சுற்றிலும் இரைந்து கிடந்த துணிகளும், சுருட்டி வைக்காத படுக்கையும், காப்பிக் கரை படிந்த கார்பெட்டும், டேபிளின் மேலிருந்த சிப்ஸ் பாக்கெட்டும் கீழே சிந்தியிருக்கும் இரண்டு சிப்ஸும் அமெரிக்க வாழ் இந்திய பேசிலர்ஸ் அறை என்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது.
சனிக்கிழமை காலை - 11:00
வெள்ளி மாலை முழுவதும் அந்த வார அலுப்பு தீர ஆட்டம் போட்டு விட்டு வந்து படுத்ததால் பனிரெண்டு மணிக்கு குறைந்து எழுந்தால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்பது போல மெய் மறந்து தூங்கும் கூட்டம் இவர்கள். சந்தோஷ் எப்போதும் இல்லாமல் இன்று சற்று முன்னமே எழந்து, குளித்து ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தான். முகுந்த் தூக்கம் கலைந்தும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல், புரண்டு படுத்தான்.
‘என்னடா சீக்கரமா எழுந்துட்ட?’ சந்தோஷிடம் முகுந்த்.
‘மித்ராவ மீட் பண்ண போறேன்’ - மித்ரா அவனுடய கேர்ள் ஃபிரெண்ட்.
‘டேய், மதியானதுக்கு மட்டர் பனீர் பண்றேன்னு சொன்ன?’ - அவனவன் விஷயம் அவனுக்கு.
‘இல்ல நாளைக்கு பார்க்கலாம்’
’அப்போ இன்னிக்கும் டகோ பெல் சோறா...ரைட்டு....என்னடா டெபுல டக் அவுட்டான பேட்ஸ்மன் மாதிரி இருக்க, ஏதாவது பிரச்சனையா? எனி டிஸ்பூட்?’ - காலையில் எழுந்தவுடன் மொக்கை போட ஆரமித்தான் முகுந்த்.
‘...’
‘சரி காஃபி ரெடி பண்றா நான் போய் பல்லு வெலக்கிட்டு வரேன்’
‘டேய் நான் உன்கூட பேசணும்’ - சந்தோஷ் வாய் திறந்தான்.
‘என்ன காதல் பிரச்சனையா... பேசிலர்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா... சரி இரு வரேன்..’ என்று பாத்ரூமினுள் சென்று கதவை தாளிட்டான்.
மன்மத லீலையில் ஆரமித்து கிளிமஞ்சாரோ வரை அவன் பாடி வெளியே வர பத்து நிமிடங்கள் பிடித்தது.
‘டேய்.. நீ இன்னும் காப்பி ரெடி பண்ணலயா... லவ் பண்ணுங்கடா நண்பனுக்கு காப்பி போட்டுட்டே லவ் பண்ணுங்க... ’
‘என்ன பிரச்சனை?’ சந்தோஷிடம் அமர்ந்தான்
’நீ நேத்து குணாகிட்ட அப்படி பேசிருக்க கூடாது....’ சந்தோஷ் அவன் கண்களைப் பார்த்து சொன்னான்
வெள்ளிக்கிழமை- இரவு 9:30
இடம் : எமினெம் பப்
சந்தோஷும், முகுந்தும் வேலை முடிந்து வெள்ளைக்காரிகளை சைட் அடிக்க தெரிவு செய்திருந்த்த தோதான இடம். சந்தோஷ் அவ்வப்போது பீர் மற்றும் சில பல விஸ்கி கலந்து அடிப்பவன். முகுந்த் பப் சென்று பச்சைத் தண்ணீர் சாப்பிடும் ஜாதி. இவர்களது நண்பன் குணா அங்கு ஒரு பெண்ணுடன் வர....
‘டேய் மச்சான்... எப்படிடா இருக்க..’ சந்தோஷ் விசாரிக்க..
‘சூப்பர் டா... ஒரு நிமிஷம் டா வந்துறேன்’ என்று கூறி குணா கவுண்டர் நோக்கி சென்று.. தனக்கு ஒரு பீரும், தன்னுடன் வந்த பெண்ணிற்க்கு ஒரு பீரும் வாங்கி வந்தான்.
