Thursday, May 13, 2010

எனக்கு பிடித்த படங்கள் - தொடர் பதிவு

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அனன்யா அக்காவிற்கு எனது முதல் சலாம். பரிட்சை முடிந்து பலவிஷயங்களை பற்றி எழுதலாம் என்றால், எல்லா எண்ணங்களும் தலைக்கு மேலே போக, பவுன்சர் பார்த்த இந்திய அணி போல குதித்துக் கொண்டிருந்த எனக்கு லட்டு மாதிரி பந்து போட்டதால் அவருக்கு நன்றி. சிக்சர் அடிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்பயர் ரெடி???

அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...

வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.

திருவிளையாடல் (1965)
அருமையான படம், சிவாஜி கணேசன் நடிப்பும் இந்த படத்தில் வரும் இசையும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்லும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு திருவிளையாடலும் மிகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் இருக்கும். நான் சிறு வயதில் ஒரு முறையும், சிலநாட்களுக்கு முன்னாலும் ரசித்த படம். எவர் கிரீன் வரிசையில் அனைவரின் மனத்திலும் இருக்கும் படம். திருவாளர் நாகேஷின் நடிப்பு, படத்தின்சிறப்பாம்சம். படங்களின் வரிசையில் திருவிளையாடல் இன்னும் விளையாடுகிறது.



சதிலீலாவதி (1995)
கமலஹாசன் காமெடி இரண்டையும் தனியே ரசித்தால் கூட ஆனந்தமாய் இருக்கும், இரண்டும் ஒன்று சேர்ந்து கூத்தடித்தால். அந்த வரிசையில் இந்த படம் ஒரு தனி முத்திரை பதித்த படம். குடும்பத்தில் சபலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, காமெடியாய் சொல்லும் படம். சிரிக்க ஒரு வாய்ப்பு. சதிலீலாவதி சிரிலீலவதி.



முள்ளும் மலரும் (1978)
தலைவரின் நடிப்பு திறனை அற்புதமாக வெளிக்கொண்டுவருமாறு படங்கள் எடுப்பதில் மகேந்திரன் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் தலைவர் வாழ்ந்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, மெதுவாக நகரும் படம். மனதை கனக்க வைக்கும் காட்சிகள். முள்ளும் மலரும், வாசம்.



பிதாமகன் (2003)
நட்பு என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். உலகமறியாமல் இடுகாட்டில் காலம் கழித்த முரட்டு விக்ரம், உலகை ஏமாற்றி திரியும் சாமர்த்திய சூர்யாவிடம் நட்புடன் இருப்பதும். அவர்கள் வாழ்வில் நடக்கும் சுவையான விஷயங்கள். சூர்யாவின்மரணத்திற்கு பிறகு, வில்லனை பழிவாங்குவதும் மனதை நெகிழவைக்கும். பிதாமகன், தலைமகன்.



அன்பே சிவம் (2003)
உலகின் பெரிய இரண்டு விஷயங்கள், நாடுகளுக்குள் போரை மூட்டிய கருத்துகளை கமலஹாசன் மற்றும் மாதவன் பரிமாறிக்கொள்வதும். சுயநல மாதவன் இறுதியில் பல விஷயங்களை அந்த பயணத்தின்போது அறிந்து கொள்வதும், நாமும் அவர்களுடன் பயணிப்பதைப் போன்றதொரு எண்ணத்தை தரும். அங்கங்கே வந்து செல்லும் சிறு வேடங்களும் சரி, தங்களது பணியை உணர்ந்து நடித்திருப்பர். அன்பே சிவம், என்றும் முதன்மை...



வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே நமக்கு சிவாஜி கணேசனின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும், அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். சுதந்திர போரட்டத்தை இப்படித்தான் பண்ணியிருப்பார்கள் என்று நமக்கு அறிவித்த படங்களுள் தலயாய படம். சாம்பார் இல்லாமல் விருந்தா, அதுபோல இந்த படம் இல்லாமல் சிறந்த பத்தா?




நாயகன் (1988)
மணிரத்னம், கமலஹாசன் இணைந்து பணியாற்றிய படம். டைம் பத்திரிகையில் "All time best" படங்களின் வரிசையில் இன்னும் இருக்கிறது. என் வரிசையில் இல்லாமல் போகுமா?



வேதம் புதிது (1987)
சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி அன்று சொல்லிவிட்டு சென்றாலும், இன்றும் அது எல்லா இடத்திலும் உள்ளது. இதை மையமாக வைத்து பாரதிராஜா அவர்கள் இயக்கிய படம். சத்யராஜ் நடித்த படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம்.




தளபதி (1991)
கர்ணன், துரியோதனன் கதையா அடிப்படையாய் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம். நட்பு... நட்பிற்கு ஒரு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தும் அருமையாக விளக்கப்பட்ட படம். ரஜினி, மம்மூட்டி அவர்களின் நடிப்பு நவீன கால கர்ணன் துரியோதனனை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.




மூன்றாம் பிறை (1982)
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.





