Thursday, May 13, 2010

எனக்கு பிடித்த படங்கள் - தொடர் பதிவு

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அனன்யா அக்காவிற்கு எனது முதல் சலாம். பரிட்சை முடிந்து பலவிஷயங்களை பற்றி எழுதலாம் என்றால், எல்லா எண்ணங்களும் தலைக்கு மேலே போக, பவுன்சர் பார்த்த இந்திய அணி போல குதித்துக் கொண்டிருந்த எனக்கு லட்டு மாதிரி பந்து போட்டதால் அவருக்கு நன்றி. சிக்சர் அடிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்பயர் ரெடி???

அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...

வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.

திருவிளையாடல் (1965)
அருமையான படம், சிவாஜி கணேசன் நடிப்பும் இந்த படத்தில் வரும் இசையும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்லும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு திருவிளையாடலும் மிகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் இருக்கும். நான் சிறு வயதில் ஒரு முறையும், சிலநாட்களுக்கு முன்னாலும் ரசித்த படம். எவர் கிரீன் வரிசையில் அனைவரின் மனத்திலும் இருக்கும் படம். திருவாளர் நாகேஷின் நடிப்பு, படத்தின்சிறப்பாம்சம். படங்களின் வரிசையில் திருவிளையாடல் இன்னும் விளையாடுகிறது.



சதிலீலாவதி (1995)
கமலஹாசன் காமெடி இரண்டையும் தனியே ரசித்தால் கூட ஆனந்தமாய் இருக்கும், இரண்டும் ஒன்று சேர்ந்து கூத்தடித்தால். அந்த வரிசையில் இந்த படம் ஒரு தனி முத்திரை பதித்த படம். குடும்பத்தில் சபலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, காமெடியாய் சொல்லும் படம். சிரிக்க ஒரு வாய்ப்பு. சதிலீலாவதி சிரிலீலவதி.



முள்ளும் மலரும் (1978)
தலைவரின் நடிப்பு திறனை அற்புதமாக வெளிக்கொண்டுவருமாறு படங்கள் எடுப்பதில் மகேந்திரன் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் தலைவர் வாழ்ந்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, மெதுவாக நகரும் படம். மனதை கனக்க வைக்கும் காட்சிகள். முள்ளும் மலரும், வாசம்.



பிதாமகன் (2003)
நட்பு என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். உலகமறியாமல் இடுகாட்டில் காலம் கழித்த முரட்டு விக்ரம், உலகை ஏமாற்றி திரியும் சாமர்த்திய சூர்யாவிடம் நட்புடன் இருப்பதும். அவர்கள் வாழ்வில் நடக்கும் சுவையான விஷயங்கள். சூர்யாவின்மரணத்திற்கு பிறகு, வில்லனை பழிவாங்குவதும் மனதை நெகிழவைக்கும். பிதாமகன், தலைமகன்.



அன்பே சிவம் (2003)
உலகின் பெரிய இரண்டு விஷயங்கள், நாடுகளுக்குள் போரை மூட்டிய கருத்துகளை கமலஹாசன் மற்றும் மாதவன் பரிமாறிக்கொள்வதும். சுயநல மாதவன் இறுதியில் பல விஷயங்களை அந்த பயணத்தின்போது அறிந்து கொள்வதும், நாமும் அவர்களுடன் பயணிப்பதைப் போன்றதொரு எண்ணத்தை தரும். அங்கங்கே வந்து செல்லும் சிறு வேடங்களும் சரி, தங்களது பணியை உணர்ந்து நடித்திருப்பர். அன்பே சிவம், என்றும் முதன்மை...



வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே நமக்கு சிவாஜி கணேசனின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும், அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். சுதந்திர போரட்டத்தை இப்படித்தான் பண்ணியிருப்பார்கள் என்று நமக்கு அறிவித்த படங்களுள் தலயாய படம். சாம்பார் இல்லாமல் விருந்தா, அதுபோல இந்த படம் இல்லாமல் சிறந்த பத்தா?




