Friday, January 29, 2010

'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்

இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.



இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.





இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...




இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?


Friday, January 15, 2010

மலையாள படம் சீன் எடுப்பது எப்படி?


தலைப்பை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் ஓடிவந்த ரசிகப் பெருமக்களுக்கு, நான் சொல்லியிருப்பது ஒரு குடும்பப் படத்தை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது அனைத்தும் நான் பார்த்த மலையாள படங்களை வைத்து எழுதியது. இது சிரிக்க மட்டுமே, யாரையும் புண்படுத்த அல்ல.

தேவையான பொருட்கள்:
முற்றத்துடன் கூடிய வீடு - 1
ஹேண்டி கேம் - 1 (நீங்கள் சாதாரணமாக உபயோகிக்கும் டிஜிட்டல் கேமரா கூடப்போதும்)
மோகன்லால் - 1 (மம்மூட்டி இருந்தாலும் ஓகே)
சுகுமாரி - 1
தங்கை - தேவைக்கேற்ப்ப
வெளிச்சம் - முற்றம் இருந்தால் தேவையில்லை.

செய்முறை:
1. ஹேண்டி கேம் நல்ல முறையில் இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். சுகுமாரியை சமையற்கட்டில் உட்கார்ந்து பத்திரத்தை வெறித்துப் பார்க்க சொல்லவும். அங்கு சென்று அவரை ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும்.
2. தங்கைகளை படிக்குமாறு சொல்லி வேறு ஒரு அறையில் உட்கார வைக்கவும். அதையும் ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும். அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.
3. வெளியே இருந்து மம்மூட்டியயோ, மோகன் லாலையோ வரச்சொல்லவும். வந்ததும் அவர்கள் தூணருகே நின்று ஒரு முறை இருமச்செய்யவும், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு எந்த சத்தமானாலும் பரவாயில்லை. இதில் ஒரு ஐந்து நிமிடம்.
4. சுகுமாரியும், தங்கைகளும் வெளியே வந்தபின். நமது ஹீரோவை சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பேசச் சொல்லவும். (மற்றவர்களுக்கு வசனம் எழுத வேண்டும், மம்மூட்டியும், மோகன் லாலும் நிறைய படங்களில் இதுபோல் வந்துள்ளதால் வசனம் அவர்களுக்கு தேவையில்லை)
'ஞான் பரயும்ம்...ஈ லோகத்தில் எண்ட சஹோதரிகளுக்கு கல்யாணம் ஆயிட்டில்லா...' என்பது போன்ற வசனங்களை பேசிவிட்டு கண்ணில் நீர்விட்டு வெளியே செல்ல வேண்டும்.

கட் சொல்லிவிடவும்.... அவ்வளவுதான்... இதை பத்து படங்களுக்கு பரிமாறலாம்.

இதற்காகும் செலவுக் கணக்கைப் பாப்போம்:

1. உடை: ஹீரோ வேட்டி சட்டை அணிவதால் அவர்களது உடையே போதும். சுகுமாரிக்கும் ஹீரோ வீட்டில் இருந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துவரச் சொல்லி சேலையைப் போல் உடுத்த சொல்லிவிடலாம். அவரிடமே ஏதாவது பழைய ப்ளவுஸ் இருந்தால் போட்டு வர சொல்லலாம். தங்கைகளுக்கு அவர்கள் அணிந்து வரும் தாவணியும், பாவாடை சட்டையும் போதுமானது. ஆகவே உடை செலவு இல்லை.

2. போக்குவரத்து: சுகுமாரியை தெரிவு செய்ததே அவர் அதே ஊரில் இருப்பதால்தான். அவருக்காகும் டவுன் பஸ் செலவு ஒரு ஐந்து ரூபாய். ஹீரோவிடம், சார் வீடு மாறி நுழைஞ்சதா நினைச்சுக்குங்க என்று கூறி சமாளித்து அவரது காரிலேயே அனுப்பிவிடலாம். தங்கைகள் அதே ஊர்காரர்களாய் இருந்தால் அந்த செலவும் இல்லை.

