'என்னனே தெரில இன்னிக்குனு பாத்து இப்படி மழை கொட்டுது' என்று தன் மனதிற்குள் மழையை சபித்தபடி நின்றிருந்தான் மகேஷ். சரியான நேரத்துக்கு ரயில் வராத கோபத்தை மழையின் மீது காட்டி என்ன பயன்.
'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ' அந்த ஆட்டோமாடிக் குரல் ரயில் வந்துகொண்டிருக்கிறது என்று பதினாலாவது முறை கூறியது. 'அது சரி!!! நாமளே எப்பயாவது ஊருக்கு போறோம்... நம்மளுக்கு இப்படியா....' என்று கனிவான கவனத்தை திசை திருப்பிக்கொண்டு நின்றான்.
'கூஊஊஊஉ........' பெரும் ஊளையுடன் வந்தது நீலகிரி வண்டி. அங்கு இங்கு என்று தேடிக்கண்டுபிடித்து S-8 அப்பர் பெர்த், நிம்மதி பெருமூச்சுடன், பையை அங்கு வைத்தான்.
மகேஷ், கோவை P.S.G கல்லூரியில் நான்காம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன். பிறந்தது படித்தது சென்னப்பட்டினத்தில், அம்மாவும் அப்பாவும் USA சென்றதால், கோவையில் கல்லூரிப் படிப்பு. சென்னை போக்குவரத்து அறவே துண்டிக்கப் பட்டது. இப்போது நண்பர்கள்தான் அவன் உறுதுணை, விடுமுறையில் பாதி நாள் நண்பர்கள் வீட்டில் ஓடிவிடும். படித்து முடித்ததும் அப்பா அங்கு வந்து MS பண்ணுமாறு கட்டளை போட்டுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யவே இந்த சென்னை பயணம்.
ஒருவழியாக ரயில் புறப்பட்டது, சொன்ன நேரத்தில்- ஒரு மணி நேரம் தள்ளிப் புறப்படும் என்று சொன்னார்கள். அப்பர் பெர்த்தில் செட்டில் ஆகி, சொத சொத துணியை லேசாக கைகுட்டையில் துடைத்துக் கொண்டான். சடார் என்று ஞாபகம் வந்தவனாய், தனது புதிய மாடல் 1100 போனில் தண்ணீர் போய் விட்டதா என்று நோக்கினான். நல்ல வேளையாக போகவில்லை, மிகவும் உயர் க்வாலிட்டி போன்....
'போன் எடுத்தவன் கையும்.... பேன் இருப்பவன் தலையும் சும்மா இருக்காது...', எப்போதும் போல் கடலை போடலாம் என்று சில நம்பர்களை அமுக்கி... காதில் வைத்தான்... எதிர்முனையில் 'ட்ரிங்... ட்ரிங்...' பிறகு 'ஹலோ...'
'ஹே மாமி...' ஐயர் பொண்ணுங்களை அப்படி கூப்பிடுவதுதான் வழக்கம், அவனுக்கு.
கீழே நின்று கொண்டிருந்த மாமி... 'என்னப்பா....' என்று மேலே பார்த்தார்.
'ஹோ..சாரி... போன்-ல...' என்று அசடு வழிந்தான். ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்துவிட்டு அந்த ட்ரைன் மாமி திரும்பிக்கொண்டார்.
'வெல்... யூ நோ... நான் அமெரிக்க போய்...' என்று ஆரமித்து... 'பை மாமி' என்று சொல்லி போனை வைக்க ஆனா இடைப்பட்ட நேரம் ஒரு மணி நேரம். அதற்குள் திருப்பூரை தொட்டுவிட்டது வண்டி. மணி பத்து.
தினமும் பனிரெண்டு மணிக்கு தூங்கிய அவனுக்கு, தூக்கம் வர இலகுவாக இருக்கும் என்று அறிவாளித்தனமாக 'இந்தியா 2020' என்று Dr. அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை எடுத்து வைத்தான். சரியாக கண்ணைக்கட்டிக் கொண்டுவரும் வேளையில்,
'எக்ஸ்க்யுஸ் மீ...' என்று ஒருவர் காலைத்தட்டினார்.