‘என்னடா சரக்கு வாங்கி ஃபிகர் கரெக்ட் பண்றயா... மச்சம் டா’ முகுந்த் கள்ள சிரிப்புடன் கேட்க
‘டேய்.. இது என் சிஸ்டர் டா... இங்க படிக்க வந்துருக்கா’ என்று குணா கூற. முகுந்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு
‘என்னடா தங்கச்சிக்கு பீர் வாங்கித்தர... பூ வாங்கித்தர அண்ணன் பார்த்துருக்கேன், பீர் வாங்கித்தர அண்ணன் நீதாண்டா... கலாச்சாரம் வளருது....’
‘டேய்.. அவ இந்த காலத்து பொண்ணுடா... அதுவும் அமெரிக்கால படிக்கறா... இதெல்லாம் இருக்கறதுதான் மச்சி...’ சந்தோஷ் குணாவிற்க்கு சப்போர்ட் செய்தான். குணா அந்த பக்கம் திரும்பி இருந்ததால் முகுந்த் சந்தோஷிடம் ரகசியமாக சொல்கிறேன் என்று நினைத்து கொஞ்சம் சத்தம் போட்டே ‘என்னடா நீயும் இப்படி பேசர...இன்னிக்கு பீர் வாங்கித்தருவான்... நாளைக்கு வேற எங்கயாவது அனுப்புவான்...’ இதை காதில் வாங்கிய குணா...
‘டேய்.. நீ ஓவரா பேசர.. திஸ் இஸ் த லிமிட்.. ‘ என்று கூறி தனது தங்கையை கூட்டிக்கொண்டு வேறு பக்கம் சென்றான். சந்தோஷ் முகுந்தை முறைத்தான், முகுந்த் தான் கேட்டதில் தப்பேதும் இல்லை என்பது போல் கையசைத்தான்.
முகுந்தும் சந்தோஷும் அதன் பிறகு பேசிக்கொள்ளவே இல்லை. முகுந்தும் காலையில் எல்லாம் சரியாயிடும் என்று விட்டுவிட்டான். வீட்டிற்க்கு வந்து படுத்தவர்கள் விரைவில் தூங்கினர்.
இன்று.....
‘ஓ.. அதுதான் உன் பிரச்சனையா?... நான் கேட்டதுல என்ன தப்பு, உனக்கும் ஒரு தங்கை இருக்கா அவளுக்கு நீ பீர் வாங்கி குடுப்பயா?’ - முகுந்த் தன் கேள்வியை வைத்தான்.
‘டேய் இது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம் டா. நான் பண்ணமாட்டேங்கறதுக்காக யாருமே பண்ணக்கூடாதுன்னு நெனைக்கறது தப்பு..’ - சந்தோஷ்.
’என் ப்ரெண்ட் தங்கை எனக்கும் தங்கை... நான் உரிமை எடுத்துக்கறது தப்பா? அதுவுமில்லாம நம்ம கலாச்சாரம், பண்பாடுன்னு இருக்கில்ல, இவனுங்களுக்குதான் அதெல்லாம் இல்ல’
‘அப்படி நீ நெனச்சுருந்த்தா தன்மையா சொல்லிருக்கலாம், நீ சொன்ன விதம் தப்பு. வென் யூ ஆர் இன் ரோம் பீ ய ரோமன் அப்படின்னு சொல்லிருக்காங்க அதுப்படி அவ நடத்துருக்கலாம் இல்ல’ -சந்தோஷ்
‘உடனே இத சொல்லிருங்க... இத நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணாதீங்க. வெள்ளக்காரன் காலைல்ல 7 மணிக்கு வேல செய்ய ஆரமிச்சா 4 மணி வரைக்கும் வேல மட்டும்தான் செய்வான். நம்ம ஆளுங்க வேல ஆரமிக்கரதே 11 மணிக்கு அதுக்குள்ள காப்பி, சாப்பாடு எல்லாம். அவன் வேல முடிக்கும் போதுதான் நம்ம வேல ஆரமிக்கரதே. இதுக்கெல்லாம் ரோமனா மாறாதீங்க..’