3. இதர செலவுகள்: தயாரிப்பாளர் வீட்டில் இருந்தே சாயாவை பிளாஸ்கில் போட்டு கொண்டுவந்தால் அந்த செலவு குறையும். கூட வந்த ஆட்களையும் அதையே கொடுத்து சமாளிக்கலாம். ஆக செலவுகள் கம்மியாகும்.

இதனால் மலையாள படங்களின் சீன்களுக்கு ஆகும் செலவு சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை.

மலையாள படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்த நினைக்கும் நம்மவர்கள், அங்கிங்கு பேருந்து செல்வதை காண்பியுங்கள். அருமையான வளர்ச்சி... மலையாள சினிமாவை வளர்த்த பெருமை உங்களை சேரும்.

இதையும் மீறி வெளிநாட்டில்தான் பணத்தைக் கொட்டித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், நீங்கள் பாலிவுட்டில் முயற்சி செய்யவும்.
அடிதடி, பன்ச் டயலாக் போன்ற மசாலா சமாச்சாரங்கள் வேண்டும் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு முயற்சி செய்யவும்.
"அழகான" ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கன்னட படங்களுக்கு செல்லவும்.

கேபிள் சங்கர் அண்ணன் மாதிரி போடலாம்ன்னு பாத்தேன். ஏதோ என்னால முடிஞ்சுது....


Wednesday, January 13, 2010

அடக்கி வாசி....


முதல்ல கிறிஸ்துமஸ் வந்தது, அப்புறம் புது வருஷமும் வந்தது, கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நல்ல பாடல்களும் வந்தது. இப்போ பொங்கலும் வந்தாச்சு. இதெல்லாம் வந்தபோது நல்ல சந்தோஷமா இருந்தேன். இப்போ என் செமெஸ்டர்-உம் வந்தாச்சு. படிக்கற வேலைய பாக்கதான இங்க வந்தோம், சரி அதையும் கொஞ்சம் பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

கை, ப்ளாக் எழுது எழுது என்று துடிக்கிறது
ஆனால் ப்ரொபசர் கொடுத்த அசைன்மென்ட் அதை அடக்கு அடக்கு என்கிறது.

அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கிதான் வாசிக்க போறேன். மன்னிக்கவும் அடக்கி எழுத போறேன். வாசிப்புல எந்த அடக்கமும் இல்ல, ப்ளாக் வாசிப்பு நடந்துகொண்டே இருக்கும்.

ஏதோ அப்போ அப்போ நம்ம கடை பக்கம் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு போங்க. :)

இப்போதைக்கு எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Tuesday, January 05, 2010

வெளியுலகம்-2


பாகம்-1

கிழக்கே வானம் வெளுக்க ஆரமித்திருந்தது. எப்போது கந்தசாமி அண்ணன் வருவார் என்று காத்திருந்தேன். இரவு முழுவதும் தூங்கினால்தானே விழிப்பதற்கு.

மணி ஆறரை இருக்கும். கந்தசாமி அண்ணன் வந்து கதவைத் தட்டி திறந்துவிட்டார். கண்களில் நீர் துளிர்த்து இருந்தது. 'தம்பி.. வாப்பா..போகலாம்..' என்றார். வெளியே வருகையில் அவரிடம் சொன்னேன். 'அண்ணே... நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று கூறி அவரது ஒப்புதலுக்கு காத்திருந்தேன். தலையசைப்பிற்க்கு பின், எனது இரண்டு அறைக்கு அடுத்து இருந்த மார்த்தாண்டன் அறைக்குச் சென்றேன்.

'மார்த்தாண்டம் அண்ணே, ராஜேஷ் வந்துருக்கேன்...இன்னிக்கு எனக்கு ரிலீஸ்... வரேண்ணே'
கண்ணில் கண்ணீர் பெருக, கட்டியணைத்து 'குரு... போறேன்னு சொல்லுங்க குரு..நீங்க எங்கயோ இருக்க வேண்டியவன்..இந்த பாழாப்போன இடத்துக்கு வராத குரு' என்றார். எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
சுப்ரமணி, 'குரு.. போ குரு.. இந்த வெளியுலகம் உனக்காக காத்திருக்கு.. நானும் வரேன்.. எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு குரு' என்றான் நட்புடன்.
மனோஜ், அறைக்குளிருந்தவாறே, கண்ணீரை அடக்க முடியாமல், 'நீ அப்படியே போயிடு குரு. என்னப்பாக்காத!!!' தூக்குதண்டனைக் கைதி. என்னை எப்போது மறுபடியும் பார்ப்பான். தெரியவில்லை.
வெளியே இருந்து உள்ளே வருகையில் எனக்கு யாருமில்லை, இப்போது நான்கு ஜீவன்கள் எனக்காக இருக்கின்றன, அழுகின்றன. வாழ்கையில் நானும் வெற்றிபெற்றுள்ளேன்.

