Tuesday, January 05, 2010

வெளியுலகம்-2


பாகம்-1

கிழக்கே வானம் வெளுக்க ஆரமித்திருந்தது. எப்போது கந்தசாமி அண்ணன் வருவார் என்று காத்திருந்தேன். இரவு முழுவதும் தூங்கினால்தானே விழிப்பதற்கு.

மணி ஆறரை இருக்கும். கந்தசாமி அண்ணன் வந்து கதவைத் தட்டி திறந்துவிட்டார். கண்களில் நீர் துளிர்த்து இருந்தது. 'தம்பி.. வாப்பா..போகலாம்..' என்றார். வெளியே வருகையில் அவரிடம் சொன்னேன். 'அண்ணே... நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று கூறி அவரது ஒப்புதலுக்கு காத்திருந்தேன். தலையசைப்பிற்க்கு பின், எனது இரண்டு அறைக்கு அடுத்து இருந்த மார்த்தாண்டன் அறைக்குச் சென்றேன்.

'மார்த்தாண்டம் அண்ணே, ராஜேஷ் வந்துருக்கேன்...இன்னிக்கு எனக்கு ரிலீஸ்... வரேண்ணே'
கண்ணில் கண்ணீர் பெருக, கட்டியணைத்து 'குரு... போறேன்னு சொல்லுங்க குரு..நீங்க எங்கயோ இருக்க வேண்டியவன்..இந்த பாழாப்போன இடத்துக்கு வராத குரு' என்றார். எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
சுப்ரமணி, 'குரு.. போ குரு.. இந்த வெளியுலகம் உனக்காக காத்திருக்கு.. நானும் வரேன்.. எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு குரு' என்றான் நட்புடன்.
மனோஜ், அறைக்குளிருந்தவாறே, கண்ணீரை அடக்க முடியாமல், 'நீ அப்படியே போயிடு குரு. என்னப்பாக்காத!!!' தூக்குதண்டனைக் கைதி. என்னை எப்போது மறுபடியும் பார்ப்பான். தெரியவில்லை.
வெளியே இருந்து உள்ளே வருகையில் எனக்கு யாருமில்லை, இப்போது நான்கு ஜீவன்கள் எனக்காக இருக்கின்றன, அழுகின்றன. வாழ்கையில் நானும் வெற்றிபெற்றுள்ளேன்.

கந்தசாமி அண்ணன் கையெழுத்து போடசொன்ன இடங்களில் கையெழுத்தைப் போட்டேன்.
'தம்பி, இத நீ போன வருஷமே பண்ணிருக்கணும். நெறைய முயற்சி பண்ணுனேன். குண்டுவெச்சவனுக்கு ரிலீஸ் குடுத்தானுங்க, உனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க. எப்படியோ இப் நடந்துச்சே. சந்தோஷம். '
'பரவால்ல அண்ணே'
'போ தம்பி, வீட்டுக்கு வா அடிக்கடி. இந்த நம்ம அட்ரஸ். எப்பனாலும் வா' பாசத்துடன் அவர் கூறியது, என்னையறியாமல் கண்ணீரை வெளியேற்றியது.

வெளியே காலெடுத்து வைத்தேன் புது லட்சியத்துடன், யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இதுவரையில் வராதவர்களா, இப்போது வந்திருப்பார்கள். எவரும் இல்லை. உள்ளே வேலைப் பார்த்ததில் கொடுத்த நான்காயிரம் ரூபாய் எனது பாக்கெட்டில் இருந்தது. எங்கே செல்லலாம், என்னதான் கோவம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வார்கள், என்று கந்தசாமி அண்ணன் சொன்னது எனக்கு நம்பிக்கையளித்தது.

வண்டியேறினேன் ஊருக்கு, சிறைக் காலங்களை அசைபோட்டபடி பயணித்தேன். முன்னிரவு தூங்காத காரணத்தால், தூங்கியும் போனேன்.

என் பேருந்து நிறுத்தம், என் தெரு, என் வீடு. சென்று கதவைத் தட்டினேன், ஒரு குல்லா போட்ட சேட்டு வந்தார்.
'நிம்பிள்க்கி.. யார் வேணும்...'
'Mr. கோவிந்தராஜன், இங்க இருந்தாரே'
'நம்பிள்க்கி தெரியாது... நம்பிள் இப்போதான் வந்தாங்கோ' என்று கூறி கதவை சாத்தினார்.