நாயகன் (1988)
மணிரத்னம், கமலஹாசன் இணைந்து பணியாற்றிய படம். டைம் பத்திரிகையில் "All time best" படங்களின் வரிசையில் இன்னும் இருக்கிறது. என் வரிசையில் இல்லாமல் போகுமா?



வேதம் புதிது (1987)
சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி அன்று சொல்லிவிட்டு சென்றாலும், இன்றும் அது எல்லா இடத்திலும் உள்ளது. இதை மையமாக வைத்து பாரதிராஜா அவர்கள் இயக்கிய படம். சத்யராஜ் நடித்த படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம்.




தளபதி (1991)
கர்ணன், துரியோதனன் கதையா அடிப்படையாய் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம். நட்பு... நட்பிற்கு ஒரு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தும் அருமையாக விளக்கப்பட்ட படம். ரஜினி, மம்மூட்டி அவர்களின் நடிப்பு நவீன கால கர்ணன் துரியோதனனை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.




மூன்றாம் பிறை (1982)
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.





இதில் இன்னொரு விஷயம், இந்த பத்து படங்களில் இசை ஒரு முக்கிய இடத்தைபிடித்துள்ளது. அதில் இசைஞானி ஏழு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதைப்பற்றி உங்களது கருத்துகளை எழுதுங்கள். அடுத்து இதை நான் தொடரஅழைப்பது
கார்கில் ஜெய்


Friday, January 15, 2010

மலையாள படம் சீன் எடுப்பது எப்படி?


தலைப்பை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் ஓடிவந்த ரசிகப் பெருமக்களுக்கு, நான் சொல்லியிருப்பது ஒரு குடும்பப் படத்தை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது அனைத்தும் நான் பார்த்த மலையாள படங்களை வைத்து எழுதியது. இது சிரிக்க மட்டுமே, யாரையும் புண்படுத்த அல்ல.

தேவையான பொருட்கள்:
முற்றத்துடன் கூடிய வீடு - 1
ஹேண்டி கேம் - 1 (நீங்கள் சாதாரணமாக உபயோகிக்கும் டிஜிட்டல் கேமரா கூடப்போதும்)
மோகன்லால் - 1 (மம்மூட்டி இருந்தாலும் ஓகே)
சுகுமாரி - 1
தங்கை - தேவைக்கேற்ப்ப
வெளிச்சம் - முற்றம் இருந்தால் தேவையில்லை.

செய்முறை:
1. ஹேண்டி கேம் நல்ல முறையில் இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். சுகுமாரியை சமையற்கட்டில் உட்கார்ந்து பத்திரத்தை வெறித்துப் பார்க்க சொல்லவும். அங்கு சென்று அவரை ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும்.
2. தங்கைகளை படிக்குமாறு சொல்லி வேறு ஒரு அறையில் உட்கார வைக்கவும். அதையும் ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும். அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.
3. வெளியே இருந்து மம்மூட்டியயோ, மோகன் லாலையோ வரச்சொல்லவும். வந்ததும் அவர்கள் தூணருகே நின்று ஒரு முறை இருமச்செய்யவும், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு எந்த சத்தமானாலும் பரவாயில்லை. இதில் ஒரு ஐந்து நிமிடம்.
4. சுகுமாரியும், தங்கைகளும் வெளியே வந்தபின். நமது ஹீரோவை சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பேசச் சொல்லவும். (மற்றவர்களுக்கு வசனம் எழுத வேண்டும், மம்மூட்டியும், மோகன் லாலும் நிறைய படங்களில் இதுபோல் வந்துள்ளதால் வசனம் அவர்களுக்கு தேவையில்லை)
'ஞான் பரயும்ம்...ஈ லோகத்தில் எண்ட சஹோதரிகளுக்கு கல்யாணம் ஆயிட்டில்லா...' என்பது போன்ற வசனங்களை பேசிவிட்டு கண்ணில் நீர்விட்டு வெளியே செல்ல வேண்டும்.