கந்தசாமி அண்ணன் கையெழுத்து போடசொன்ன இடங்களில் கையெழுத்தைப் போட்டேன்.
'தம்பி, இத நீ போன வருஷமே பண்ணிருக்கணும். நெறைய முயற்சி பண்ணுனேன். குண்டுவெச்சவனுக்கு ரிலீஸ் குடுத்தானுங்க, உனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க. எப்படியோ இப் நடந்துச்சே. சந்தோஷம். '
'பரவால்ல அண்ணே'
'போ தம்பி, வீட்டுக்கு வா அடிக்கடி. இந்த நம்ம அட்ரஸ். எப்பனாலும் வா' பாசத்துடன் அவர் கூறியது, என்னையறியாமல் கண்ணீரை வெளியேற்றியது.

வெளியே காலெடுத்து வைத்தேன் புது லட்சியத்துடன், யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இதுவரையில் வராதவர்களா, இப்போது வந்திருப்பார்கள். எவரும் இல்லை. உள்ளே வேலைப் பார்த்ததில் கொடுத்த நான்காயிரம் ரூபாய் எனது பாக்கெட்டில் இருந்தது. எங்கே செல்லலாம், என்னதான் கோவம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வார்கள், என்று கந்தசாமி அண்ணன் சொன்னது எனக்கு நம்பிக்கையளித்தது.

வண்டியேறினேன் ஊருக்கு, சிறைக் காலங்களை அசைபோட்டபடி பயணித்தேன். முன்னிரவு தூங்காத காரணத்தால், தூங்கியும் போனேன்.

என் பேருந்து நிறுத்தம், என் தெரு, என் வீடு. சென்று கதவைத் தட்டினேன், ஒரு குல்லா போட்ட சேட்டு வந்தார்.
'நிம்பிள்க்கி.. யார் வேணும்...'
'Mr. கோவிந்தராஜன், இங்க இருந்தாரே'
'நம்பிள்க்கி தெரியாது... நம்பிள் இப்போதான் வந்தாங்கோ' என்று கூறி கதவை சாத்தினார்.

பக்கத்து வீடு கோமளம் ஆன்ட்டி, தாடியுடன் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'அவங்க மூணு வருஷம் முன்னாடியே மாத்தலாகிப் போயிட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியாது' என்று முன்னாட்களில் வாங்கிய காப்பி பொடிக்கும், சக்கரைக்கும் விசுவாசமாய் இருந்தார். இதேதான் எதிர் வீட்டு ஆன்ட்டியும் அதே கதைதான். முக்குக் கடை பாய் கூட தெரியாது என்று சொன்னது எனக்கு ஆச்சிர்யமாய் இருந்தது. மிட்டாய், பப்பிள் கம் மற்றும் ஊர்க் கதை என பல விஷயங்களை பகிர்ந்த எனது நண்பர் ஆச்சே அவர். சிறைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அனுபவம் புதியதாய் இருந்தது. இங்கு எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்றம் கசந்தது.

