு எனது முதல் சலாம். பரிட்சை முடிந்து பலவிஷயங்களை பற்றி எழுதலாம் என்றால், எல்லா எண்ணங்களும் தலைக்கு மேலே போக, பவுன்சர் பார்த்த இந்திய அணி போல குதித்துக் கொண்டிருந்த எனக்கு லட்டு மாதிரி பந்து போட்டதால் அவருக்கு நன்றி. சிக்சர் அடிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்பயர் ரெடி???

அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...

வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.

திருவிளையாடல் (1965)
அருமையான படம், சிவாஜி கணேசன் நடிப்பும் இந்த படத்தில் வரும் இசையும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்லும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு திருவிளையாடலும் மிகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் இருக்கும். நான் சிறு வயதில் ஒரு முறையும், சிலநாட்களுக்கு முன்னாலும் ரசித்த படம். எவர் கிரீன் வரிசையில் அனைவரின் மனத்திலும் இருக்கும் படம். திருவாளர் நாகேஷின் நடிப்பு, படத்தின்சிறப்பாம்சம். படங்களின் வரிசையில் திருவிளையாடல் இன்னும் விளையாடுகிறது.சதிலீலாவதி (1995)
கமலஹாசன் காமெடி இரண்டையும் தனியே ரசித்தால் கூட ஆனந்தமாய் இருக்கும், இரண்டும் ஒன்று சேர்ந்து கூத்தடித்தால். அந்த வரிசையில் இந்த படம் ஒரு தனி முத்திரை பதித்த படம். குடும்பத்தில் சபலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, காமெடியாய் சொல்லும் படம். சிரிக்க ஒரு வாய்ப்பு. சதிலீலாவதி சிரிலீலவதி.முள்ளும் மலரும் (1978)
தலைவரின் நடிப்பு திறனை அற்புதமாக வெளிக்கொண்டுவருமாறு படங்கள் எடுப்பதில் மகேந்திரன் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் தலைவர் வாழ்ந்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, மெதுவாக நகரும் படம். மனதை கனக்க வைக்கும் காட்சிகள். முள்ளும் மலரும், வாசம்.பிதாமகன் (2003)
நட்பு என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். உலகமறியாமல் இடுகாட்டில் காலம் கழித்த முரட்டு விக்ரம், உலகை ஏமாற்றி திரியும் சாமர்த்திய சூர்யாவிடம் நட்புடன் இருப்பதும். அவர்கள் வாழ்வில் நடக்கும் சுவையான விஷயங்கள். சூர்யாவின்மரணத்திற்கு பிறகு, வில்லனை பழிவாங்குவதும் மனதை நெகிழவைக்கும். பிதாமகன், தலைமகன்.அன்பே சிவம் (2003)
உலகின் பெரிய இரண்டு விஷயங்கள், நாடுகளுக்குள் போரை மூட்டிய கருத்துகளை கமலஹாசன் மற்றும் மாதவன் பரிமாறிக்கொள்வதும். சுயநல மாதவன் இறுதியில் பல விஷயங்களை அந்த பயணத்தின்போது அறிந்து கொள்வதும், நாமும் அவர்களுடன் பயணிப்பதைப் போன்றதொரு எண்ணத்தை தரும். அங்கங்கே வந்து செல்லும் சிறு வேடங்களும் சரி, தங்களது பணியை உணர்ந்து நடித்திருப்பர். அன்பே சிவம், என்றும் முதன்மை...வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே நமக்கு சிவாஜி கணேசனின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும், அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். சுதந்திர போரட்டத்தை இப்படித்தான் பண்ணியிருப்பார்கள் என்று நமக்கு அறிவித்த படங்களுள் தலயாய படம். சாம்பார் இல்லாமல் விருந்தா, அதுபோல இந்த படம் இல்லாமல் சிறந்த பத்தா?
நாயகன் (1988)
மணிரத்னம், கமலஹாசன் இணைந்து பணியாற்றிய படம். டைம் பத்திரிகையில் "All time best" படங்களின் வரிசையில் இன்னும் இருக்கிறது. என் வரிசையில் இல்லாமல் போகுமா?வேதம் புதிது (1987)
சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி அன்று சொல்லிவிட்டு சென்றாலும், இன்றும் அது எல்லா இடத்திலும் உள்ளது. இதை மையமாக வைத்து பாரதிராஜா அவர்கள் இயக்கிய படம். சத்யராஜ் நடித்த படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம்.
தளபதி (1991)
கர்ணன், துரியோதனன் கதையா அடிப்படையாய் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம். நட்பு... நட்பிற்கு ஒரு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தும் அருமையாக விளக்கப்பட்ட படம். ரஜினி, மம்மூட்டி அவர்களின் நடிப்பு நவீன கால கர்ணன் துரியோதனனை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
மூன்றாம் பிறை (1982)
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.

இதில் இன்னொரு விஷயம், இந்த பத்து படங்களில் இசை ஒரு முக்கிய இடத்தைபிடித்துள்ளது. அதில் இசைஞானி ஏழு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதைப்பற்றி உங்களது கருத்துகளை எழுதுங்கள். அடுத்து இதை நான் தொடரஅழைப்பது
கார்கில் ஜெய்


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online