கட் சொல்லிவிடவும்.... அவ்வளவுதான்... இதை பத்து படங்களுக்கு பரிமாறலாம்.

இதற்காகும் செலவுக் கணக்கைப் பாப்போம்:

1. உடை: ஹீரோ வேட்டி சட்டை அணிவதால் அவர்களது உடையே போதும். சுகுமாரிக்கும் ஹீரோ வீட்டில் இருந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துவரச் சொல்லி சேலையைப் போல் உடுத்த சொல்லிவிடலாம். அவரிடமே ஏதாவது பழைய ப்ளவுஸ் இருந்தால் போட்டு வர சொல்லலாம். தங்கைகளுக்கு அவர்கள் அணிந்து வரும் தாவணியும், பாவாடை சட்டையும் போதுமானது. ஆகவே உடை செலவு இல்லை.

2. போக்குவரத்து: சுகுமாரியை தெரிவு செய்ததே அவர் அதே ஊரில் இருப்பதால்தான். அவருக்காகும் டவுன் பஸ் செலவு ஒரு ஐந்து ரூபாய். ஹீரோவிடம், சார் வீடு மாறி நுழைஞ்சதா நினைச்சுக்குங்க என்று கூறி சமாளித்து அவரது காரிலேயே அனுப்பிவிடலாம். தங்கைகள் அதே ஊர்காரர்களாய் இருந்தால் அந்த செலவும் இல்லை.

3. இதர செலவுகள்: தயாரிப்பாளர் வீட்டில் இருந்தே சாயாவை பிளாஸ்கில் போட்டு கொண்டுவந்தால் அந்த செலவு குறையும். கூட வந்த ஆட்களையும் அதையே கொடுத்து சமாளிக்கலாம். ஆக செலவுகள் கம்மியாகும்.

இதனால் மலையாள படங்களின் சீன்களுக்கு ஆகும் செலவு சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை.

மலையாள படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்த நினைக்கும் நம்மவர்கள், அங்கிங்கு பேருந்து செல்வதை காண்பியுங்கள். அருமையான வளர்ச்சி... மலையாள சினிமாவை வளர்த்த பெருமை உங்களை சேரும்.

இதையும் மீறி வெளிநாட்டில்தான் பணத்தைக் கொட்டித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், நீங்கள் பாலிவுட்டில் முயற்சி செய்யவும்.
அடிதடி, பன்ச் டயலாக் போன்ற மசாலா சமாச்சாரங்கள் வேண்டும் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு முயற்சி செய்யவும்.
"அழகான" ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கன்னட படங்களுக்கு செல்லவும்.

கேபிள் சங்கர் அண்ணன் மாதிரி போடலாம்ன்னு பாத்தேன். ஏதோ என்னால முடிஞ்சுது....


Tuesday, December 22, 2009

எதனை விடுத்து எதனை எடுக்க...

கடந்த இரண்டு நாட்களாய், ஒரு வித Hypothetical World போன்ற ஒரு உலகில் மிதந்து கொண்டிருந்தேன். இதை எழுதுவதா, அல்லது அதை எழுதுவதா என்ற ஒரு குழப்பத்தில் ஒரு 48 மணி நேரம் ஓடிவிட்டது. இப்போது எதனை விடுத்து மற்றொன்றை பிறகு எழுதலாம் என்று நினைத்தால் அதன் சுவாரசியம் குறைந்து விடும், எனக்கு. அதனால் மூன்றையும் பிணைந்து ஒரு கூட்டுக் கலவையாய் தரலாம் என்று முடிவெடுத்து திரும்புகிறேன், நாட்காட்டியில் இரண்டு தினங்கள் ஓடிவிட்டிருந்தது. Better Late than Never என்று சொல்லுவது போல் இன்று கலக்கி விடுவோம் அந்த கலவையை.