திலக், அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று கூட தெரியாது. முயற்சி செய்து பாப்போம், என்னைப் பற்றி அவனுக்கு தெரியுமே. கல்லூரிக்கு சென்றால் அவனது முகவரியை கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் எனது பைகளை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி பயணமானேன். கல்லூரி, முற்றிலும் புதிய தோற்றம். எல்லாமே மாறி இருந்தது. ஆபிஸ் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முன்பு நாக்கு வறண்டதால், டீ குடிக்க கண்டேன் சென்றேன். அவளை நான் சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'நீங்க ஊர்வசிதான?'
'நீங்க.... ராகுல்...'
'ராஜேஷ்'-திருத்தினேன்
'ஓ.. சாரி.. ரொம்ப நாள் ஆச்சில்ல அதான்'
'பரவால்ல.. இருக்கடும்ங்க. எப்படி இருக்கீங்க?'
'நான் நல்ல இருக்கேன்... நீங்க?'
'நான் இப்போதாங்க வந்தேன். உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். திலக் எங்க இருக்கானு தெரியுமா?'
'அவன் அமெரிக்கா-ல அவங்க பிசினஸ் பாத்துட்டு இருக்கான்...'
'அப்போ நீங்க?'
'நான் இங்க லெக்சரர். என் வீட்டுக்காரர் இந்த ஊர்ல வேல பார்க்கறார். நானும் இங்க சேர்ந்துட்டேன்'- அவர்க பிரிந்துவிட்டனர் என்பதை நானே புரிந்துகொண்டேன். இவளிடம் என்ன கேட்பது. திலக், ஆறு வருடத்தில் என்னை பார்க்க வராதவன். அவனை நம்பி என்ன பிரயோசனம்.
'நன்றிங்க, நான் வரேன்'
'ஏதோ கேக்க வந்தீங்க. காபி, டீ ஏதாவது சாப்பிட்டு போறீங்களா?'
'இல்லேங்க வேண்டாம்.'-என்று கூறி நகர்ந்தேன்.

சொந்தம், விட்டுச் சென்றது. நட்பு, பறந்து சென்றது. இனி என்னை நானே நம்பவேண்டியதுதான். படிப்பு இருக்கிறது என் கையில், யாரை நம்பவேண்டும் நான். ஏதாவது பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜெய் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். விண்ணப்பித்தேன், அழைப்பும் வந்தது.

'வாங்க ராஜேஷ், உக்காருங்க'
'நன்றி சார்'
'நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா? நீங்க எங்க படிச்சீங்க?'
'அனுபவம் இல்ல சார். நான் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல படிச்சேன்'
'ஓ.. பணக்கஷ்டமா?'
'இல்ல சார்... நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்'

அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அவர், தனது பேச்சை மாற்றினார். 'சாரி ராஜேஷ், இப்போ அறிவியல் ஆசிரியர்களுக்கு தேவை இல்லை. நீங்கள் அடுத்த முறை முயற்சியுங்கள்' என்று எனது ஃபைலை மூடினார்.

என்ன செய்ததால் இந்த உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். செய்யாத தவறுக்கு, சிறையில் இருந்தேன். என்னால் முடிந்தவரை நல்லவனாய் இருந்தேன். என்ன தவறு செய்தேன். சிறையிலிருந்த எனது சகாக்கள் அளவுகூட வெளியுலகத்தில் அன்பு இல்லையா. நான் இப்போதுதான் சிறையில் இருப்பதாய் உணர்கிறேன். என்ன செய்ய இப்போது. மீண்டும் வெளியே முயற்சி செய்யலாம், ஆனால், இந்த பாழாய்ப் போன வெளியுலகத்தில் வாழ எனக்குப் பிடிக்கவில்லையே.
எல்லாரும் எல்லாரிடமும், எதையாவது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனரே. கந்தசாமி அண்ணனிடம் சென்று சிறையில் எதவாது வேலை இருந்தால் கேட்போமே. 'ஒன்றே செய் அதுவும் நன்றே செய், அதுவும் இன்றே செய்', அண்ணனை தேடித் போனேன் அவர் கொடுத்த விலாசத்திற்கு, அவர் அங்கு இல்லை. கண்டிப்பாக அவர் சிறையில்தான் இருப்பார். சென்று பார்த்துவிடுவோம்.