பக்கத்து வீடு கோமளம் ஆன்ட்டி, தாடியுடன் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'அவங்க மூணு வருஷம் முன்னாடியே மாத்தலாகிப் போயிட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியாது' என்று முன்னாட்களில் வாங்கிய காப்பி பொடிக்கும், சக்கரைக்கும் விசுவாசமாய் இருந்தார். இதேதான் எதிர் வீட்டு ஆன்ட்டியும் அதே கதைதான். முக்குக் கடை பாய் கூட தெரியாது என்று சொன்னது எனக்கு ஆச்சிர்யமாய் இருந்தது. மிட்டாய், பப்பிள் கம் மற்றும் ஊர்க் கதை என பல விஷயங்களை பகிர்ந்த எனது நண்பர் ஆச்சே அவர். சிறைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அனுபவம் புதியதாய் இருந்தது. இங்கு எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்றம் கசந்தது.

திலக், அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று கூட தெரியாது. முயற்சி செய்து பாப்போம், என்னைப் பற்றி அவனுக்கு தெரியுமே. கல்லூரிக்கு சென்றால் அவனது முகவரியை கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் எனது பைகளை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி பயணமானேன். கல்லூரி, முற்றிலும் புதிய தோற்றம். எல்லாமே மாறி இருந்தது. ஆபிஸ் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முன்பு நாக்கு வறண்டதால், டீ குடிக்க கண்டேன் சென்றேன். அவளை நான் சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'நீங்க ஊர்வசிதான?'
'நீங்க.... ராகுல்...'
'ராஜேஷ்'-திருத்தினேன்
'ஓ.. சாரி.. ரொம்ப நாள் ஆச்சில்ல அதான்'
'பரவால்ல.. இருக்கடும்ங்க. எப்படி இருக்கீங்க?'
'நான் நல்ல இருக்கேன்... நீங்க?'
'நான் இப்போதாங்க வந்தேன். உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். திலக் எங்க இருக்கானு தெரியுமா?'
'அவன் அமெரிக்கா-ல அவங்க பிசினஸ் பாத்துட்டு இருக்கான்...'
'அப்போ நீங்க?'
'நான் இங்க லெக்சரர். என் வீட்டுக்காரர் இந்த ஊர்ல வேல பார்க்கறார். நானும் இங்க சேர்ந்துட்டேன்'- அவர்க பிரிந்துவிட்டனர் என்பதை நானே புரிந்துகொண்டேன். இவளிடம் என்ன கேட்பது. திலக், ஆறு வருடத்தில் என்னை பார்க்க வராதவன். அவனை நம்பி என்ன பிரயோசனம்.
'நன்றிங்க, நான் வரேன்'
'ஏதோ கேக்க வந்தீங்க. காபி, டீ ஏதாவது சாப்பிட்டு போறீங்களா?'
'இல்லேங்க வேண்டாம்.'-என்று கூறி நகர்ந்தேன்.

சொந்தம், விட்டுச் சென்றது. நட்பு, பறந்து சென்றது. இனி என்னை நானே நம்பவேண்டியதுதான். படிப்பு இருக்கிறது என் கையில், யாரை நம்பவேண்டும் நான். ஏதாவது பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜெய் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். விண்ணப்பித்தேன், அழைப்பும் வந்தது.

'வாங்க ராஜேஷ், உக்காருங்க'
'நன்றி சார்'
'நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா? நீங்க எங்க படிச்சீங்க?'
'அனுபவம் இல்ல சார். நான் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல படிச்சேன்'
'ஓ.. பணக்கஷ்டமா?'
'இல்ல சார்... நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்'

அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அவர், தனது பேச்சை மாற்றினார். 'சாரி ராஜேஷ், இப்போ அறிவியல் ஆசிரியர்களுக்கு தேவை இல்லை. நீங்கள் அடுத்த முறை முயற்சியுங்கள்' என்று எனது ஃபைலை மூடினார்.

