Thursday, November 26, 2009

லீவு...லீவு...
அட... அட.. என்னடா படிக்க வந்த எடத்துல பரீட்சை எழுத சொல்றாங்க. சமூகத்துக்கு அடுத்த எட்டாம் தேதி வரை பரீட்சை இருக்கும் காரணத்தால், இரண்டு வாரங்களுக்கு ப்ளாக்க்கு லீவ் விட்டாச்சு. பொழச்சு போங்க... இதுனால நீங்க எழுதறத படிக்கமாட்டேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா படிப்பேன், பின்னூட்டத்தில் கலாய்ப்பேன்... சொல்லிபோட்டேன்...

வர்ட்டா..... விடு ஜூட்ட்ட்ட்


Wednesday, November 25, 2009

எட்டு விக்கெட் இழப்பிற்கு....

ரேவதி ஆன்ட்டி வீட்டு எண்டில் இருந்து அப்பா பந்துடன் ஓடி வருகிறார். பந்தில் ஏதோ போட்டோக்கள் இருப்பது போல தெரிகிறது. விக்கெட் கீப்பராக அம்மா ஹெல்மெட் மாட்டி நின்றுள்ளார். கல்லியில் மாமாவும், பாய்ண்டில் அத்தையும், லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆனில் சித்தப்பா சித்தி என அனைவரும் களத்தில் துடுப்பாட்டக் காரரை அவுட் ஆக்க தயாராக உள்ள நிலையில். துடுப்புடன் நிற்கும் எனது நண்பன் அசாதியமாக பவுன்சரை யாருமில்லாத ஸ்லிப் திசையில் தூக்கி விட்டான். பிரமாதம்!! அடுத்த பந்து வர எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும்.

என்ன இது புது வித கமெண்ட்ரியா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. நீங்களும் இதை கடந்து வந்தவராகவோ, கடக்கப் போகிறவராகவோ இருப்பீர்கள். ஆமாம்.. இந்த 26-27 வயது வந்தாலே, பெற்றோர்கள் பிள்ளையை அவுட் ஆக்குவதில் குறியாக உள்ளனர். அதாங்க கல்யாணம். இதில் சுத்தி நம்ம சொந்தக்காரங்கா வேறு. இந்த மாதிரி பல பவுன்சர்களை சந்தித்து திக்கி திணறிக் கொண்டுள்ளனர் என் காலேஜ் மக்க. ஒரு.. ஒரு... வாரமா ஓட்டிட்டுஇருக்காங்க.

இதோ இதுவரைக்கும் ஆறு பேரு கிளீன் போல்ட் ஆகிவிட்டனர். அடுத்து ஏழு மற்றும் எட்டாவது விக்கெட் வரும் வெள்ளிக் கிழமை விழுகிறது. என்னத்த சொல்ல, சில பேரு வேணும்னே அவுட் ஆகுறாங்க. இப்போ நாம ப்ளேயர்ஸ்ல எத்தனை வகைன்னு பாப்போம்.

அடித்து ஆடுபவர்: சும்மா பந்து போடுவது யாராக இருந்தாலும், நம்ம ஷேவாக் மாதிரி அடி பின்னுவாங்க. கல்யாணம் வேணாம் நீங்க எதாவது சொன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் அப்படிங்கற பசங்க. 'மச்சி.. என்னடா அப்பாகிட்ட இப்படி பேசற?' அப்படினா.. 'ஸ்ட்ராங்கா இருக்கனும்டா.. இல்லாட்டி யார்கர் போட்ருவாங்க... நம்ம வாழ்கைய நாமதான் மச்சி வாழணும்.. இதுல கல்யாணம்னு அசிங்கமா பேசிக்கிட்டு.. எனக்குன்னு லட்சியம் இருக்குடா' என்று சொல்லும் லட்சியத்தை மனைவியாக கொண்ட லட்சிய புருஷர்கள்.

நிறுத்தி ஆடுபவர்: இவர் நம்ம திராவிட் மாதிரி. எந்த பால் போட்டாலும் அவுட் ஆக்கவே முடியாது. பிட்ச்லையே பால் இருக்கும். ரன்னும் அடிக்க மாட்டாங்க, அவுட்டும் ஆகா மாட்டாங்க. 'கல்யாணம் பண்ணிக்கோடா அதான் வேல கெடச்சு நல்ல நிலைமையில இருக்க இல்ல...' என்று சொல்லும் அப்பாவிடம். 'பண்ணிக்கலாம் பா... கொஞ்ச நாள் போகட்டும்' என்று நாள் கடத்துபவர்கள்.

நைட் வாச்மன்:
இப்போது இவர் இறங்கமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பொசுக்கென்று இவர் இறங்கிவிடுவார், அவசர அவசரமாக அவுட் ஆகியும் விடுவார். அதுமாதிரி, இவனுக்கெல்லாம் எங்கடா இப்போ அப்படின்னு நினைக்கும்போது. சல்ல்... என்று களத்தில் இறங்கி..'மச்சி...அடுத்த மாசம் பனிரெண்டாம் தேதி கல்யாணம்' என்று சொல்லும் கும்பல்.

மேட்ச் பிக்சர்: இவர்களே அப்பாவிடம் பந்தை கொடுத்து போட சொல்லி அவுட் ஆகிறவர்கள். அதாங்க நம்ம லவ் பண்ணற பசங்க. 'வேலில போற ஓணான வேட்டில விட்டுக்கரவங்க'.

டெயில் என்டர்: இவங்க களத்துல இறங்கரத்துக்கு பதிலா, அவுட் ஆயிக்கறேன்னு ஒத்துப்பாங்க. இவங்க அப்பா பந்தே போட வேணாம்.. 'என்னப்பா..இந்த பொண்ணு.....' என்று கேள்வியை முடிப்பதற்குள் 'சரிப்பா....' என்று சொல்லும் பசங்க.

மேட்ச் ரத்து: பசங்க ஆடி அவுட் ஆகணும்னு ஆசையா இருப்பாங்க... அவங்க அப்பா, அம்மா பந்து போடமாட்டேன்னு கறாரா சொல்லிடுவாங்க. இதுனால ஆட்டம் ரத்தாயிடும்.

டிக்ளேர் செய்பவர்: சுத்தி முத்தி நிக்கும் சொந்தக் காரங்க அத்தனை பெரும் செய்கின்ற டார்ச்சர் தாங்காமல்... 'சரி... பண்ணி தொலைச்சுக்கறேன்' என்று சொல்லும் பசங்க.