வெளியிலிருந்த காவலாளியிடம், 'அண்ணே, கந்தசாமி அண்ணனே பாக்கணும்.'
'பர்மிஷன் இல்லாம பாக்கமுடியாதுப்பா'
'அண்ணே, கொஞ்சம் அவசரம். வேல விஷயமா பாக்கணும். யார்க்கிட்ட பர்மிஷன் வாங்கணும்'
'அட அதுக்கெல்லாம் பெரிய எடத்துக்கு போகணும்ப்பா. இடத்த காலி பண்ணு'
'கொஞ்ச நேரம்ன்னே. அந்த பர்மிஷன் வாங்க இப்போ டைம் இல்லன்ன. கொஞ்சம் தயை பண்ணுங்க' - கெஞ்சினேன்
'டேய், உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாது. சோறுதான திங்கற?'-போலிஸ் போலவே எகிற ஆரமித்தார்.
'அவர இப்போ எப்படி பாக்கனும்னு எனக்கு தெரியும்'
'டேய், என்ன ரொம்ப தொகுருற, அடிபட்டு சாகாத நாயே. எப்படி பாக்கரன்னு நானும் பாக்கறேன்.'
போலிசும் என்னை மதிப்பதில்லை.

ஐந்து நிமிடம் கழித்து.....

இரண்டு போலிஸ்காரர்கள் என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தேன், அந்த காவலாளி மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார், ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அதோ, கந்தசாமி அண்ணன்....



Monday, January 04, 2010

வெளியுலகம்-1


அந்த கிழக்கு மேற்கை பார்த்த அந்த சிறிய அறையில், தற்போது வெயில் இல்லை. காலையிலும், மாலையிலும் வணக்கம் சொல்லிச்செல்ல வரும் கதிரவன், தனது வேலையை நேர்க்கோட்டில் செய்துகொண்டிருந்தான். இந்த ஒளியிருந்தும், இல்லாத நேரத்தில் புத்தகம் படிப்பது ஒரு தனிசுகம். கண்டிப்பாக மணி பனிரெண்டை தாண்டியிருக்க வேண்டும். அது சோத்துக்கட்சியின் தட்டு தட்டும் கூடம் வெளியே வந்துவிட்டதே.

விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
'டிங்...டிங்...டிங்.. ராஜேஷ் தம்பி..சாப்பிட வாப்பா..இங்க நீ சாப்பிட போற கடைசி மதியசோறு.. உனக்கு நினைவிருக்கில்ல நாளைக்கு உனக்கு ரிலீஸ் தம்பி..' அவர் சொல்லிச்சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இருந்தாலும் அவரது வருத்தம் தரித்த வரிகள் இவன் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனது துன்பத்தில் கை கொடுத்த ஒரே ஜீவன் ஜைளீர் கந்தசாமி அண்ணன்தான். புத்தகங்கள், படிக்க உதவியது என்று சிறையில் இவர்தான் அவனதுதந்தை.

ராஜேஷ் இங்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல குடும்பத்தில் பிறந்த பையன். அப்பா கவர்மென்ட் ஆபிசில் குமாஸ்தா. நன்கு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குள்ளும் இருந்தது. சில விஷயங்களை அவர் அவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்.

நான் ராஜேஷ், வயது 17. பனிரெண்டாம் வகுப்பில் ஏதோ அதிர்ஷ்டவசமாக நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் இன்று இந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். சென்னை, புதிய நண்பர்கள், பெண்கள். நான் படித்த பள்ளிகளில் எல்லாம் பசங்கதான். இன்று புதியதாய் பெண்களை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்தது. காரிலே வந்தே இறங்கி அங்கே இங்கே என்று வேடிக்கைப் பார்த்து நின்றிருந்தேன். சாமான்களை எடுத்து வைக்குமாறு அப்பா அதட்டியதில், 'எடுத்து வெச்சுட்டுதான் இருக்கேன், சும்மா கத்தாதீங்க!!!' என்று கத்தினேன். எனது கோவம் உலகறிந்தது. எங்கு போனாலும் கோவப்படுவேன், எனது பள்ளியில் எனக்கு மதிப்பெண் போடாத வாத்தியாரை திட்டியதில் பத்து நாள் சஸ்பென்ஷன் வாங்கினேன். நான் கத்தி அடங்கியபின் எனது அப்பா அம்மா, 'புது இடம், புது மக்கள் கோவப்பட்டு, ராகிங் அது இது ன்னு எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்கோ கண்ணு' என்று சொல்லிச் சென்றனர். 'சரி கிளம்புங்க, கப்பித்தனமா பேசிகிட்டு ' என்று மனதிற்குள் அவர்களை வைதேன். அவழ்த்து விட்ட கழுதை இல்லையா..