இதில் இன்னொரு விஷயம், இந்த பத்து படங்களில் இசை ஒரு முக்கிய இடத்தைபிடித்துள்ளது. அதில் இசைஞானி ஏழு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதைப்பற்றி உங்களது கருத்துகளை எழுதுங்கள். அடுத்து இதை நான் தொடரஅழைப்பது
கார்கில் ஜெய்


Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Tuesday, February 16, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 1

சங்கிலிப் பதிவிற்கு என்னை அழைத்த அனன்யா அக்காவிற்கு முதலில் நன்றி....



சரி மேட்டேர்க்கு வருவோம்.. ஒப்பனிங்க்ல ஒரு ஆஸ்பத்ரிய காமிக்கறோம்....
நர்ஸ்: நெக்ஸ்ட்....
நான்: யா இட்ஸ் மீ...
நர்ஸ்: யூ கேன் கோ இன்...
நான்: நோ வே!!!
நர்ஸ்: வொய்!!!
நான்: யூ ஆர் ஸ்டான்டிங் ஆன் த வே...
நர்ஸ்: ஓ.. சாரி...
நான்: சரி...

டாக்டர்: கம் இன்...
நான்: சார், நாம தமிழ்ல பேசுவோமே...
டாக்டர்: வொய் நாட், சொல்லுங்க என்ன பிரச்சனை?
நான்: நைட் தூங்கும் போது ஒரே ஃபிகரா வருது டாக்டர்
டாக்டர்: என்ன மாதிரி ஃபிகர்
நான்: சின்ன வயசுல பாத்த பிகர் மாதிரி இருக்கு
டாக்டர்: நீங்க சின்ன வயசுல மாத்ஸ்-ல ரொம்ப நல்ல மார்க் வாங்கிருபீங்க போல இருக்கே... வாங்க நாம கண்டுபிடிப்போம். ஹிப்னடைஸ் பண்ணி பாப்போம்.
நான்: சார்.. நான் சொல்றது அந்த ஃபிகர் இல்ல....
டாக்டர்: ஐ நோ எவரிதிங்... யூ கம்... திஸ் இஸ் எ சிம்பிள் ப்ரோப்ளம்...

இப்போ நாம ஹிப்னடைஸ் ரூமிற்கு போகிறோம்.
டாக்டர்: நீங்க இப்போ மெதுவா தூங்க போறீங்க. அப்புறம் கதை சொல்லுவீங்க.
நான்: சார்... நான் தூங்க... நீங்கதான் கதை சொல்லணும்.. நான் எதுக்கு சொல்லணும்...
டாக்டர்: யோவ்.. பேசாம படுய்யா...
நான்: [டொயின்]...

டாக்டர்: இப்போ நீங்க உங்க பதிமூனாவது வயசுல இருந்து பத்தொன்பதாவது வயசு வரைக்கும் என்ன நடந்ததுனு சொலுங்க....
நான்:
நான் இப்போ எட்டாவது படிக்கறேன், கோ எஜுகேஷன். எங்க பாத்தாலும் சும்மா பொண்ணுங்க லட்டு மாதிரி இருக்கு. 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடித்தான்' மாதிரி, அந்த ஸ்கூல்-ல ஒரு ஒரு கிளாஸ்-லயும் ஒரு பாய்ஸ் செக்ஷன், அதுல நான். பக்கத்து கிளாஸ் ல பொண்ணுங்க. மத்த பசங்க எல்லாம் பக்கத்து கிளாஸ்-க்கு டவுட் கேக்க அடிக்கடி போவாங்க. நாம என்ன டவுட் வந்தாலும் அந்த பக்கம் போக மாட்டோம், சுனா பானா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன். ஆனாலும் அந்த கவிதா, தீபா, தனலக்ஷ்மி, வித்யா அவங்களுக்கு மட்டும் நம்ம கெத்துல இருந்து கொஞ்சம் விதி விலக்கு. நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பெரிய தி. மு.க ஆதரவாளன். ஹிந்தி அப்படினாலே நமக்கு அலர்ஜி. எங்க அக்காக்கு ஹிந்தின்னா உசுரு. அத அமிர்கான் படம் பாக்கறதோட நிறுத்தாம, என்னவோ டெல்லி போற தூதர் மாதிரி பரிட்சையா எழுதி தள்ளிட்டா. அம்மாவும், அப்பாவும் ஹிந்தி படி ஹிந்தி படின்னு ஒரே டார்ச்சர். எனக்கு 18-ஆம் தேதி ஹிஸ்டரி ஹோம் வொர்க் இருக்கு, என்று நானும் நம்ம கவுண்டர் ரேஞ்சுக்கு முயற்சி பண்ணினேன். மூச்சு முட்ட முட்ட முயற்சி பண்ணியும் முடியாமல் அங்க போய் சேர்ந்தாச்சு. ஆ... என்ன.. இவளா... நம்ம தனலக்ஷ்மி... அவ முன்னாடி கெத்து காமிக்க... ஹிந்தி ஜி நமக்கு முன்னாடியே தெரிந்தவர் அதனால்... "ஜி...மே ஃபிர் ஆத்தா ஹூன்... அப் ஜாதா ஹூன்...ஜூனுன் சீரியல் கா டைம் ஹை" என்று குதிரையை ஓட்டிவிட்டு, அவளைப் பார்த்து செஞ்சுரி அடித்த சச்சின் போல புன்னகையை உதிர்த்தேன். அப்புறம் காப்பி அடித்து எப்படியோ பாஸ் செய்துவிட்டேன்.