அதெல்லாம் சரி... நீ எதுல எந்த ரகம்னு கேக்குறது தெரியுது. நாம களம் இறங்கினாத்தான... 'ஐயோ.. உடம்பு வலிக்குதே.. காய்ச்சல் வர மாதிரி இருக்கே' அப்படி என்று டீமில் இடம் பெறாத வீரர் போல, இதோ படிக்க ஓடி வந்துட்டோம் இல்ல. அப்படியே பசங்கலாம் எப்படி சமாளிக்கராங்கங்கரத பாத்து.. நெளிவு சுளிவுகளை கத்துக்கறேன்.

இதுல இப்பவரைக்கும், நம்ம டெயில் என்டர்கள் கல்யாணம் நடந்து வருகிறது. மேட்ச் பிக்சர்களும் தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். நிறுத்தி ஆடுபவர்தான் நம்ம ஆளுங்க, நெளிவு சுளிவு சொல்லித்தராங்க. நைட் வாச்மன் எப்ப வருவாங்கன்னு தெரில.

நம்ம கிளாசுல மகளிர் டீமும் உண்டுங்க... அவங்கலாம் சரியான சொத்தை... இன்னும் ஒரு நாலு மாசத்துல ஆல் அவுட் ஆயிடுவாங்க போல இருக்கு. எல்லாருமே டெயில் என்டர்தான். இங்க பல பேரு படிக்க வராங்க. நம்ம கிளாஸ் பொண்ணுங்க பலபேருக்கு மேல படிக்கணும்னு ஆச இல்லையேன்னு நினைக்கும் போது. தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்கராங்களோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்ன சொல்றது? இருக்கற ரெண்டு மூணு பேராவது பாத்து ஆடின சரி.

இதோ வர வெள்ளிக்கிழமை, கிளாஸ் பசங்க ரெண்டு பேருக்கு கல்யாணம். இதோட எட்டு விக்கெட்...என்னதான் நாம கிண்டல் பண்ணினாலும். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் என் இரு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நம்மதான் போக முடில.... இங்க இருந்தே வாழ்த்துவோம்... 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்'


Tuesday, November 24, 2009

மாற்றமொன்றுதான்...

வாங்க.. என்னடா இந்த க்யூல நின்னுட்டு இருக்கும் போது பொழுது போகதேன்னு நெனச்சேன் நீங்க வந்துடீங்க. நல்லது.

நான் பொறந்து ஒரு இருபத்தி ஆறு வருஷம் ஆகப் போகுது. பெரிய மாற்றங்கள பாத்த ஒரு குடுப்பினை எங்க generation-க்கு உண்டு. எல்லாத்துலயும் மாற்றம் ஒட்டு வீடுகள் இருந்த இடத்தில் பெரிய கட்டிடங்கள், TV பொட்டிகள் இன்று சப்பயாகி சுவற்றுடன் ஒட்டிகொள்கின்றன, தொலைபேசி அலைபேசியாகி இன்று அடுத்த ரூமில் இருப்பவர்கள் கூட இதில் பேசிக்கொள்ளும் கிட்டபேசி நிலைக்கு வந்து விட்டது. தெருவோர பரோட்டா கடைகள் போல இன்று அங்கிங்கெனாதபடி எல்லாப் பக்கங்களிலும் முளைத்து இருக்கும் பிட்சா கடைகள். அப்போதெல்லாம், சூப்பர் மார்கெட் செல்வது என்றாலே வீட்டில் குஷி, அத்தனை அயிட்டங்களும் ஒரே இடத்தில், இப்போது மால்கள் சூப்பர் மார்கெட்டை தூக்கி சாப்பிட்டு விட்டன. அரசாங்க வேலை என்று திரிந்து கொண்டிருந்த பலரும் , அடடா நாம இந்த காலத்துல பொறக்காம போய்ட்டோமே, இல்லாட்டி.. நாமளும் இந்த அமெரிக்க ஜப்பான்னு போய்ட்டு வந்துருக்கலாம்னு நினைக்கும் அளவுக்கு IT வளர்ந்து இருக்கிறது.

ஒரு பையன் 8000 ரூபா சம்பாதிச்சு, அம்மா-அப்பா கூட இருந்து, நல்ல பழக்கங்கள் இருந்தால் பொண்ணை கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் அப்போது இருந்தனர். இப்போது பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்னும் பழமொழிக்கு ஏற்ப, expected காலத்தில் MBA or MS with min 1 lakh என்று போடும் அளவிற்கு மாறி இருக்கிறோம். இத்தனையிலும் முன்னேறிய நாம், உடல் நிலையில் பெரிதும் பின்தங்கியே உள்ளோம். எங்கு திரும்பினாலும் வீசிங், ஷுகர், இரத்த அழுத்தம், இதய நோய், மன நோய் என பல வகைகளிலும் நோயாளிகளை உருவாக்கி வருகிறோம்.

அந்த காலத்தில், பானையில் சோறு பொங்குவார்கள், அதில் மேலிருக்கும் தண்ணியை வடிகட்டி விடுவார்கள். அரிசியில் இருக்கும் சர்க்கரை வடிந்து விடும். இந்த குக்கர் வந்தாலும் வந்தது, அனைத்து சர்க்கரையும் சாப்பாட்டில் தங்கி விடுவதால், அது உடலுக்குளும் சென்று அதிகப் படியான சர்க்கரையை சேர்த்து விடுகிறது. இதுதான் சுகருக்கு காரணம் என்று டாக்டர் சொல்லி கேட்டேன்.

எண்ணெயில் முங்கி முத்தெடுத்த முறுக்கு, சீடை போன்ற பதார்த்தங்கள் இன்று மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்தக் கால மக்கள் இதெல்லாம் தின்று அதற்கு தகுந்தார்ப்போல் நடந்தனர், உழைத்தனர். இங்கு உக்காந்த இடத்தில் வேலை செய்துவிட்டு வீடு வந்ததும், சீடை முறுக்கு என்று வாயில் திணித்தால் அது அதிகம் காலியாக உள்ள இதய அறைகளை நிரப்புகின்றன. இல்லாவிட்டால் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் பெரிய சொத்தாக வயிற்றில் சேர்ந்து நம்மை obese பார்டியாக்கி அபேஸ் பண்ணிவிடும்.