’சரி..ஒத்துக்கறேன்..பட் கலாச்சாரம்ன்ன என்ன?’
‘மாரல் அண்ட் எதிகல் வேல்யூஸ் ஆஃப் த சொஸைட்டி...’
‘வேல்யூஸ் எங்க இருக்கு, நீ கமல் வீடியோ பார்த்த இல்ல. அவர் என்ன சொன்னார் கலாச்சாரம்ங்கற்து காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டு வருதுன்னு சொல்லல’
‘பொதுவா சொன்னத இதோட முடிச்சு போடாத.. பெண்களை நம்பி நாடே இருக்குடா, வருங்கால இந்தியாவே அவங்கள நம்பிதான் இருக்கு. வீட்ல குழந்தைங்க முன்னாடி தண்ணி அடிச்சா என்ன ஆகும்’ - முகுந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
’அவங்கள பாத்துக்க அவங்களுக்கு தெரியும்டா...’
‘இதுதாண்டா நாம பண்ற தப்பு, ஆம்பளைங்க தண்ணி அடிக்க ஆரமிக்கும்போது இப்படிதான் விட்டாங்க, இப்போ அது டாஸ்மாக் விருட்சமா வளர்ந்த்துருக்கு. எத்தனை குடும்பங்களோட ஒரு நாள் சோறுக்கு தேவையான காசு டாஸ்மாக்க்கு போகுதுன்னு தெரியுமா? இத இப்படியே விடக் கூடாதுடா, முளையிலே கிள்ளி எறியணும், இருக்கற கலாசாரமாவது மிஞ்சும்’
‘கலாசாரம்.. கலாசாரம்ன்னு நீ சொல்றது சிரிப்புதாண்டா வருது. எங்கடா இருக்கு கலாசாரம். அம்மா, அப்பாவ கவனிச்சுக்கறது நம்ம கலாசாரம், அப்போ ஏன் இத்தனை முதியோர் இல்லம். தமிழ் கத்துகறது நம்ம கலாசாரம், ஆனா இன்னிக்கு தமிழ் தெரிலைன்ன பெருமைப் பட்டுக்கறோம். ஒருத்தனுக்கு ஒருத்திங்கறது நம்ம கலாசாரம், அப்புறம் ஏன் நாம எய்ட்ஸ்ல முன்னாடி நிக்கறோம். ஏதாவது ஒரு கலை கத்துக்கறது நம்ம கலாசாரம், நமக்கு சினிமா பாட்ட விட்ட எதும் தெரியாது. நீகூடதான் அந்த பொண்ண பாத்த உடனே ஃபிகர் அப்படி இப்படின்னு பேசின அது கூடதான் கலாச்சாரம் இல்ல... இப்படி அடுக்கிட்டே போகலாம். இப்போ சொல்லு எங்க இருக்கு நம்ம கலாசாரம்.’ - சந்தோஷ் தெளிவாக பேசினான்.
‘அதெல்லாம், நாமதான் மாத்தணும்.’ - முகுந்த்
‘அப்போ இங்க உக்காந்து என்ன பண்ற... இந்திய கலாசாரம்ன்னு ஒன்னு இருந்தது, அத யாரும் இப்போ ஃபாலோ பண்றதில்லங்கறதுதான் உண்மை.... சரி நான் கிளம்பறேன்... நல்லா யோசிச்சுப் பாரு...’ என்று கூறி சந்தோஷ் வெளியே சென்று கதவை சாத்தினான்.
முகுந்த் சிறிது நேரம் வெறித்து விட்டு இந்திய கலாசரத்தை தெரிந்து கொள்ள இணையதளத்தை தட்டினான். இந்திய கலாசாரம் ஃபேஸ்புக்கில் இருந்தது, அதை 2560 மக்கள் ஃபாலோ செய்துகொண்டிருந்தனர்....