Monday, December 06, 2010

சுடச்சுட பாடல்

இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...


யூட்யூப் அது இதுன்னு இன்னிக்கு எப்படியோ மக்கள் கண்டுபுடிக்கறது தெரிஞ்சும் நம்ம GV சுட்றார்ன்னா.. அவர் தன்னம்பிக்கையை பாராட்டியேயாக வேண்டும். எதோ அந்த காலத்தில் தேவா மைக்கல் ஜாக்சனிடமிருந்து கொஞ்சம் ஆறிப்போன டீ, ஊசிப்போன வடை அந்த மாதிரி சுடுவார் மக்களுக்கும் தெரியாது, ஆனா நம்ம புள்ள சுடச்சுட போட்ற பணியாரத்த ஆட்டைய போட்றார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துல ’உன் மேல ஆசதான்...’ பாட்டு சர்வம் படத்தின் ‘அடடாவா அடிக்கலாம்..’ மாதிரி இருந்தது. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் சரி ஆயிரத்தில் ஒருவனிலும் சரி ’பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பின்னணி சரமாரியாக தெரிந்தது. இது எல்லாம் தெரிந்தும் அவருக்கு எதுக்கு சான்ஸ். சினி ஃபீல்டில் இருக்கும் கேபிள் சார் மாதிரி ஆட்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதே போல யுவனும் வாமனன் படத்தில் ‘ஒரு தேவதை..’ பாடலை ஆஜா நச்லே படத்தில் வரும் ‘ஒரே பியா..’ என்னும் பாடலை தழுவி இசையமைத்திருப்பார். அதுவும் ஒரு சுடல்தான்.இதை இங்கே கேளுங்கள்.

எனக்கு தெரிஞ்சு நியாயமான இரண்டு இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் DSP - அவர்களது இசையை மட்டுமே காப்பியடிப்பார்கள். எப்போதும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

இப்படி ஆளளுக்கு சுட்டு சுட்டு பாட்டு போட்டா ஒரு மனுஷன் நம்பிக்கையோட ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல... இதுக்கு என்ன பண்ணலாம்.

டிஸ்கி: ’ஓரே பியா..’ பாடிய ராஹத் ஃபதே அலி கான், நுஸ்ரத் ஃபதே அலி கானின் சகோதரரின் மகன். முடிந்தால் அவரது அனைத்து படப்பாடல்கள் மற்றும் கவாலி பாடல்களை கேட்டுப் பாருங்கள்.


Thursday, November 25, 2010

கலாச்சாரம் எங்கே இருக்கிறது?

சுற்றிலும் இரைந்து கிடந்த துணிகளும், சுருட்டி வைக்காத படுக்கையும், காப்பிக் கரை படிந்த கார்பெட்டும், டேபிளின் மேலிருந்த சிப்ஸ் பாக்கெட்டும் கீழே சிந்தியிருக்கும் இரண்டு சிப்ஸும் அமெரிக்க வாழ் இந்திய பேசிலர்ஸ் அறை என்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது.


சனிக்கிழமை காலை - 11:00

வெள்ளி மாலை முழுவதும் அந்த வார அலுப்பு தீர ஆட்டம் போட்டு விட்டு வந்து படுத்ததால் பனிரெண்டு மணிக்கு குறைந்து எழுந்தால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்பது போல மெய் மறந்து தூங்கும் கூட்டம் இவர்கள். சந்தோஷ் எப்போதும் இல்லாமல் இன்று சற்று முன்னமே எழந்து, குளித்து ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தான். முகுந்த் தூக்கம் கலைந்தும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல், புரண்டு படுத்தான்.

‘என்னடா சீக்கரமா எழுந்துட்ட?’ சந்தோஷிடம் முகுந்த்.
‘மித்ராவ மீட் பண்ண போறேன்’ - மித்ரா அவனுடய கேர்ள் ஃபிரெண்ட்.
‘டேய், மதியானதுக்கு மட்டர் பனீர் பண்றேன்னு சொன்ன?’ - அவனவன் விஷயம் அவனுக்கு.
‘இல்ல நாளைக்கு பார்க்கலாம்’
’அப்போ இன்னிக்கும் டகோ பெல் சோறா...ரைட்டு....என்னடா டெபுல டக் அவுட்டான பேட்ஸ்மன் மாதிரி இருக்க, ஏதாவது பிரச்சனையா? எனி டிஸ்பூட்?’ - காலையில் எழுந்தவுடன் மொக்கை போட ஆரமித்தான் முகுந்த்.
‘...’
‘சரி காஃபி ரெடி பண்றா நான் போய் பல்லு வெலக்கிட்டு வரேன்’
‘டேய் நான் உன்கூட பேசணும்’ - சந்தோஷ் வாய் திறந்தான்.
‘என்ன காதல் பிரச்சனையா... பேசிலர்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா... சரி இரு வரேன்..’ என்று பாத்ரூமினுள் சென்று கதவை தாளிட்டான்.