இரவில் ரோகியை போல் சாப்பட வேண்டும் என்பார்கள். அதாவது கம்மியாய் சாப்பிடுவது. ஏனென்றால், இரவில் தூங்கும்போது ஜீரண சக்தி கம்மியை இருக்கும். நாம் வீட்டுக்கு பொய் அம்மாவிடம் சொல்லி நல்ல ஒருகட்டு கட்டிவிட்டு, தொப் என்று சோபாவில் போய் விழுந்து TV ரிமோட்டை கையில் எடுத்தால், எங்கிருந்து வருமோ தெரியாது அப்படி ஒரு தூக்கம். அப்படியே தூங்கிவிடுவது. இதுவும் தொப்பைக்கு காரணம்.

வெண்ணையில் குளித்து வரும் பிட்சா அது ஒரே வாயில் ஒரு பீசை உள்ளே தள்ளி, அதில் உள்ள அத்தனை Cholesterol, Fat அத்தனையும் ஸ்வாகா செய்வது.கேட்டால் என்னைக்காவது ஒரு நாள் தான்னு சொல்றது, இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருந்து பாருங்கள் என்று சொல்லுவது. இது மட்டும் அல்ல, கோக் என்ற ஒன்று. அதன் பட்டியிலே அசிட் என்று போட்டுள்ளான், அதுதான் இந்த வெளிநாட்டினருக்கு தண்ணீர். கேட்டால், தண்ணீரை விட இது காசு கம்மியாம்.
இதெல்லாம் எங்கே போய் சொல்லுவது.

அதுக்கும் மேல் நமக்கு பிடித்த வேலையே செய்யாமல், பணத்துக்காக அதிக்கபடியான டென்ஷன் எல்லாரது வாழ்விலும் மிகுந்துவிட்டது. என்ன பண்ணுவது, விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறுதே. அதுவும் நாம் மேற்சொன்ன விஷயங்களும் ஒரு மனிதனை அதிகப்படியான இதய நோய்க்கு அழைத்து செல்லுவதாக கேள்வி.

ஏதோ ஒரு வலையில் படித்த ஞாபகம், வெளிநாட்டினர்தான் எண்ணெய் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுகிறார்களாம். ஆனால், நம்மக்கள்தான் அதிகம் இதய நோயில் பாதிக்க பட்டுள்ளனர். அவர்கள் உபயோகிப்பது ஆலிவ் எண்ணெய், நாம் அதை முகத்திற்கு பயன்படுத்துவதோடு சரி.

'ஆர்டர் ப்ளீஸ்' அந்த கவுன்ட்டர் பெண்மணி அழைத்தாள்.

'இருங்க போய்ட்டு வரேன்'

'One medium cheese pizza with extra jalapeno toppings with large coke'...திரும்பி வந்தேன்.

ம்ம்ம்ம்.. நாம எத பத்தி பேசிட்டு இருந்தோம்,ஹ்ஹஹ்ன்ன்ன் ... மாற்றத்த பத்தி இல்ல...ஆனா, சில சமயங்கள்ல நாம மாறித்தான் ஆகவேண்டி இருக்கு...

என்ன முறைக்குறீங்க வெளிநாட்டுல இருந்து பாருங்க தெரியும் கஷ்டம்.


Sunday, November 22, 2009

முதல் என்றாலே சந்தோஷம்தான்

முதல் என்ற வார்த்தை பல தருணங்களில் சந்தோஷத்தையே குறிக்கிறது. முதல் நட்பு, முதல் காதல், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், முதல் கவிதை, முதல் ரேங்க், முதல்...

இப்படி முதல் எப்போதும் முதல்தான். என்னதான் பலர் பல சாதனை செய்தாலும், நாம் அதை முதல் முறை செய்யும் போது அது ஒரு தனி இன்பம்தான். அந்த வகையில் நேற்று எனது வலைப்பூவில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு முதல். பல ஜாம்பவான்களுக்கு நடுவே, என்ன நம்மால் முடியுமா என்று தொடங்கி, இன்று இந்த அளவில் வந்து நிற்கிறேன்.பிளாக்கர் என்ற ஒரு ஊடகம் இல்லாமல் என்னைப் போன்ற debut players இவ்வளவு சீக்கிரம் இந்த நிலைமையை அடைய முடியுமா என்றால் சந்தேகம்தான்.இன்று எனது நட்பு வட்டம் பதிவர்கள் என்னும் புதியவர்களால் விரிவடைந்து வருகிறது. அவர்களை நான் பார்த்தது இல்லை, பலமுறை gtalk-இல் சேட்டியது மட்டும்தான்.

அடுத்து, தமிழ்மணம் மற்றும் தமிலீஷ் போன்ற பதிவர் catalog-களில் எனது பதிவை இணைத்த பிறகுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, யார் எவர் என்று தெரியாமல் உலகின் பல மூலைகளில் இருந்து எனது பதிவை படிக்க வாசகர்கள் வந்தனர். ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல, உகாண்டா, பெரு என நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் படித்தனர். ரசித்தனரா என்பது தெரியவில்லை, ஆனால் படித்தனர்.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் ஆரமித்து, மக்கள் பின்னூட்டம் இடுவார்களா என்று தினமும் பார்த்து தோற்று, பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுதினால் என்ன என்று நான் தொடங்கினேன். என்னை பலசமயம் ஊக்குவிப்பது, எனது கல்லூரி மற்றும் முன்னாள் கம்பெனி நண்பர்கள்தான்.அவர்களுக்கு எனது அடுத்த நன்றிகள். Controversial விஷயங்களை பற்றி எழுதினால் மக்கள் வருவார்கள் என்ற எனது நம்பிக்கை பலசமயம் பொய்த்து போனதுண்டு. மொக்கை போட்டால் கல்லா கட்டிவிடும் என்ற எனது கனவு நீர்த்து போனது. உருப்படியா எழுதினால் மட்டுமே தேற முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்ததும் எனது நண்பன். அவனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஒரு பதிவை போட்டுவிட்டு, அடுத்த நாள் காலை மறுபடியும் வந்து எவராவது புதிதாக follow செய்கிறார்களா என்று பார்த்து ஏமாந்ததுண்டு. பின்னர், இப்போதான தொடங்கியிருக்கோம் மெதுவாத்தான் வரும் என்று மனதை தேற்றிகொள்ளுவேன். சதம் அடிக்க கூட ஒரு ரன்னில் இருந்துதானே தொடங்க வேண்டும். தொடங்கியிருக்கிறேன், தொடர்ந்து கவனிப்போம்.