திலக், எனது ரூமில் இருந்த நண்பன். அவன் ஊரு கோயமுத்தூர். ஊட்டியில் படித்தானாம். ஆங்கிலத்தில் சும்மா வெளுத்துக்கட்டுவான். அவன்கூட இருந்தால் ஆங்கிலம் பேசக் கற்றுகொள்ளலாம் என்று எனக்கு எண்ணம். எங்கேயும் சேர்ந்துதான் சுத்துவோம். கான்டீன், கேர்ள்ஸ் ஹாஸ்டல் பின்னால் இருக்கும் ரோடு என சுற்றுவோம். அப்போதுதான் ஆரமித்தது வினை. ஒரு நாள் நாங்கள் கேர்ள்ஸ் விடுதி பக்கம் போகையிலே பிடித்தான் வெற்றி. எங்கள் சீனியர். பகலிலேயே குடிப்பான் போல, கண்கள் சிவந்து கேப்டன் கண்கள் போல இருந்தது. அவன் MLA பையன். என்னைவிட திலக் கொஞ்சம் ஸ்மார்டாக இருப்பான். அவனை வம்பிற்க்கிழுப்பதே அந்த சிவந்த கண்ணனின் வேலை. கோவம் பொத்துக்கொண்டு வந்தாலும், பல்லைக் கடித்து அடக்கிக் கொள்வேன்.

ஊர்வசி, எங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு தேவதை. பதிவேட்டில் அடுத்தடுத்த பெயராய் இருப்பதால் திலக் பென்சில் பேனா என்று வாங்கி ஓரிரு மாதத்தில் அவளை மடக்கிவிட்டான். அதெப்படி இவனுங்களுக்கு மட்டும் அப்படி அமையுதோ. இது ஒருபுறமிருக்க, ஒரு அழகான பெண் ஜூனியராய் வந்துவிட்டால் இந்த சீனியர் பசங்க விடும் ஜொள்ளை சொல்லிமாளாது. அப்படி அவளைப்பார்த்து வெற்றியும் ஜொள்ளு விட்டான். இந்த விஷயம் தெரிந்த திலக் அவளிடம் வகுப்பறையில் பேசும்போதெல்லாம், வெற்றி வருகிறானா என்று பார்த்து சொல்லும் வேலை எனக்கு. இதை கேவலமாக பல நண்பர்கள் ஓட்டி தள்ளுவார்கள். 'ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்... எனக்கொரு காதல் அமையாதா' என்று நம்பிக்கையுடன் அவனுக்கு உதவி செய்தேன். இவனிடமிருந்து அங்கு சிட் பாஸ் செய்வதும், அங்கிருந்து இங்கு பதில் வருவதுமாய் அவர்களது காதல், சாரி நட்பு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.

இப்படி ஒருநாள் நான் வெளியே நின்று காவல் காக்கையிலே வந்தான் அந்த கருத்தமச்சான் வெற்றி.
'டேய்.. எங்கடா அந்த ****'
'அண்ணே... யாரு..'
'அதாண்டா உன் கூடயே சுத்துவானே...அந்த நாதாரி...' சத்தம் கேட்டு வெளிய வந்தான் திலக்.
'டேய்.. இன்னாடா அவ பின்னாடி சுத்துரியாமே... அவ உன் அண்ணிடா டோமரு...' என்று கத்தினான்.. கூட்டம் கூட ஆரமித்தது.
'நீங்க வீணா எங்க விஷயத்துல தலையிடுறீங்க..நல்லதில்ல' திலக் எதிர்த்து பேசினான்...
'என்னடா தல வாலுன்னு பேசற... பேண்ட்ட கழட்டுரா' என்றான்.. இப்போது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன...
'கழட்டுரா நாயே'
'இங்க வேணாம் அண்ணே.. நைட் உங்க ரூம்க்கு நானே வந்து கழட்டுறேன். பொண்ணுங்கல்லாம் இருக்காங்க' திலக் கெஞ்சினான்.
'நைட் நீ என்னடா ரூம்க்கு வரது... அவளையே என் ரூம்க்கு வர வைப்பேன்டா.. இப்போ கழடுரா இல்ல என் ஆளுங்க உன் பேண்ட்ட அவுப்பங்க' என்றான் திமிராய்...
எனக்கு வந்த கோவத்தில்,'டாய்...' என்று கையை ஓங்கி முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தேன். சுவற்றில் உட்கார்ந்திருந்த அவன், பின்னால் சாய தலைக் குப்புற கீழே விழுந்தான். நான்கு மாடி அவன் சென்றதை பார்த்தேன், ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. க்ஷண நேரத்தில் என்னை எல்லாரும் கொலைகாரனைப்போல் பார்க்க. அவன் ஆட்கள் MLA-விற்கு அலைபேச. நாள் கொலைகாரானாக ஆகிவிட்டேன். ஆக்கப்பட்டேன்.