மன்மத லீலையில் ஆரமித்து கிளிமஞ்சாரோ வரை அவன் பாடி வெளியே வர பத்து நிமிடங்கள் பிடித்தது.

‘டேய்.. நீ இன்னும் காப்பி ரெடி பண்ணலயா... லவ் பண்ணுங்கடா நண்பனுக்கு காப்பி போட்டுட்டே லவ் பண்ணுங்க... ’
‘என்ன பிரச்சனை?’ சந்தோஷிடம் அமர்ந்தான்
’நீ நேத்து குணாகிட்ட அப்படி பேசிருக்க கூடாது....’ சந்தோஷ் அவன் கண்களைப் பார்த்து சொன்னான்

வெள்ளிக்கிழமை- இரவு 9:30
இடம் : எமினெம் பப்

சந்தோஷும், முகுந்தும் வேலை முடிந்து வெள்ளைக்காரிகளை சைட் அடிக்க தெரிவு செய்திருந்த்த தோதான இடம். சந்தோஷ் அவ்வப்போது பீர் மற்றும் சில பல விஸ்கி கலந்து அடிப்பவன். முகுந்த் பப் சென்று பச்சைத் தண்ணீர் சாப்பிடும் ஜாதி. இவர்களது நண்பன் குணா அங்கு ஒரு பெண்ணுடன் வர....

‘டேய் மச்சான்... எப்படிடா இருக்க..’ சந்தோஷ் விசாரிக்க..
‘சூப்பர் டா... ஒரு நிமிஷம் டா வந்துறேன்’ என்று கூறி குணா கவுண்டர் நோக்கி சென்று.. தனக்கு ஒரு பீரும், தன்னுடன் வந்த பெண்ணிற்க்கு ஒரு பீரும் வாங்கி வந்தான்.
‘என்னடா சரக்கு வாங்கி ஃபிகர் கரெக்ட் பண்றயா... மச்சம் டா’ முகுந்த் கள்ள சிரிப்புடன் கேட்க
‘டேய்.. இது என் சிஸ்டர் டா... இங்க படிக்க வந்துருக்கா’ என்று குணா கூற. முகுந்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு
‘என்னடா தங்கச்சிக்கு பீர் வாங்கித்தர... பூ வாங்கித்தர அண்ணன் பார்த்துருக்கேன், பீர் வாங்கித்தர அண்ணன் நீதாண்டா... கலாச்சாரம் வளருது....’
‘டேய்.. அவ இந்த காலத்து பொண்ணுடா... அதுவும் அமெரிக்கால படிக்கறா... இதெல்லாம் இருக்கறதுதான் மச்சி...’ சந்தோஷ் குணாவிற்க்கு சப்போர்ட் செய்தான். குணா அந்த பக்கம் திரும்பி இருந்ததால் முகுந்த் சந்தோஷிடம் ரகசியமாக சொல்கிறேன் என்று நினைத்து கொஞ்சம் சத்தம் போட்டே ‘என்னடா நீயும் இப்படி பேசர...இன்னிக்கு பீர் வாங்கித்தருவான்... நாளைக்கு வேற எங்கயாவது அனுப்புவான்...’ இதை காதில் வாங்கிய குணா...
‘டேய்.. நீ ஓவரா பேசர.. திஸ் இஸ் த லிமிட்.. ‘ என்று கூறி தனது தங்கையை கூட்டிக்கொண்டு வேறு பக்கம் சென்றான். சந்தோஷ் முகுந்தை முறைத்தான், முகுந்த் தான் கேட்டதில் தப்பேதும் இல்லை என்பது போல் கையசைத்தான்.
முகுந்தும் சந்தோஷும் அதன் பிறகு பேசிக்கொள்ளவே இல்லை. முகுந்தும் காலையில் எல்லாம் சரியாயிடும் என்று விட்டுவிட்டான். வீட்டிற்க்கு வந்து படுத்தவர்கள் விரைவில் தூங்கினர்.