அது சரி, இந்த பதிவு எதற்கு, எது எனக்கு முதல் என்று யோசிப்பது தெரிகிறது. நேற்று, பெரு நாட்டில் இருந்து வந்த வாசகரால், அண்டார்டிக்கா தவிர மீதம் உள்ள ஆறு கண்டத்தில் இருந்தும் நம் ஜிகர்தண்டாவிற்கு வாசகர்கள் வந்துள்ளனர். உகாண்டாவில் இருந்து வந்தவர், ஆப்பிரிக்காவிற்கு அட்டன்டன்ஸ் போட்டார். மற்ற கண்டங்களிலிருந்து பல வாசகர்கள் வந்து சென்றுள்ளனர். இதெல்லாம் களத்தில் இருக்கும் பல பதிவர்களுக்கு ஜுஜுபி விஷயம் என்றாலும் நமக்கு முதல் இல்லையா...முதல் என்றாலே சந்தோஷம்தான்.


Saturday, November 21, 2009

இசை தேர்வு நேரம்

என்ன பசங்களா, எல்லாரும் பரீட்சைக்கு ரெடியா?

என்னதான் பெரிய ஆளுங்கள வரணும்னு நம்ம தலைல எழுதியிருந்தாலும், முதல் படிகள் சறுக்கத்தான் செய்யும். இதுக்குதான் தோல்வியே வெற்றியின் முதல் படின்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.சரி, இப்போ கொஸ்டின் என்னன்னா, கீழ இருக்கற பாட்ட கேளுங்க.
உடனே, பதில் உன்னிக்ருஷ்ணன், நித்யஸ்ரீ அப்படின்னு டைப் பண்ண பின்னூட்டதிற்கு போகாதீங்க. கேள்வி அது இல்ல. இந்த பாட்டோட கம்போசர் யாரு. இது எந்த ஆல்பம் அல்லது படத்துல வந்தது. 'கம் ஆன்... யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்'. பதில் விரைவில்.

க்ளூ: இது செம ப்ளாப் ஆகிருச்சு.


பகீர் சித்தர்

ஒரு வாரத்திற்கு முன்பு பகீர் சித்தர் என்று நமது இட்லிவடை ஒரு பதிவிட்டிருந்தார். அதை படித்ததும், நிஜமாகவே சற்று பகீர் என்றுதான் இருந்தது.
ஆனால் நமது அராய்ச்சி சிகாமணி நியூட்டன் 'For every action, there is an equal and opposite reaction' என்று நினைவிற்கு வர, இந்த பகீரை போக்க சிரிக்கலாம் என்று யூடுப் வந்து விவேக் காமெடி என்று தேடினேன். எது வந்தது என்று நீங்களே பாருங்கள்.வாழ்கை என்னும் வண்டியே நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் ஓடிக்கொண்டுள்ளது. இதில் இப்படி அச்சாணிக்கே ஆப்பு வைக்கும் பதிவுகளை படித்தால் மனம் சற்று பதறத்தான் செய்கிறது. ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். 2012 எல்லாரும் போய்விடுவோம் என்று, போகிற காலத்தில் புண்ணியம் தேட அனைவருக்கும் உதவும் மனம் எல்லோருக்கும் வரலாம் அல்லவா. அந்த விதத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தால் நல்லது. :)


Saturday, November 14, 2009

கனவு மெய்ப்படவேண்டும்!!!

'என்னனே தெரில இன்னிக்குனு பாத்து இப்படி மழை கொட்டுது' என்று தன் மனதிற்குள் மழையை சபித்தபடி நின்றிருந்தான் மகேஷ். சரியான நேரத்துக்கு ரயில் வராத கோபத்தை மழையின் மீது காட்டி என்ன பயன்.

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ' அந்த ஆட்டோமாடிக் குரல் ரயில் வந்துகொண்டிருக்கிறது என்று பதினாலாவது முறை கூறியது. 'அது சரி!!! நாமளே எப்பயாவது ஊருக்கு போறோம்... நம்மளுக்கு இப்படியா....' என்று கனிவான கவனத்தை திசை திருப்பிக்கொண்டு நின்றான்.

'கூஊஊஊஉ........' பெரும் ஊளையுடன் வந்தது நீலகிரி வண்டி. அங்கு இங்கு என்று தேடிக்கண்டுபிடித்து S-8 அப்பர் பெர்த், நிம்மதி பெருமூச்சுடன், பையை அங்கு வைத்தான்.

மகேஷ், கோவை P.S.G கல்லூரியில் நான்காம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன். பிறந்தது படித்தது சென்னப்பட்டினத்தில், அம்மாவும் அப்பாவும் USA சென்றதால், கோவையில் கல்லூரிப் படிப்பு. சென்னை போக்குவரத்து அறவே துண்டிக்கப் பட்டது. இப்போது நண்பர்கள்தான் அவன் உறுதுணை, விடுமுறையில் பாதி நாள் நண்பர்கள் வீட்டில் ஓடிவிடும். படித்து முடித்ததும் அப்பா அங்கு வந்து MS பண்ணுமாறு கட்டளை போட்டுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யவே இந்த சென்னை பயணம்.

ஒருவழியாக ரயில் புறப்பட்டது, சொன்ன நேரத்தில்- ஒரு மணி நேரம் தள்ளிப் புறப்படும் என்று சொன்னார்கள். அப்பர் பெர்த்தில் செட்டில் ஆகி, சொத சொத துணியை லேசாக கைகுட்டையில் துடைத்துக் கொண்டான். சடார் என்று ஞாபகம் வந்தவனாய், தனது புதிய மாடல் 1100 போனில் தண்ணீர் போய் விட்டதா என்று நோக்கினான். நல்ல வேளையாக போகவில்லை, மிகவும் உயர் க்வாலிட்டி போன்....

'போன் எடுத்தவன் கையும்.... பேன் இருப்பவன் தலையும் சும்மா இருக்காது...', எப்போதும் போல் கடலை போடலாம் என்று சில நம்பர்களை அமுக்கி... காதில் வைத்தான்... எதிர்முனையில் 'ட்ரிங்... ட்ரிங்...' பிறகு 'ஹலோ...'

'ஹே மாமி...' ஐயர் பொண்ணுங்களை அப்படி கூப்பிடுவதுதான் வழக்கம், அவனுக்கு.

கீழே நின்று கொண்டிருந்த மாமி... 'என்னப்பா....' என்று மேலே பார்த்தார்.

'ஹோ..சாரி... போன்-ல...' என்று அசடு வழிந்தான். ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்துவிட்டு அந்த ட்ரைன் மாமி திரும்பிக்கொண்டார்.

'வெல்... யூ நோ... நான் அமெரிக்க போய்...' என்று ஆரமித்து... 'பை மாமி' என்று சொல்லி போனை வைக்க ஆனா இடைப்பட்ட நேரம் ஒரு மணி நேரம். அதற்குள் திருப்பூரை தொட்டுவிட்டது வண்டி. மணி பத்து.