அதற்குபிறகு, நான் சுயநினைவிற்கு வருவதற்குள் போலீஸ் அங்கு இருந்தனர், கல்லூரியிலிருந்து என்னை விளக்கியிருந்தனர். அப்பா, அம்மா வந்துகொண்டிருந்தனர். MLA அவரது பிள்ளை மீது படுத்து கதறி, என்னை சும்மாவிடப்போவதில்லை என்று சூளுரைத்துக் கொண்டிருந்தார். என்ன அருகில் வரக்கூட என் கல்லூரி, மன்னிக்கவும் எனது முன்னாள் கல்லூரி நண்பர்கள் தயங்கினர். திலக் உட்பட.

அப்பா அம்மா அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்ததும், அவர்களும் எனது கோவத்தை சாக்காய் வைத்து நான்தான் செய்திருப்பேன் என்று நம்பினார். அவர்கள் என்ன செய்வார்கள், சுற்றி இருக்கும் சாட்சியங்கள் எனக்கு எதிராய் அமைந்துவிட்டதே.
'ஏண்டா, எத்தன தடவ சொல்லிட்டு போனோம்...இப்படி பண்ணிடையே டா...' அம்மா கண்ணீருடன் கத்தினார்...
'அம்மா... இல்லம்மா...நான் இல்லம்மா'.. அவர்களது சத்தத்தில் எனது சத்தம் அமிழ்ந்துபோனது.
'இனிமேல் ஊர்க்காரங்க மூஞ்சில எப்படிடா முழிப்பேன், நம்ம குடும்ப மானத்த வாங்கிட்டயேடா.' அப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
'இனிமேல் என் மூஞ்சிலையே முழிக்காதடா... வாடி போகலாம்' அப்பா அம்மாவையும் கூடிச்சென்றார்.... வருவார்.. என்று நம்பினேன்... நம்புகிறேன் இன்றுவரை...

பிறகு வழக்கு கோர்ட் அங்கு இங்கு என்று சென்று எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வந்தது. எனக்கென அழுக ஒரு கண்கள் கூட இல்லை, என் கண்கள் கூட இல்லை.

சிறை, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூடாரம் என்று எண்ணிய நான், என்னைப்போலவும் சிலர் இங்கு இருப்பர்களோ என்று எண்ணத்தொடங்கிய இடம். வந்த ஒரு மூன்று மாதங்கள் யாருடனும் தொடர்பற்று இருந்தேன். சிலர் கந்தசாமி அண்ணன், உறவுகளற்ற எனக்கு ஒரு உறவை இருந்தவர், அவருடன் மட்டும்தான் நான் பேசுவேன். எனது கதையைக் கேட்ட அவர், ஏதாவது படிக்கிறயா என்று கேட்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவேரா போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். எனக்காக மேலிடத்தில் போராடி சென்னை பல்கலைகழகத்தின் அஞ்சல் வழி முறையில் இளங்கலை அறிவியல் பட்டம் படிக்க உதவினார். ஓரிரு மாதங்கள் கழித்து, என்னிடம் வந்த கந்தசாமி அண்ணன். 'தம்பி, இங்க இருக்கறவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவங்கள குத்தவாளியா ஆக்கிருச்சு. அவங்களுக்கும் படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. நீ ஏன் இவங்களுக்கு சும்மா தெரிஞ்சதை சொல்லித்தரக்கூடாது? உனக்கு எல்லா புத்தகங்களும் நான் வாங்கித்தரேன்' எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த பெரியவரின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