இன்று.....

‘ஓ.. அதுதான் உன் பிரச்சனையா?... நான் கேட்டதுல என்ன தப்பு, உனக்கும் ஒரு தங்கை இருக்கா அவளுக்கு நீ பீர் வாங்கி குடுப்பயா?’ - முகுந்த் தன் கேள்வியை வைத்தான்.
‘டேய் இது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம் டா. நான் பண்ணமாட்டேங்கறதுக்காக யாருமே பண்ணக்கூடாதுன்னு நெனைக்கறது தப்பு..’ - சந்தோஷ்.
’என் ப்ரெண்ட் தங்கை எனக்கும் தங்கை... நான் உரிமை எடுத்துக்கறது தப்பா? அதுவுமில்லாம நம்ம கலாச்சாரம், பண்பாடுன்னு இருக்கில்ல, இவனுங்களுக்குதான் அதெல்லாம் இல்ல’
‘அப்படி நீ நெனச்சுருந்த்தா தன்மையா சொல்லிருக்கலாம், நீ சொன்ன விதம் தப்பு. வென் யூ ஆர் இன் ரோம் பீ ய ரோமன் அப்படின்னு சொல்லிருக்காங்க அதுப்படி அவ நடத்துருக்கலாம் இல்ல’ -சந்தோஷ்
‘உடனே இத சொல்லிருங்க... இத நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணாதீங்க. வெள்ளக்காரன் காலைல்ல 7 மணிக்கு வேல செய்ய ஆரமிச்சா 4 மணி வரைக்கும் வேல மட்டும்தான் செய்வான். நம்ம ஆளுங்க வேல ஆரமிக்கரதே 11 மணிக்கு அதுக்குள்ள காப்பி, சாப்பாடு எல்லாம். அவன் வேல முடிக்கும் போதுதான் நம்ம வேல ஆரமிக்கரதே. இதுக்கெல்லாம் ரோமனா மாறாதீங்க..’
’சரி..ஒத்துக்கறேன்..பட் கலாச்சாரம்ன்ன என்ன?’
‘மாரல் அண்ட் எதிகல் வேல்யூஸ் ஆஃப் த சொஸைட்டி...’
‘வேல்யூஸ் எங்க இருக்கு, நீ கமல் வீடியோ பார்த்த இல்ல. அவர் என்ன சொன்னார் கலாச்சாரம்ங்கற்து காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டு வருதுன்னு சொல்லல’
‘பொதுவா சொன்னத இதோட முடிச்சு போடாத.. பெண்களை நம்பி நாடே இருக்குடா, வருங்கால இந்தியாவே அவங்கள நம்பிதான் இருக்கு. வீட்ல குழந்தைங்க முன்னாடி தண்ணி அடிச்சா என்ன ஆகும்’ - முகுந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
’அவங்கள பாத்துக்க அவங்களுக்கு தெரியும்டா...’
‘இதுதாண்டா நாம பண்ற தப்பு, ஆம்பளைங்க தண்ணி அடிக்க ஆரமிக்கும்போது இப்படிதான் விட்டாங்க, இப்போ அது டாஸ்மாக் விருட்சமா வளர்ந்த்துருக்கு. எத்தனை குடும்பங்களோட ஒரு நாள் சோறுக்கு தேவையான காசு டாஸ்மாக்க்கு போகுதுன்னு தெரியுமா? இத இப்படியே விடக் கூடாதுடா, முளையிலே கிள்ளி எறியணும், இருக்கற கலாசாரமாவது மிஞ்சும்’
‘கலாசாரம்.. கலாசாரம்ன்னு நீ சொல்றது சிரிப்புதாண்டா வருது. எங்கடா இருக்கு கலாசாரம். அம்மா, அப்பாவ கவனிச்சுக்கறது நம்ம கலாசாரம், அப்போ ஏன் இத்தனை முதியோர் இல்லம். தமிழ் கத்துகறது நம்ம கலாசாரம், ஆனா இன்னிக்கு தமிழ் தெரிலைன்ன பெருமைப் பட்டுக்கறோம். ஒருத்தனுக்கு ஒருத்திங்கறது நம்ம கலாசாரம், அப்புறம் ஏன் நாம எய்ட்ஸ்ல முன்னாடி நிக்கறோம். ஏதாவது ஒரு கலை கத்துக்கறது நம்ம கலாசாரம், நமக்கு சினிமா பாட்ட விட்ட எதும் தெரியாது. நீகூடதான் அந்த பொண்ண பாத்த உடனே ஃபிகர் அப்படி இப்படின்னு பேசின அது கூடதான் கலாச்சாரம் இல்ல... இப்படி அடுக்கிட்டே போகலாம். இப்போ சொல்லு எங்க இருக்கு நம்ம கலாசாரம்.’ - சந்தோஷ் தெளிவாக பேசினான்.
‘அதெல்லாம், நாமதான் மாத்தணும்.’ - முகுந்த்
‘அப்போ இங்க உக்காந்து என்ன பண்ற... இந்திய கலாசாரம்ன்னு ஒன்னு இருந்தது, அத யாரும் இப்போ ஃபாலோ பண்றதில்லங்கறதுதான் உண்மை.... சரி நான் கிளம்பறேன்... நல்லா யோசிச்சுப் பாரு...’ என்று கூறி சந்தோஷ் வெளியே சென்று கதவை சாத்தினான்.
முகுந்த் சிறிது நேரம் வெறித்து விட்டு இந்திய கலாசரத்தை தெரிந்து கொள்ள இணையதளத்தை தட்டினான். இந்திய கலாசாரம் ஃபேஸ்புக்கில் இருந்தது, அதை 2560 மக்கள் ஃபாலோ செய்துகொண்டிருந்தனர்....