தினமும் பனிரெண்டு மணிக்கு தூங்கிய அவனுக்கு, தூக்கம் வர இலகுவாக இருக்கும் என்று அறிவாளித்தனமாக 'இந்தியா 2020' என்று Dr. அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை எடுத்து வைத்தான். சரியாக கண்ணைக்கட்டிக் கொண்டுவரும் வேளையில்,

'எக்ஸ்க்யுஸ் மீ...' என்று ஒருவர் காலைத்தட்டினார்.

விடுதி ஞாபகத்தில் 'எவண்டா அவன்!!!' என்று எழுந்தவனை. 'நான் திருப்பூர்ல ஏறினேன். நான் கொஞ்சம் ஒசரம் நீங்க லோவர் பெர்த் எடுத்துக்கறீங்களா?' என்றார்.

தூங்கரதுல உசரம் என்ன குள்ளம் என்னையா என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்.

மறுபடியும் 'இந்தியா 2020', தூக்கம் வர.... மறுபடியும் யாரோ காலை தடவினார்கள். 'ஷிட்....' என்று எழுந்து பார்த்தான். ஒரு சிறுவன் சட்டை போடாமல் கையில் இருந்த துணியால் ஈரமாகி இருந்த தடத்தை சுத்தம் செய்துவிட்டு காசு கேட்டான். இருந்த கோபத்தில் 'காசெல்லாம் இல்ல போப்பா... உன்ன யாரு சுத்தம் பண்ண சொன்னா....' என்று கத்திவிட்டான்.

சிறிது நேரம், தான் அப்படி கத்தியது சரியா தவறா என்று புரியாமலும், புத்தகத்தில் மனம் செல்லாமலும் கனா கண்டுகொண்டிருந்தான். புரண்டு படுத்தபடி தூங்கியும் போனான்.

மணி ஒரு இரண்டு இருக்கும், எழுந்து பாத்ரூம் செல்லலாம் என்று எழுந்தவனை கடந்து ஒரு சிறுவன் ஓடினான். அதே சிறுவன்...ஆனால் சட்டை.... எப்படி... அவன் தடத்தை துடைத்த துணி... அவன் மனதை ஏதோ போட்டு அழுத்துவது போல இருந்தது.

மீண்டும் வந்து படுத்தவனை தூக்கம் அணைக்கவில்லை. இரவு முழுவதும் ஒரே யோசனை... 'என்ன செய்யலாம்?.. உலகில் இன்னும் பலர், குழந்தைகள் மிகவும் அடித்தட்டில் இருக்கிறாகளே, தன்னால் ஏதாவது செய்ய முடியுமா? என்ன செய்ய முடியும்... நான் ஒரு சாதாரண மனிதன்... மனபலம் இருக்கலாம், பணபலம் வேண்டுமே. என்ன செய்வது? ஏது செய்வது?' என்று பலத்த சிந்தனையில் ஆழ்ந்து திரும்பி படுத்தவன் பார்வையில் 'இந்தியா 2020' பட்டது. Dr. அப்துல் கலாம், கனவு காண் என்று சொன்னது அவனது நினைவிற்கு வந்தது. அதில் ஒரு முடிவும் வந்தது.

காலை ஆறு மணி, நீலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலை அடைந்தது. உடனே தனது உயர் ரக போனை எடுத்து நண்பனுக்கு அலைபேசினான்.

'மச்சி... பிளான் மாத்திட்டேன்டா... சீரியஸ் மேட்டர் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் நேர்ல வந்து சொல்றேன்...' என்று துண்டித்தான்... அலைபேசி இணைப்பை...

தொடங்கினான் கனவு காண....

(இதில் பாதி கதை எனது நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)


Tuesday, November 10, 2009

அழகு

அழகு என்றாலே அவள்தானே என்று அவனுக்குத் தோன்றியது.

பெண்ணின் முகத்தை நிலவுடன் ஒப்பிட்டு அழகு என்று கூறுவார்கள். நிலவு என்ன அவ்வளவு அழகா? அங்கங்கே கருப்படித்து. இல்லை.. இல்லை... இனி ஒரு விதி செய்வோம், அழகென்றால் அவள் முகத்துடன்தான் ஒப்பிடவேண்டும். அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியரை ஜன்னலின் வழியே பார்த்தபோது, அவள் சிரிக்கையில் அவளின் கன்னக் குழியில் பல்லாங்குழி விளையாடலாமே என்ற யோசனை அவனுக்கு உதித்தது.

வெண்ணிற முத்துகள் அவள் பற்கள் போல இருக்கும். கண்களினால் அனைவரையும் தன்பால் இழுத்து விடுவாளே, கள்ளி. அவளருகே செல்லுவதையே கர்பக்ரகதினுள் செல்லும் பக்தன் போல பெருமையாய் நினைக்கும் கூட்டத்தின் நடுவே, அன்று என்னருகில் பேருந்தில் அமர்ந்தாலே. என்ன வாசனை பவுடர் போட்டிருந்தாள், நானும் கடையில் விற்கும் அனைத்து பவுடர்-உம் வாங்கிப் பார்த்துவிட்டேனே. ஒரு வேலை பாண்டிய மன்னனின் சந்தேகம் போல பெண்களின் உடலுக்கும் எதாவது வாசம் உண்டா?

சுண்டினால் ரத்தம் வருமாமே அந்த வெள்ளைக் காரர்களுக்கு, வரச்சொல்லுங்கள் பாப்போம். இவளுக்கு சுண்டுவோம் என்ற எண்ணம் எழுந்தாலே ரத்தம் வருமே. சில்லறையை கொட்டியது போல சிரிப்பது அழகாம். சில்லறையை கொட்டி பாருங்கள் தெரியும் அதன் நாராசம். சத்தம் இல்லாமல் இவள் வடிக்கும் புன்னகையைப் ரசிக்க நான் முன்னூறு வருடம் தவம் கிடக்க தயார்.

அன்று மழையில் நனைந்து வந்த அவளின் கார்மேக கூந்தலில் இருந்து சொட்டிய துளிகள், மழையினுள் மழையாகவே தெரிந்ததே. ஒளியிலே தெரிந்த தேவதையில்லை இவள், இருளில் ஒளி தருகின்ற தேவதை.