கற்பனை:

இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பன் உடுமலை மூலம் ஆர்டர் செய்து பெற்ற புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த எனக்கு கி. ராஜநாராயணன் எழுதிய பிஞ்சுகள் என்ற புத்தகம் கையில் சிக்கியது. அன்றைய தினத்தில் மிச்சமிருந்த நாலு மணி நேரத்தில் படிக்ககூடிய புத்தகமாக இருந்தது அது மட்டும்தான். எடுத்து புரட்ட ஆரம்பித்தேன், முடித்துதான் கீழே வைத்தேன். சொல்ல வந்த விஷயம் பெரியது இல்லை என்றாலும், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது.

ஒரு சிறுவன், அவனது கிராமம் மற்றும் அவனது ரசனை ஆகியவற்றி வைத்து ஒரு நூற்றி இருபது பக்க கதை, அதுவும் சுவாரசியமாக. அருமை. Facts are stubborn things என்று யாரோ கூறியது போல, பறக்கும் பறவையில் இருந்து, அது போடும் முட்டைகள் வரைக்கும் அனைத்தும் ஒருவித சாட்சியங்களுடன் அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் அளவிற்கு அதிகமான விளக்கங்களோ என்று தோன்றினாலும் ரசிக்க முடிந்தது. பறவைகளை ஒரு சிறுவன் எப்படி ரசிக்கிறான் அல்லது ரசிக்க முடியும் என்பது எனக்கு முன்னே காட்சிகளாய் ஓடியது. எங்கள் ஊரில் காகங்களை மட்டும் பார்த்த எனக்கு வல்லயத்தான், தேன் கொத்தி, பலவகை சிட்டுக்கள் என பிறவகை பறவைகளையும் அறிமுகப்படுத்தியது வெங்கடேஷ்-தான். அவனுக்கு நன்றி கூறியாக வேண்டுமே....

காக்காய் பிடிப்பது என்பது ஏதோ அரசியல் சம்மந்தப்பட்டது என்று எண்ணிய எனக்கு, அது உண்மையில் ஒரு கலை என்பது இந்த புத்தகம் படித்த பின்பே புலனாகியது. இந்த விஷயங்களை அழகாய் பூமாலை போல கி.ரா கோர்த்த விதம் அருமை. இவர் ஒரு வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக்.

பொறுமை:

அந்த புத்தகத்தை படித்து மூடி வைத்த மறுகணம், இன்னொரு நண்பன் techsatish.net-இல் நீயா? நானா? பார்க்க தொடங்கினான். நானும் முதலில் காது கொடுத்தேன், பின்பு எனது கவனம் முழுவதும் அதன் பக்கம் திருப்பினேன். 'வாழ்வில் தேவை சோம்பேறித்தனமா? சுறுசுறுப்பா?'. ஏதோ என்னைப் பற்றிய விவாதம் போல இருந்தது. நம்ம முதல் கூட்டம். பலர் பலவிதமாக பேசினாலும், இறுதியில் ஒரு நிறுவனத்தில் பெரிய முடிவுகள் எடுப்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார், சோம. வள்ளியப்பன். நம்ம சோம்பேறித்தனத்தை அவர் நிதானம் என்று கூறுவதை நானே என்னை தேற்றிக் கொண்டேன்.

அதற்கும் மேல், கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளவர்களால் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றையும் ரசிக்க முடியுமாம். சுறுசுறுப்பாய் இருப்பவர்களால் ரசிக்க முடியாதாம். அதனால்தான் நமக்குள் இருக்கும் கவிஞன் அப்பப்போ வெளியே வரான் போல இருக்கு. வென்றுட்டன்!!! பொறுமைதான் வெற்றியின் ரகசியம்.