Saturday, August 07, 2010

ரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்

’..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

-----------------------------------------------------------------------------
என் பேர் கோபால். எல்லாரப் போலவும் படிச்சிட்டு, வேலை வாங்கி சென்னைல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு இப்போ அமெரிக்கால வந்து ட்ராஷ் கொட்டிட்டு இருக்கேன். விஜி, என் அக்கா, பொறுமைசாலி எதையும் நிறுத்தி நிதானமாய் செய்பவள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள். அது என்னமோ தெரில எனக்கு விவரம் தெரிஞ்சு பொறந்தால பசங்க மேல எனக்கு அவ்வளவு பிரியம்.
ஒரு மாமா என்ன பண்ணனும்ன்னு என் நண்பர்கள் என்ன பாத்துதான் கத்துகிட்டங்க.

எனக்கு பாசத்த பேச்சுல காட்றது பிடிக்காது. எதுன்னாலும் செயல்ல இருக்கணும். இந்தியாவில இருக்கும் போதே அவங்களுக்கு பிடிச்ச விஷயத்த செய்யாம இருக்க மாட்டேன். இங்க வந்து சொல்லணுமா?

போன தடவ ஊருக்கு போறத்துக்கு முன்னாடி போன் பண்ணினேன்.

‘ஏய் பசங்களா, என்ன வேணும் உங்களுக்கு?’
‘கலர் பென்சில், கலர் பேனா, வீடியோ கேம், .......’ என்று அவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போனது....
விஜி அவர்களிடம்... ‘ஹேய்.. போதும்டா எவ்வள்வுடா வாங்கிட்டு வருவான் அவன்...’ என்று அதட்டினாள். நான் அவளை அதட்டினேன்.

இந்தியா சென்றபோது அவர்கள் எதிர் பார்த்ததை விட நிறைய பொருட்கள் வாங்கிச் சென்றேன். பசங்களை ஏமாற்றுவது என்றும் எனக்கு பிடிக்காது. என் அக்காவோ, சின்ன ஏமாற்றங்கள் இருக்கணும்ன்னு சொல்லுவாள். அப்போதான் பிள்ளைங்க பிற்காலத்துல ஏமாற்றங்களை தாங்குவாங்களாம். சுத்தப் பேத்தல்.