'ஓகே பசங்களா, என்ன அழக பத்தி எழுதீட்டீங்களா? நேரம் முடிஞ்சது, பேப்பர் குடுங்க' என்ற ஆசிரியரிடம் தான் யோசித்த அனைத்தையும் எழுதாமல் வெறும் பேப்பரை கொடுத்துவிட்டு அவளை நோக்கினான், கவிதை எழுதிய மகிழ்வோடு.


Saturday, November 07, 2009

துள்ளித் திரிந்த காலம்

இதோ அவன் தனியாக தெருவில் நடந்து கொண்டிருந்தான், நினைவுகளை அசைபோட்ட படி. இந்த அமெரிக்கத் ரோடுகள், பலமாடிக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு ஏனோ இன்று புதிதாக தோன்றியது. இரவு தோன்றிய கனவு காரணமா? கனவா, இல்லை இல்லை அது அவன் வாழ்வில் முன்னாட்களில் நடந்த உண்மையே இல்லையா, பிறகு எப்படி அது கனவாகும். கனவில் அவன் கல்லூரிக்கு சென்றிருந்தான், சுற்றிப்பார்க்க. நினைவுகள், கல்லெறிந்த நீர்நிலையைப் போல் அலையோட ஆரமித்தது.

கல்லூரிக்கு வந்தபோதும் இப்படித்தானே இருந்தது அவனுக்கு, நட்பு என்றால் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் மட்டுமே அறிந்த அவனுக்கு, கல்லூரிக்கு வரும்போது என்ன தெரிந்திருக்க முடியும். ஆனால் அந்த நாலு வருடத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்னும் அளவிற்கு அவனது நண்பர்கள் மற்றும் நட்பு வளர்ந்தது.

நட்பு மட்டுமல்ல, சில எதிரிகளும் இருந்தனர் அப்போது. தனக்கு பிடித்த பெண்ணைப் பற்றி இழிவாய் பேசிய நண்பர்களுடன் அவன் சண்டை போட்ட நாட்கள், இரு வாரங்கள் அவர்களை முறைத்துக் கொண்டு சென்றது. பின்னர் அவர்களிடமே, மச்சான் சாரி டா என்று கூடியது. ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று ப்ரோபசரிடம் பர்மிஷன் வாங்கி திருட்டுத்தனமாய் சினிமா சென்ற நாட்களும் அவன் நினைவில் நிழலாடின. அவன் கல்லூரி வாழ்கையில் அவன் பாதி நேரம் செலவு செய்த அந்த கான்டீன் மரத்தடி இன்று சற்றே மாற்றியமைக்க பட்டுள்ளது, மரத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால். அங்கு அவன் நண்பர்களுடன் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு ஷார்ஜா வாங்கிக்குடித்த ருசி நாவில் தங்கிவிட்டது. ருசித்துக் கொண்டான்.

ஏனோ அவனது கல்லூரி வாழ்கை அவனை சினிமாவின் பக்கம் இழுத்தது, நடிகனாய் அல்ல, ரசிகனாய். நேரம் கிடைத்தால் சினிமா, புதுப் படம் வந்தால் சினிமா, பரீட்சைக்கு நடுவிலும் சினிமா. ஒரு வேளை இதுதான் சினிமா பைத்தியமோ, இருக்காது. அதற்கும் காரணம் சுற்றியிருந்த நண்பர்கள்தான். பள்ளிநாட்களில் சினிமா என்றாலே ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றிருந்தவனை மாற்றியவர்கள் அவர்கள்தானே.

திடீரென்று தோன்றினால் கூட்டமாய் கிளம்பிவிடுவார்களே, தாபாவிற்கு. விடுதியின் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு செய்தி பாயும். 'மச்சான், நாலு ரொட்டி, ஒரு முட்டை மசால்' என்று ஒருவன் வந்து ஆர்டர் சொல்லிவிட்டு போவான். காசு, நட்பில் காசு என்ன பெரிய விஷயம், அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை அப்போது. இப்போது இருபது ரூபாய் செலவு செய்தால், 'மச்சி இந்தா பார்சல், ட்வென்டி ருபீஸ்' என்று சொல்லுகிறோம்.பணம் பெரிதாகிவிட்டதோ. தாபாவில் இருந்து வரும் வழியில் தர்பூசணி பழக கடை, அட அந்த கடைக்காரர் 'வாரம் ஒரு முறை வந்துட்டு போங்க' என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட்ட நாட்கள்.

வெளியே தங்கி இருந்த நாட்களில், காரை கொண்டுவந்து போட்ட ஆட்டங்கள். நண்பன் ஒருவன் சாதாரண கடைகளில் சாப்பிடாமல், 'டேய், கொஞ்ச நாள் தாண்டா, வா சிக்கன் சம்பூர்ணா போவோம்... AP உனக்கு அங்க fried rice வாங்கிக்கோ' என்று அவனையும் சமாதானப் படுத்துவான். தினம் காலை நேவி பேக்கரியில் சூரியன் fm கேட்டு பேருந்திற்கு காத்திருந்தது எல்லாம் அவன் நினைவில் வந்து செல்ல, கண்ணீர் துளிர்த்தது. பேருந்தை கோட்டை விட்ட நாட்களில் நண்பனின் CBZ-யுடன் தனது சன்னி வண்டியை போட்டி போட்டு ஓட்டிச்சென்றதும் அவன் நினைவில் ஒரு வெள்ளோட்டம் ஒட்டி சென்றது.

டீ குடிக்க கடைக்கு போவார்கள், ஆனால் ஈரோடு போய் அங்கிருந்து வண்டி எடுத்து கோபி போய்... கொடிவேரியில் குளித்து, சத்தியமங்கலம் போய்.. அடிவாரத்தில் சாமியை கும்பிட்டு, வீரப்பன் கோட்டையை இருந்த தாளவாடி சென்று டீ குடித்த கிறுக்கர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதே போல் இன்னொரு முறை காலை எழுந்து டீ கொடுக்க போலாம் என்று கூறிய நண்பனை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க செய்து வண்டிகளை ஏற்பாடு செய்து, பின்பு ஊட்டிக்கு வண்டியில் சென்றவர்கள் இவர்கள்தான், டீ குடிக்க. பின்னர் திரும்பி வருகையில், குளிர் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வெட்டர் வாங்கியது தனிக்கதை....

இதையெல்லாம் தனது நடைப்பயணத்தில் சிந்தித்த அவன், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களது நம்பர்களைத் தட்டினான்....

ஒரு ரிங்... இரண்டாவது ரிங்....

'you have reached the voice message box of........'

கனவுடன் நிறுத்தி இருக்கலாமோ என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.