கற்பனை+பொறுமை:

இது இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும், சேர்க்க முடியுமா என்று தமிழ் அறிஞர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் நான் இரண்டு நாள் முன்னர் பார்த்த அவதாரின் ரகசியம். நண்பர்கள் கூட்டத்துடன் ஒரு இரண்டு மணிநேரம் காரில் பயணித்து, கொலம்பஸ்-இல் இருக்கும் 3D- IMAX தியேட்டர் சென்று பார்த்தோம். பிரம்மாண்டம், இப்படி ஒரே வார்த்தையில் சொல்வது சரியா என்று கூட தெரியவில்லை. அதீத கற்பனை, பனிரெண்டு வருடங்கள் காத்திருக்க பொறுமை, இதுதான் இதன் வெற்றியின் ரகசியமா? அதுவும் தெரியவில்லை. ஒரு நாலு வார்த்தையை யோசித்துவிட்டு அதை எழுத்தில் கொண்டுவரவே நான் வில்லன் படத்தில் வரும் கிரண் போல கமுந்து படுத்து காலை ஆட்டி யோசிப்பேன். இந்த அளவு கற்பனையை அந்த வெள்ளித்திரையில் கொண்டு வர மிகவும் துணிச்சலும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது நமது கேமரூனிடம் உள்ளது. ஆஸ்கார் இந்த முறையும் அள்ளுவார் என எதிர்பார்கிறேன்.

வேட்டைக்காரனில் முடிவு மட்டும் பார்த்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, அவதாரின் முடிவும் அது போலத்தான். கண்டிப்பாக போய் பாருங்கள், அவதாரை.

அப்பா... எப்படியோ... எழுத நினைத்த மூன்றையும் சுருக்கி, குறுக்கி, முறுக்கி எழுதியாகிவிட்டது. பிடித்தால் ஒரு பின்னூட்டம் போட்டு செல்லுங்கள்.


Friday, November 06, 2009

எனக்குப் பிடித்த ப்ரபோசல்

ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது.

மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும்.



பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.


Tuesday, October 06, 2009

தமிழ் படமெல்லாம் ரீமேக்

இதை படித்த உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியா இருக்குன்னா, இதை கேட்ட எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். மேலே படியுங்கள் கதையை.

நானும் என் நண்பரும் இன்று மாலை University of Chicago Booth School of Business -இல் நடந்த ஒரு Innovation பற்றிய கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தோம். என் நண்பர் பெங்களூர்க்காரர், தமிழ் நன்றாகவே பேசுவார், நம் பீட்டர் மணி போல் இல்லை. Innovation பற்றி பேசிக்கொண்டு வந்த போது, பேச்சு திசை மாறி மீடியா சினிமா என்று போனது. அவர் பொசுக்கென்று 'தென்னாட்டில் எல்லா படங்களும் ரீமேக்தான்' என்றார்.

அதற்கு பின் நடந்த உரையாடல் இதோ.
' என்ன கன்னட படங்களை பற்றி சொல்லுறீங்களா' - நான்.

' இல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லாமே' என்றார்.

'Excuse me, எத வெச்சு அப்படி சொல்லறீங்க' என்றேன்.

'நான் பார்த்த படம் எல்லாமே அப்படிதான்'

'என்ன படம் பாத்தீங்க?'

'சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், கில்லி' என்று என்னால் மறுக்க
முடியாத சில படங்களை சொல்லிக்கொண்டே போனார்.

'நீங்க தப்பான லிஸ்ட் படங்களை பாத்துருகீங்க. அன்பே சிவம், விருமாண்டி, பருத்தி வீரன், சுப்ரமணியுரம்' என்று நான் என் தரப்பு படங்களை சொன்னேன்.

'தெரில அதெல்லாம் பாத்தது இல்ல நான் பார்த்த வரைக்கும் this is my opinion' என்றார்.

'அப்போ நீங்க தமிழ் படமே பார்க்கல' என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கள் ஸ்டாப் வந்துவிட்டது.

ஒரு ரீமேக் குடும்பத்தால தமிழ் படங்களின் பார்வையே சில இடங்களில் வேறு மாதிரி உள்ளது. ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலர் தமிழ் படங்களின் மீது நல்ல அபிப்பிராயமும் கொண்டுள்ளனர். இதுக்கு நாம என்ன செய்ய முடியும். ஏதாவது நல்ல படம் வந்த டவுன்லோட் பண்ண லிங்க் அனுப்பலாம் அவ்வளவுதான்.:)


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online