ரேவதி ஆன்ட்டி வீட்டு எண்டில் இருந்து அப்பா பந்துடன் ஓடி வருகிறார். பந்தில் ஏதோ போட்டோக்கள் இருப்பது போல தெரிகிறது. விக்கெட் கீப்பராக அம்மா ஹெல்மெட் மாட்டி நின்றுள்ளார். கல்லியில் மாமாவும், பாய்ண்டில் அத்தையும், லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆனில் சித்தப்பா சித்தி என அனைவரும் களத்தில் துடுப்பாட்டக் காரரை அவுட் ஆக்க தயாராக உள்ள நிலையில். துடுப்புடன் நிற்கும் எனது நண்பன் அசாதியமாக பவுன்சரை யாருமில்லாத ஸ்லிப் திசையில் தூக்கி விட்டான். பிரமாதம்!! அடுத்த பந்து வர எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும்.
என்ன இது புது வித கமெண்ட்ரியா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. நீங்களும் இதை கடந்து வந்தவராகவோ, கடக்கப் போகிறவராகவோ இருப்பீர்கள். ஆமாம்.. இந்த 26-27 வயது வந்தாலே, பெற்றோர்கள் பிள்ளையை அவுட் ஆக்குவதில் குறியாக உள்ளனர். அதாங்க கல்யாணம். இதில் சுத்தி நம்ம சொந்தக்காரங்கா வேறு. இந்த மாதிரி பல பவுன்சர்களை சந்தித்து திக்கி திணறிக் கொண்டுள்ளனர் என் காலேஜ் மக்க. ஒரு.. ஒரு... வாரமா ஓட்டிட்டுஇருக்காங்க.
இதோ இதுவரைக்கும் ஆறு பேரு கிளீன் போல்ட் ஆகிவிட்டனர். அடுத்து ஏழு மற்றும் எட்டாவது விக்கெட் வரும் வெள்ளிக் கிழமை விழுகிறது. என்னத்த சொல்ல, சில பேரு வேணும்னே அவுட் ஆகுறாங்க. இப்போ நாம ப்ளேயர்ஸ்ல எத்தனை வகைன்னு பாப்போம்.
அடித்து ஆடுபவர்: சும்மா பந்து போடுவது யாராக இருந்தாலும், நம்ம ஷேவாக் மாதிரி அடி பின்னுவாங்க. கல்யாணம் வேணாம் நீங்க எதாவது சொன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் அப்படிங்கற பசங்க. 'மச்சி.. என்னடா அப்பாகிட்ட இப்படி பேசற?' அப்படினா.. 'ஸ்ட்ராங்கா இருக்கனும்டா.. இல்லாட்டி யார்கர் போட்ருவாங்க... நம்ம வாழ்கைய நாமதான் மச்சி வாழணும்.. இதுல கல்யாணம்னு அசிங்கமா பேசிக்கிட்டு.. எனக்குன்னு லட்சியம் இருக்குடா' என்று சொல்லும் லட்சியத்தை மனைவியாக கொண்ட லட்சிய புருஷர்கள்.
நிறுத்தி ஆடுபவர்: இவர் நம்ம திராவிட் மாதிரி. எந்த பால் போட்டாலும் அவுட் ஆக்கவே முடியாது. பிட்ச்லையே பால் இருக்கும். ரன்னும் அடிக்க மாட்டாங்க, அவுட்டும் ஆகா மாட்டாங்க. 'கல்யாணம் பண்ணிக்கோடா அதான் வேல கெடச்சு நல்ல நிலைமையில இருக்க இல்ல...' என்று சொல்லும் அப்பாவிடம். 'பண்ணிக்கலாம் பா... கொஞ்ச நாள் போகட்டும்' என்று நாள் கடத்துபவர்கள்.
நைட் வாச்மன்: இப்போது இவர் இறங்கமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பொசுக்கென்று இவர் இறங்கிவிடுவார், அவசர அவசரமாக அவுட் ஆகியும் விடுவார். அதுமாதிரி, இவனுக்கெல்லாம் எங்கடா இப்போ அப்படின்னு நினைக்கும்போது. சல்ல்... என்று களத்தில் இறங்கி..'மச்சி...அடுத்த மாசம் பனிரெண்டாம் தேதி கல்யாணம்' என்று சொல்லும் கும்பல்.