Friday, November 06, 2009

எனக்குப் பிடித்த ப்ரபோசல்

ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது.

மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும்.பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.


கல்லூரி வாழ்கை-2

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல 'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்' (குறளில் பிழை இருந்தால் மன்னிக்கவும்) அது போலத்தான் நமது இரண்டாவது வகுப்பு. சரியாக இரண்டு மணிக்கு தொடங்கும் அதுவும் திங்கட்கிழமைதான். முதலில் நமது அக்கவுண்டிங் வகுப்பு முடிந்து எதாவது சாப்பிடலாம் என்று நினைப்பதற்குள் இந்த வகுப்பு தொடங்கி விடும்.

இது organisational behaviour, இப்படித்தான் நான் இங்கிலாந்து முறைப்படி எழுதினேன். ஆனால் அதை அமெரிக்க முறைப்படி organizational behavior என்று எழுத வேண்டுமாம். சரி பழகிக் கொள்கிறேன். முதலில் OB என்றால் என்ன, ஒரு நிறுவனத்தில் பணிசெய்யும் மக்களை எப்படி நிர்வகிப்பது, ஊக்கப்படுத்துவது, எப்படி தலைமை பண்பை வெளிப்படுத்துவது போன்றவைகளை நமக்கு சொல்லித்தரும் ஒரு வகுப்பு.

இதை நமக்கு சொல்லிதருபவர் Dr. Geisler, இவர் நாசா, அமெரிக்க பாதுகாப்புத்துறை போன்ற பல பெரிய நிறுவனங்களில் consultant- ஆக பணிபுரிந்துள்ளார், புரிந்துகொண்டுள்ளார். இவ்வாறு பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களால் என்ன நன்மை என்றால், அவர்கள் நடத்தும் போது அந்த பாடத்திற்கு ஏற்றவாறு தங்கள் அனுபவத்தில் நடந்ததையும், அதற்கு அவர்கள் எடுத்த முடிவையும் சுட்டிக்காட்டி நடத்துவார்கள். இது நமது இந்திய கல்வி முறையில் இல்லை. இதை நாம் வளர்க்க வேண்டும், வெறும் புத்தகத்தில் இருப்பதை சொல்லித்தர ஆசிரியர்கள் தேவை இல்லை என்பது எனது கருத்து.

அடுத்தது, இவரது வகுப்பில் தேர்வு கிடையாது. 'என்ன பரீட்சை இல்லாம என்னத்துக்கு படிச்சுகிட்டு' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் மூன்று கேஸ்களும், ஒரு ப்ராஜெக்டையும் வைத்து நமக்கு மதிப்பெண்கள் வழங்குவார். அது எனக்கு புதியது, அதிலும் இது அனைத்தும் ஒரு டீமுடன் செய்யவேண்டும். எனக்கென்னவோ இது சரியான முறையாகப்படுகிறது. ஏனெனில், நாம் வேலைசெய்யப் போகும் இடங்களில் இப்படித்தான் இருக்கப் போகிறது.

மூன்றாவது கேஸ் அடுத்த வாரம் சப்மிட் செய்யவேண்டும். அதற்கு ஒரு புத்தகத்தை படித்து, ஒரு கேள்விக்கு பதில் எழுத வேண்டும். கஷ்டம்தான்!!!

நாங்கள் எடுத்திருக்கும் ப்ராஜக்ட், இந்த பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் ஆட்டோமொபில் நிறுவனத்தில் அவர்களது பணியாளர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை பற்றி ஒரு கருத்துகணிப்பும் அதைப்பற்றி ஒரு ரிபோர்ட் தயார் செய்யவேண்டும்.

இதெல்லாம் இந்த வகுப்பில் பிடித்த விஷயங்கள். பிடிக்காதது என்னவென்றால், இவர் வகுப்பில் சில பி.பி.டி-களை வைத்து நடத்துவார். அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார், மற்றும் நாங்கள் நோட்ஸ் எடுப்பதற்குள் அடுத்த ஸ்லைடிர்க்கு சென்று விடுவார்.

இவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள,
http://www.stuart.iit.edu/about/faculty/eliezer_geisler.shtml


Monday, November 02, 2009

நமது அடுத்த பதிவு!!!

.... ஆஹா என்ன இப்படி இருக்கு....
.... ஹ்ம்ம்... கரெக்ட் அப்படிதான்....

நமது அடுத்த பதிவுக்கு trailer இது.... அடுத்த பதிவு கல்லூரி வாழ்கை பகுதி - 2..

நாளை சந்திக்கும் வரை வணக்கம் உறவுகளே....


வேலைய பாருங்கப்பா!!!

இது கொஞ்சம் controversial topic-தான் இருந்தாலும் நம்ம மனசுல பட்டத சொல்வோம். யாரு மனசும் புண் படாத வரைக்கும் நல்லது. யாரோ சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன், 'உனது சுதந்திரம் உன் கையை ஓங்கும் வரையில்தான்' அப்படினு. ஆனா இத பல பேரு புரிஞ்சுக்காம பேசறதும் எழுதறதும் அவர்களது குறுகிய பார்வையைத்தான் காட்டுகிறது. அது சரி எனது பார்வை சரியா? அது நீங்கதான் சொல்லணும். என்னடா சங்கத்துல திடீர்னு சீரியஸ்-அ பேசறாங்களே அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். இரவுன்னு இருந்தா பகல்ன்னு ஒன்னு வேணும் இல்ல.. அதுக்குதான் இந்த டிபரன்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------

நானும் கொஞ்ச நாளாவே சில வலைப்பதிவுகளை படித்து வந்தேன். (அதன் பெயரை சொல்லி, அவர்களுக்கு வீண் விளம்பரத்தை ஏற்படுத்த விரும்பவில்லை). அவர்கள் பெரியாரின் வாரிசுகள். யாருடைய வாரிசாய் இருந்தால் நமக்கென்ன, நாம் பார்க்க போவது அவர்கள் எழுதுவதைத்தான். கருத்துக்களை சொல்லுகிறேன் என்ற போக்கில் அவர்கள் எப்போதும் ஒரே சமூகத்தை சாடுவது சரியா.

அது சரி நம்ம அமைதியா பேசினது போதும், இப்போ இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆவோம்.

எனக்கு தெரிஞ்சு பெரியார் பகுத்து அறியணும் அப்படினு சொல்லிருகார். எனக்கு சொல்லியவர்கள் பகுத்தறிவை புகட்டும் போது அவர்கள் பார்பன எதிர்ப்பை அதில் sub-set போல கொண்டிருந்தனர் என்றனர். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, பார்பன எதிர்ப்பிற்கு அவர்கள் போர்த்தியிருக்கும் போர்வை பகுத்தறிவு என்று.