என்ன செய்ததால் இந்த உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். செய்யாத தவறுக்கு, சிறையில் இருந்தேன். என்னால் முடிந்தவரை நல்லவனாய் இருந்தேன். என்ன தவறு செய்தேன். சிறையிலிருந்த எனது சகாக்கள் அளவுகூட வெளியுலகத்தில் அன்பு இல்லையா. நான் இப்போதுதான் சிறையில் இருப்பதாய் உணர்கிறேன். என்ன செய்ய இப்போது. மீண்டும் வெளியே முயற்சி செய்யலாம், ஆனால், இந்த பாழாய்ப் போன வெளியுலகத்தில் வாழ எனக்குப் பிடிக்கவில்லையே.
எல்லாரும் எல்லாரிடமும், எதையாவது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனரே. கந்தசாமி அண்ணனிடம் சென்று சிறையில் எதவாது வேலை இருந்தால் கேட்போமே. 'ஒன்றே செய் அதுவும் நன்றே செய், அதுவும் இன்றே செய்', அண்ணனை தேடித் போனேன் அவர் கொடுத்த விலாசத்திற்கு, அவர் அங்கு இல்லை. கண்டிப்பாக அவர் சிறையில்தான் இருப்பார். சென்று பார்த்துவிடுவோம்.

வெளியிலிருந்த காவலாளியிடம், 'அண்ணே, கந்தசாமி அண்ணனே பாக்கணும்.'
'பர்மிஷன் இல்லாம பாக்கமுடியாதுப்பா'
'அண்ணே, கொஞ்சம் அவசரம். வேல விஷயமா பாக்கணும். யார்க்கிட்ட பர்மிஷன் வாங்கணும்'
'அட அதுக்கெல்லாம் பெரிய எடத்துக்கு போகணும்ப்பா. இடத்த காலி பண்ணு'
'கொஞ்ச நேரம்ன்னே. அந்த பர்மிஷன் வாங்க இப்போ டைம் இல்லன்ன. கொஞ்சம் தயை பண்ணுங்க' - கெஞ்சினேன்
'டேய், உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாது. சோறுதான திங்கற?'-போலிஸ் போலவே எகிற ஆரமித்தார்.
'அவர இப்போ எப்படி பாக்கனும்னு எனக்கு தெரியும்'
'டேய், என்ன ரொம்ப தொகுருற, அடிபட்டு சாகாத நாயே. எப்படி பாக்கரன்னு நானும் பாக்கறேன்.'
போலிசும் என்னை மதிப்பதில்லை.

ஐந்து நிமிடம் கழித்து.....

இரண்டு போலிஸ்காரர்கள் என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தேன், அந்த காவலாளி மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார், ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அதோ, கந்தசாமி அண்ணன்....



7 Comments:

Paleo God said...

நல்லா இருக்கு ஜிகர்... (எப்படி இவ்ளோ பெரிசா எழுதமுடியது ::(( ) கலக்குங்க :)

ஜிகர்தண்டா Karthik said...

@ பலா பட்டறை
செமஸ்டர் லீவு-ல சும்மா உக்காந்திருக்கேன்.
அதோட விளைவுதான். வேலை வெட்டி இல்லை :)

vasu balaji said...

கந்தசாமி அண்ணன் அந்த போலீஸ்காரன தாஜா பண்ணலின்னா டூட்டில இருந்த போலீஸ்காரன அடிச்சது கேசாயிரும்டி. பார்க்கலாம். எப்புடி வெளிய வரான்னு:))

கார்க்கிபவா said...

//பலா பட்டறை said...
நல்லா இருக்கு ஜிகர்... (எப்படி இவ்ளோ பெரிசா எழுதமுடியது ::(( ) கலக்குங்க ://

பதிவை படிக்காமத்தான் பின்னூட்டம் போடறேன்னு இவ்ளோ தெளிவா சொல்லவே முடியாது பட்டறை...

ஜிகர்தண்டா Karthik said...

@வானம்பாடிகள் அண்ணே,
கேஸ் ஆகட்டும் என்றுதான் அடித்தான்.
சென்ற முறை தப்பு செய்யாமல் உள்ளே வந்தான்.
இந்த முறை உள்ளே வருவதற்கு தப்பு செய்தான்.

கலையரசன் said...

கஷ்டம்தான்..

Shan said...

Waiting for next episode......

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online