மேட்ச் பிக்சர்: இவர்களே அப்பாவிடம் பந்தை கொடுத்து போட சொல்லி அவுட் ஆகிறவர்கள். அதாங்க நம்ம லவ் பண்ணற பசங்க. 'வேலில போற ஓணான வேட்டில விட்டுக்கரவங்க'.
டெயில் என்டர்: இவங்க களத்துல இறங்கரத்துக்கு பதிலா, அவுட் ஆயிக்கறேன்னு ஒத்துப்பாங்க. இவங்க அப்பா பந்தே போட வேணாம்.. 'என்னப்பா..இந்த பொண்ணு.....' என்று கேள்வியை முடிப்பதற்குள் 'சரிப்பா....' என்று சொல்லும் பசங்க.
மேட்ச் ரத்து: பசங்க ஆடி அவுட் ஆகணும்னு ஆசையா இருப்பாங்க... அவங்க அப்பா, அம்மா பந்து போடமாட்டேன்னு கறாரா சொல்லிடுவாங்க. இதுனால ஆட்டம் ரத்தாயிடும்.
டிக்ளேர் செய்பவர்: சுத்தி முத்தி நிக்கும் சொந்தக் காரங்க அத்தனை பெரும் செய்கின்ற டார்ச்சர் தாங்காமல்... 'சரி... பண்ணி தொலைச்சுக்கறேன்' என்று சொல்லும் பசங்க.
அதெல்லாம் சரி... நீ எதுல எந்த ரகம்னு கேக்குறது தெரியுது. நாம களம் இறங்கினாத்தான... 'ஐயோ.. உடம்பு வலிக்குதே.. காய்ச்சல் வர மாதிரி இருக்கே' அப்படி என்று டீமில் இடம் பெறாத வீரர் போல, இதோ படிக்க ஓடி வந்துட்டோம் இல்ல. அப்படியே பசங்கலாம் எப்படி சமாளிக்கராங்கங்கரத பாத்து.. நெளிவு சுளிவுகளை கத்துக்கறேன்.
இதுல இப்பவரைக்கும், நம்ம டெயில் என்டர்கள் கல்யாணம் நடந்து வருகிறது. மேட்ச் பிக்சர்களும் தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். நிறுத்தி ஆடுபவர்தான் நம்ம ஆளுங்க, நெளிவு சுளிவு சொல்லித்தராங்க. நைட் வாச்மன் எப்ப வருவாங்கன்னு தெரில.
நம்ம கிளாசுல மகளிர் டீமும் உண்டுங்க... அவங்கலாம் சரியான சொத்தை... இன்னும் ஒரு நாலு மாசத்துல ஆல் அவுட் ஆயிடுவாங்க போல இருக்கு. எல்லாருமே டெயில் என்டர்தான். இங்க பல பேரு படிக்க வராங்க. நம்ம கிளாஸ் பொண்ணுங்க பலபேருக்கு மேல படிக்கணும்னு ஆச இல்லையேன்னு நினைக்கும் போது. தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்கராங்களோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்ன சொல்றது? இருக்கற ரெண்டு மூணு பேராவது பாத்து ஆடின சரி.
இதோ வர வெள்ளிக்கிழமை, கிளாஸ் பசங்க ரெண்டு பேருக்கு கல்யாணம். இதோட எட்டு விக்கெட்...என்னதான் நாம கிண்டல் பண்ணினாலும். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் என் இரு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நம்மதான் போக முடில.... இங்க இருந்தே வாழ்த்துவோம்... 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்'
பிச்சம்மை மெஸ்- நுங்கம்பாக்கம்.
19 hours ago
3 Comments:
கார்த்திக் படித்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அருமையான ஒப்பிடு.
உங்க விக்கெட் எப்படி விழுகிறது என்று பார்ப்போம்.
நண்பர்கள் ஒவ்வொருவரையும் நீர் குறிப்பிட்ட பிரிவோடு ஒப்பிட்டு பார்த்தேன்....சிரிப்பு தாளவில்லை..மிகச் சரியாக வகைபடுத்தி இருக்கிறீர். பார்க்கலாம் அடுத்த வருடம் அவுட் ஆகப் போறேன் என்று அறிக்கை குடுப்பவர்கள் இன்னும் எத்தனை பேரென்று....:-)
jil jil avargale nalla vazhthirukeenga mana makkalai..
koodave moipanam rs.500 um vachuteengana nannaa irukkum ;-)
Post a Comment