இதில் ஒருவர் சொல்லுகிறார், மனைவி கணவனை 'அண்ணா' என்று கூப்பிடுவது எந்த சமூகத்திலும் இல்லாதது என்று. 'எவன் வீட்டுல எவன் பொண்டாட்டி எவன எப்படி கூப்பிடராங்கரத' பாக்கறதுதான் இவர்கள் வேலையோ என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காலத்தில் பாதி பேரு கணவனை 'போடா... வாடா...' என்று பேசுகிறார்களே, இதெல்லாம் அவங்க காதுல 'இன்ப தேனாய்' விழுகின்றது போல.

அடுத்து, பிராமணர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லவதால் அவர்களுக்கென்று ஒரு கல்லூரி கட்டிக்கொண்டு அதில் போய் படிக்க வேண்டுமாம். இவரு பெரிய கல்வி மந்திரி ஐடியா குடுக்கிறாராம். இதே இவர்களது செய்திகளை பிராமண ஆதிக்க ஊடகங்கள் ஒளிபரப்பவும், எழுதவும் செய்வதில்லை என்று கதறுகின்றனர். இதையே இவர்களுக்கும் சொல்லலாம் இல்லையா? வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஊடகத்தை தொடங்குங்கள், எத்தனை பேர் பார்கிறார்கள் என்று பாப்போம்.

மூன்றாவது, திராவிடர்களும் ஆரியர்களும் ஒன்று சேர மாட்டார்கள் என்றும், பிராமணர்கள் அப்படி சொல்லிக்கொண்டு இருந்தாலும் அப்படி ஒருபோதும் நடக்காது என்கிறார் நம்ம ஆசாமி. எனது நண்பர்களில் பிராமணர்களை விட, மற்ற சமூகத்தினர்தான் அதிகம். (இதை படிக்கும் நண்பர்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், சில விஷயங்களை தெளிவுபடுத்த இதை சொல்லியாக வேண்டியுள்ளது) எனவே ஏதோ சில விஷயங்களை மேம்போக்காக பார்த்துவிட்டு சும்மா சொல்லக்கூடாது. அது சரி, ஒன்று சேரமாட்டாங்க அப்படின்னு சொல்ல இவங்க யாரு.

நாலாவது, ஒருவர் சொல்லுகிறார், அவரது நாளிதழ் வேலையில் பிராமண ஆதிக்கத்தால் அவரு வெளிய வந்தாராம். அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் முன்னாடியே ப்ளாக் செய்ய ஆரமித்து அதிலும் பிராமண ஆதிக்கத்தால் அவரால் சோபிக்க முடிலயாம். உட்டா அவர் வீட்டுல பல்பு எரியலேனா உடனே பிராமண சமூகம்தான் காரணம்னு சொல்லுவாரு போல இருக்கு. ப்ளாக் என்பது நம்ம கைல இருக்கும்போது, அந்த பழிய பிராமணர்கள் மேல போடுவது அநியாயமா இல்லையா?

வேட்டியை வேஷ்டி என்று சொல்லுகிறார்களாம், அத்திம்பேர், ஆத்துக்காரர் என்று அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்களாம், சமஸ்க்ருதம் ஒரு பாஷையே இல்லையாம். சில இடங்களில் அத்தையை அயித்தை என்று அழைப்பதில்லையா, அது போல இவர்களுக்கு ஏன் எடுத்துக்கொள்ள தோன்றுவதில்லை? அட அவங்க எப்படி அப்படி சொல்லாம் அப்படின்னு எப்பவும் குறை கண்டுபிடிக்கறது. ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் அப்படின்னு சொல்வாங்க அந்த மாதிரி இல்ல இருக்கு.

வேட்டியை கேவலமான முறையில் கட்றாங்களாம். அவங்க காசு போடு வாங்கறாங்க அவங்க கட்றாங்க, உனக்கு என்னய்யா போச்சு. உன் வேட்டிய வாங்கியா அவங்க கட்றாங்க.

இப்படி சொல்லிடே போலாம். சாமியும் இல்ல பூதமும் இல்லன்னு சொல்றாங்களே, ஏன் இத மத்த மதத்துக் காரங்ககிட்ட சொல்லலாம் இல்ல.. பகுத்து அரிஞ்சுருவாங்கனு பயம் போல. சூரியன பாத்து நாய் குறைச்சு சூரியன் பதில் சொல்லலேன சூரியனுக்கு பயம்னு அர்த்தமில்ல. இந்த பதிவும் கூட யாரையும் புண்படுத்த அல்ல, நம்ம ஜனத்தை பண்படுத்ததான். நமக்கு நட்பு கரம் நீட்டித்தான் பழக்கம்.

அவங்கள மாதிரி அடுத்தவங்கள புண்படுத்தி பதிவு போடறதுக்கு பதில வேற எதாவது வேல இருந்தா போய் பாக்கலாம், இல்லாட்டி இட ஒதுக்கீட்டை நம்பாமல் புள்ளைங்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் குடுக்கலாம்.


Sunday, November 01, 2009

முதல் பரிசாம்!!!

திரு. கார்கில் ஜெய்யும், நானும் சும்மா சிகாகோவில் இருக்கும் மில்லேனியம் பார்க் என்னும் இடத்திருக்கு செல்லும் போது அங்கு ஒரு பசுவில் சிலை இருந்தது. அதை பார்த்த உடன் நமக்கு 'செண்பகமே....செண்பகமே...' என்ற பாடல் ஞாபகத்திற்கு வர. அதில் விளைந்த முயற்சிதான் நீங்கள் கீழே காணும் போட்டோ. இதற்கு 'Humor of the Day' என்று முதல் பரிசு கொடுத்துள்ளனர்.
http://www.photographyvoice.com/potd/view-photo-of-the-day/22482/2009/11/01/humor-11-2009/jayakumar-rajagopal

நமக்கும் போட்டோக்ராபி-க்கும் வெகுதூரம், இருந்தாலும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே.I am back... தமிழ்மணத்திற்கு நன்றி

இதோ நம்ம சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்று தமிழ்மணம், நமது சங்கத்தை அதனுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமது சங்கம் கிளைவிட்டு வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ்மணத்திற்கு நமது விட்டத்தை பார்த்து வெறித்தனமாய் யோசிப்போர் சங்கத்தின் சார்பில் நன்றிகள்.


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online