விடுதி ஞாபகத்தில் 'எவண்டா அவன்!!!' என்று எழுந்தவனை. 'நான் திருப்பூர்ல ஏறினேன். நான் கொஞ்சம் ஒசரம் நீங்க லோவர் பெர்த் எடுத்துக்கறீங்களா?' என்றார்.
தூங்கரதுல உசரம் என்ன குள்ளம் என்னையா என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்.
மறுபடியும் 'இந்தியா 2020', தூக்கம் வர.... மறுபடியும் யாரோ காலை தடவினார்கள். 'ஷிட்....' என்று எழுந்து பார்த்தான். ஒரு சிறுவன் சட்டை போடாமல் கையில் இருந்த துணியால் ஈரமாகி இருந்த தடத்தை சுத்தம் செய்துவிட்டு காசு கேட்டான். இருந்த கோபத்தில் 'காசெல்லாம் இல்ல போப்பா... உன்ன யாரு சுத்தம் பண்ண சொன்னா....' என்று கத்திவிட்டான்.
சிறிது நேரம், தான் அப்படி கத்தியது சரியா தவறா என்று புரியாமலும், புத்தகத்தில் மனம் செல்லாமலும் கனா கண்டுகொண்டிருந்தான். புரண்டு படுத்தபடி தூங்கியும் போனான்.
மணி ஒரு இரண்டு இருக்கும், எழுந்து பாத்ரூம் செல்லலாம் என்று எழுந்தவனை கடந்து ஒரு சிறுவன் ஓடினான். அதே சிறுவன்...ஆனால் சட்டை.... எப்படி... அவன் தடத்தை துடைத்த துணி... அவன் மனதை ஏதோ போட்டு அழுத்துவது போல இருந்தது.
மீண்டும் வந்து படுத்தவனை தூக்கம் அணைக்கவில்லை. இரவு முழுவதும் ஒரே யோசனை... 'என்ன செய்யலாம்?.. உலகில் இன்னும் பலர், குழந்தைகள் மிகவும் அடித்தட்டில் இருக்கிறாகளே, தன்னால் ஏதாவது செய்ய முடியுமா? என்ன செய்ய முடியும்... நான் ஒரு சாதாரண மனிதன்... மனபலம் இருக்கலாம், பணபலம் வேண்டுமே. என்ன செய்வது? ஏது செய்வது?' என்று பலத்த சிந்தனையில் ஆழ்ந்து திரும்பி படுத்தவன் பார்வையில் 'இந்தியா 2020' பட்டது. Dr. அப்துல் கலாம், கனவு காண் என்று சொன்னது அவனது நினைவிற்கு வந்தது. அதில் ஒரு முடிவும் வந்தது.
காலை ஆறு மணி, நீலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலை அடைந்தது. உடனே தனது உயர் ரக போனை எடுத்து நண்பனுக்கு அலைபேசினான்.
'மச்சி... பிளான் மாத்திட்டேன்டா... சீரியஸ் மேட்டர் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் நேர்ல வந்து சொல்றேன்...' என்று துண்டித்தான்... அலைபேசி இணைப்பை...
தொடங்கினான் கனவு காண....
(இதில் பாதி கதை எனது நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
4 Comments:
//தனது புதிய மாடல் 1100 போனில்//
அப்போது பணக்கார மாணவர்கள் மட்டுமே அலைபேசி வைத்திருந்தனர்
@ சுரேஷ்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....
ஆனால் அந்த சமயத்தில்தான் அனைவரும் அலைபேசி உபயோகிக்க தொடங்கினர். ஏர்டெல், நானூறு ரூபாய்க்கு ஏர்டெல் டு ஏர்டெல் இலவசம் என்று கூறிய சமயம். அனைவரும் ஒரு சின்ன மொபைல் வாங்கி ஒரு ஏர்டெல் சிம் போட்ட சமயமது.
கதைகளம் நன்றாக சொல்ல பட்டு இருக்கிறது.வாழ்த்துக்கள்.
Good Story da.. Waiting for the next part
Post a Comment