அன்று அவர்கள் அந்த பேனாவில் எழுதி மகிழ்ந்தது, யப்பா என்ன சந்தோஷம். ‘டேய் கோபால் சாதிச்சுட்ட’ அப்படின்னு எனக்கு நானே தோள் தட்டிக்கொண்டேன். இந்தியப் பயணம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு தொலைபேசினேன், அப்போதுதான் கல்யாணி (அக்கா மகள்) சொன்னாள்

‘மாமா... நீ வாங்கிட்டு வந்ததுல எனக்கு ரெட் கலர் பேனாதான் பிடிச்சது.... ஆனா அது தொலஞ்சுபோச்சு’
‘சரி... நான் வாங்கி அனுப்பறேன்..’ என்று கூறினேன்.
‘சூப்பர் மாமா’ என்று குதுகலித்தாள்.

அடுத்த நாள் கல்யாணி எனக்கு போன் செய்தாள்.
‘என்னடா கல்லுக் குட்டி...’
’மாமா... அந்த ரெட் பேனாவ திருட்டு ராதிகாதான் எடுத்திருக்கா, மல்லிக்கா மிஸ் குடுத்தாங்க’ என்றாள்.
’ஏய்... அப்படி சொல்லதன்னு சொல்லிருக்கேன் இல்ல...’ சட்டென விஜி போனை வாங்கினாள்.

‘டேய்... அந்த ராதிகா, மல்லிக்கா மிஸ் பொண்ணு. அவங்களுக்கு இருக்கற வருமானமே தையல் மிஷனும், டியூஷனும்தான். சரி நாமளும் உதவி பண்ணின மாதிரி இருக்கும், பசங்களும் படிச்ச மாதிரி இருக்கும்ன்னு டியூஷன் அனுப்பினேன்’

‘ஹ்ம்ம்..’

‘அந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பேனாவெல்லாம் வாங்கற வசதி இல்ல. சின்ன பொண்ணு பார்த்ததும் ஆசப் பட்டு எடுத்துட்டா. இது அந்த பொண்ணு தப்பும் இல்ல அறியாப் பொண்ணு. இப்போ இதுனால அந்த பொண்ண எல்லாரும் திருட்டு ராதிகான்னு கூப்பிடறாங்க. இவக்கிட்ட சொல்லிருக்கேன், இன்னொரு தடவ அப்படி சொன்ன சூடு போடுவேன் அப்படின்னு ’

‘சரி அதான் பேனா வந்துருசில்ல’

‘பேனா வந்துருச்சு. ஆனா அந்த பொண்ணு மனசுல இந்த தப்பான எண்ணம் வர நாம காரணம் இல்லயா? இது மாதிரி நாம செய்யற சின்ன விஷயம் பெரிய மாறுதல்கள சமுதாயத்துல ஏற்படுத்துது. இதுல ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

அவள் கடைசியில் சொன்ன வார்த்தைகள் எனது எண்ணங்களை புரட்டிப் போட்டது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். ஆனா ஏதாவது செஞ்சுதான் ஆகணும். பசங்களும் சந்தோஷமா இருக்கணும், சமுதாயமும் இதுனால கெடக் கூடாது. எதாவது வழி இருந்த்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்......






Wednesday, May 19, 2010

நேற்று பெய்த மழையில்...


இந்த கதையை சென்னையை ஆட்டுவிக்கும் லைலா புயலுக்கு சமர்பிக்கிறேன்.

புகைப்படம்: நன்றி அவ்யுக்தா கீர்த்தி

நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையில், இன்று ஈரச்சேலை அணிந்திருந்தாள் சாலைப்பெண். மழை நீரை குடித்து பள்ளங்கள் தங்களது வயிற்றை நிரப்பி காட்சியளித்தன.

"யூஸ்லெஸ் ஃபெல்லோ" என்று சத்தமாக கத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்துகொண்டிருந்தார் திருவாளர் காளிதாஸ். தாஸ் அண்ட் கோ முதலாளி. சாதாரணமாக இருந்த தொழிலை இன்று பல நாடுகளுக்கு கொண்டு சென்றவர். வேலை விஷயத்தில் பயங்கர கறார் பேர்வழி.சொன்ன நேரத்தில் சொன்ன வேலை முடியவில்லை என்றால் மனிதன் ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். சில நேரங்களில் இவர் மனிதாபிமானமற்றவர் என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு நடப்பார். இவ்வளவு கோவக்காரறாய் இருந்தாலும், தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால், அனைவரையும் தனது பிள்ளையை போல பார்த்துக்கொள்வார்.
'எல்லாருக்கும் பொறுப்பு இருக்கணும்ன்னு நெனைக்கறது தப்பா?' என்று கேட்பார்.
'அதுக்குன்னு அவங்களுக்கு வேற முக்கியமான வேல இருக்கலாம் இல்லீங்களா?' என்றால்.
'அவனுக்கு என்ன குடி முழுகி போற வேல, இங்க வராம?' என்று அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்.