எனது வகுப்பறை மாணவர்கள்,

மார்த்தாண்டம், தன் மனைவியை கொன்றுவிட்டு வந்தவர். எதனால் என்று நான் கேட்கவில்லை. ஆயுள்தண்டனை கைதி.
சுப்ரமணி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து வருபவன். வயிற்றுப் பிழைப்புக்காக.
மனோஜ், கூலி வேலை செய்து வந்தவன், தன் முதலாளியை அடித்துவிட்டு வந்திருந்தான்.

இவர்களுக்கு அ, ஆ முதல் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித்தந்து வந்தேன். அவர்களும் என்னை செல்லமாக குரு என்று அழைப்பார்கள். மார்க்ஸ் மீது ஏற்ப்பட்ட பற்றினால் நானும் தாடி வளர்க்க ஆரமித்தேன். இங்கும் அரசியல் மற்றும் ரவுடித்தனம் செய்து வந்த சிலர் இருந்தனர். அவர்கள் இல்லாத பக்கமாய் பார்த்து கந்தசாமி அண்ணன் எங்களுக்கு தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டுவந்தேன். மூன்று வருடங்கள் ஓடின. வகுப்பில் மாணவர்கள் அவ்வப்போது கூடியும் குறைந்தும் இருந்தனர். நானும் நல்ல மதிப்பெண் எடுத்து இளங்கலை பட்டம் முடித்துவிட்டேன். மீண்டும் படிக்க இருந்த ஆர்வத்தால் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது.

புத்தகங்கள், எனது உற்ற நண்பன். எனது அறை முழுவதும் புத்தகங்கள். வேலை நேரம், பாட நேரம் தவிர மீதிநேரம் புத்தகத்துடன் கழிந்தது. சுஜாதா, பாலகுமாரன், கர்ட் வன்னகேர்ட், அயன் ராண்ட், கப்ரியல் க்ராசியா மார்குவேஸ் போன்ற பல எழுத்தார்கள் என்னுடன் அந்த சிறை அறையில் வாழ்ந்தனர். நானும் சில கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத ஆரமித்தேன். இப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடின. முதுகலையும் முடித்துவிட்டேன். வெளியே சென்றால் நல்ல வேலை கிடைக்குமென கந்தசாமி அண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அப்படி சொல்லும்போதெல்லாம், அவரது கண்ணில் நீர் துளிர்க்கும். நான் அவரைவிட்டு செல்கிறேன் என்ற காரணத்தால்.

இந்த ஆறு வருடத்தில் என்னை பார்க்க யாருமே வரவில்லை, ஒரு வேளை நான் நன்கு படித்து பக்குவமடைந்தது தெரிந்திருக்காது. வெளியே சென்று சொல்லுவோம்வெல்லுவோம்.

நாளை நான் விடுதலை ஆகிறேன். யார் வருவார்கள் என்னை வரவேற்க? அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனக்கு விடுதலை என்று. இந்த நினைவுடன் கண்ணயர்கிறேன். நாளை பாப்போம்.

(தொடரும்)




Friday, January 01, 2010

கலீஜ் கவிதைகள்


இவை எண்ட்டர் கவிதையின் உட்பிரிவில் வகைப்படுத்தப்படும் கவிதைகள். கலீஜ் என்னும் சிறந்த வகை கவிதைகள், மொக்கைகாளாய்ப் பார்ப்பவர்கள் மொக்காழ்வார் எழுதிய சிறிய புராணத்தை புரட்டிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காதலி தேவை:
முள்ளை முள்ளா லெடுக்க
முள் தைக்கும்
வார்த்தை பேசும் மற்றொரு
காதலி தேவை!!!!

பைக் காதல்:
அவளுக்காக பைக் வாங்க
நான் பஸ் ஏறினேன்
முன்சென்ற நண்பனின் பைக்கில்
அவள் ஏறினாள்!!!

- கவிஞர் ஜிகர்தண்டா


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online