'சரோஜா, இந்தா ஐயாவுக்கு காப்பி கொண்டு போ... ஆறிட போகுது' காளிதாஸ் மனைவி செண்பகம் வேலைக்காரியிடம் காபியை நீட்டினாள்.
'அம்மா, ஆறினாலும் ஐயா சூடா இருகாரு... ' என்று சரோஜா காமெடி பண்ண... செண்பகம் முறைத்தாள், மனதிற்குள் சிரித்தபடி.

காபியை சரோஜா நீட்ட, 'இது ஒண்ணுதான் கொறச்சல், கொண்டு போய் கீழ கொட்டு' என்று எரிந்து விழுந்தார்.

'அம்மா, மூஞ்சி செவந்துருக்கான்னு பாருங்க... '
'ஏண்டி...'
'ஐயா நெருப்ப மூஞ்சில துப்பிடாறு, என்னத்துக்கு ஐயா இம்புட்டு சூடா இருக்காரு'
'கணேசன் இன்னும் வரல இல்ல அதான்'

கணேசன், அவரது டிரைவர். காலை எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். இன்னும் ஆளக்காணோம். மணி ஒன்பது.

'நேத்து பேய் மழை பெஞ்சதுல, எதுனாச்சும் பிரச்சனையா இருக்கும்'
'உனக்கு அவர பத்தி தெரியாதா, அதெல்லாம் அவரு பொருட்டே பண்ண மாட்டாரு. நேத்துக்கூட அவர் பியோன் உடம்பு சரியில்லன்னு லடே-ஆ வந்தானாம், அவன பத்துநாள் சஸ்பென்ட் பண்ணிட்டார்'
'அம்மா என்னதான் இருந்தாலும்......' சரோஜா இழுக்க
'என்னடி...' செண்பகம் அதட்டினாள்
'ஒண்ணுமில்லைம்மா...' என்று சொல்ல வந்ததை மென்று முழுங்கிவிட்டாள்.

'என்னங்க, அவனுக்கு போன் பண்ணி பார்க்க வேண்டியதுதான?' என்று அம்மா கேட்க
'போன் பண்ணி பாத்தாச்சு, கன்ட்ரி ஃப்ருட், என்ன பண்றானோ, இன்னிக்கு அவன் சீட்ட கிழிக்கணும்'

'அம்மா, ஐயா இப்போதான காபி குடிச்சாறு, இப்போ ஏதோ ஃப்ருட் ஜூஸ் கேக்கறாரா?'
'நீ உன் வேலைய பாரேன், யாரு என்ன பேசறாங்கன்னு கேகரதுல நேரத்த செலவழி'

அங்கும் இங்கும் நடந்த தாஸ், சோபாவில் அமர்ந்து டிவி-யை தட்டினார். சன் நியூஸ் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

'நேற்று பெய்த அடைமழையால், சென்னை வேளச்சேரி பகுதியில் அனைத்து வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.' இங்கு இருக்கும் மக்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாப்போம். கேமேராவை திருப்பினால், கணேசன் வெள்ளை சட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

'சார், நகருங்க சார். வேலைக்கு ஏற்கனவே நேரம் ஆச்சு. முதலாளி காத்துட்டு இருப்பார்'
'என்ன சார், உங்க வீடு தண்ணீல இருக்கு. வேலைக்கு போறேன்னு கெளம்புறீங்க'
'சார், நான் இருந்தாலும் தண்ணி லெவல் கொறஞ்சதும்தான் ஏதும் பண்ண முடியும். என் பொண்டாட்டி தண்ணி அள்ளி வெளிய ஊத்தினப்புறம் வந்து பாத்துக்கலாம்'
'இதோ இந்த தொழிலாளி, குடியே முழுகினாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது முதலாளி கொடுத்துவைத்தவர்'

இதை கேட்ட காளிதாஸ் அவரின் கண்ணில் நீர் வந்தது. நேற்று பெய்த மழையில், இன்று இவர் மனதில் ஈரம்.


Friday, January 29, 2010

'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்

இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.



இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.





இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...




இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online