எட்டாவது படிக்கையில் என் அக்கா பனிரெண்டாவது, எனவே அப்பாவிடம் டியுஷனுக்கு வரும் பெண்களிடம் நம் தவறாக பார்த்தல் விஷயம் நேராக நளினி காதுக்கு போய்டும்... அவளை ஏன் நளினி-ன்னு சொல்றேன்ன இப்போ வர சீரியல்ல எல்லாம் அவள்தானே வில்லி... எங்க அக்காவும் அப்படிதான்... ஆனால், நான் ஒன்பதாவது போனவுடன்... அப்பா எப்போடா சண்டே வெளியில் போவார் நாம டெஸ்ட்க்கு சுபெர்விஷன் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பேன்... சுபெர்விஷன் பார்க்கும் போது அப்படியே தாத்தா கடையில் இருந்து சுட்டு வந்த இங்கிலீஷ் புத்தகத்தை கையில் வைத்து பொம்மை பார்த்துக் கொண்டிருப்பேன். கெத்துதான்... டக்கென்று நிமிர்ந்து பசங்களை நோட்டம் விடுவேன்...உசாரா இருக்கேனாம்... அப்படி பார்த்துவிட்டு பெண்களின் பக்கம் ஒரு நோட்டம்... அவர்கள் நாம் உசாரா இருக்கறத கவனிச்சாங்கள அப்படினு... அப்போ வாங்க ஆரமிச்ச பல்பு... ரொம்ப நாள் தொடர்ந்தது.

ஒன்பதாவதில் சண்டை போட்டு ஒரு ஹெர்குலஸ் MTB சைக்கிள் வாங்கியாகிவிட்டது. பின்ன அக்காவுக்கு BSA SLR வாங்கின சும்மா இருப்போமா... நம்ம மருவாதைக்கு இழுக்கு இல்ல.. எங்க ஸ்கூல்ல ஒரு கயிறு இருக்கும், பிரேயர் ஸ்டார்ட் பண்ண அப்புறம் யார் வந்தாலும் அந்த கயிறுக்கு பின்னால நிக்கணும். நாம ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய், சைக்கிள் கயிறுக்கு பின்னாடி நிப்பாட்டிட்டு அங்கே நின்னுட்டு ஆட்டோ-ல வர போற பொண்ணுங்கள பாக்கற சுகம் இருக்கே... அட அட அட... யப்பா... டைம் மெஷின் சீக்கரம் கண்டு புடிங்கப்பா...உலகத்துல முதல்ல ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு போனான்.. கார்த்திக் 1998 கு போனான்னு சரித்திரம் சொல்லட்டும். அப்போ பிரேயர் ஆரம்பிச்சுடும், லேட்டா வர மாப்பிளங்க அப்போதான் வருவாங்க, டேய் மச்சான் உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன் என்று ஒரு பீலாவை அவிழ்த்துவிட்டு பிரேயர் முடிந்ததும் கிளாஸ்-க்கு போவோம். அப்படியே கெத்தா உள்ள போறது, லேட்னாலேகெத்துதானே . அப்போதுதான் அந்த மேட்டர் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு லெட்டர் குடுத்தது. அட உண்மையாதாங்க... பண்பாடு கருதி அந்த தோழியின் பெயரை நான் சொல்லவில்லை. அதும் கவிதைன்ன பாருங்களேன்...

'தரிசு நிலமாக இருந்த என்னை,
விளை நிலமாகிவிட்டு-
வேலி போட மறுப்பது ஏன்?'

படிச்சு பார்த்துட்டு மனதிற்குள், 'டேய் நீ இவளோ நாள் பட்ட பாடு வீண் போகலடா...' என்று என்னையே பாராட்டிக் கொண்டு அவளிடம்...'கவித நல்லாயிருக்கு, எதாவது போட்டியா?' என்றேன். 'போடா வெண்ணை' என்று அவள் சென்று விட்டாள். ம்ம்ம்.. இதெல்லாம் சரித்திரம்.

என்னதான் மனதிற்குள் நான் ஒரு பெரிய மன்மதன் என்று நினைத்தாலும், வெளியில் நான் ஒரு பெரிய பழம்தான். சாதா பழம் இல்லை பலாப்பழம். நெஞ்சு வரை பேன்ட் போட்டு இன் பண்ணிக்கொண்டு, பட்டையை இட்டுக்கொண்டு சாயிந்தரம் ஆனால் வேத கிளாஸ் போவதும். வர இறுதியில் கீ-போர்டு கிளாஸ் போவதுமாய் எனது நேரம் கழியும். அப்போதெல்லாம் கிளாஸ் போகும்போது, எங்க தெருவில் பசங்க விளையாடுவாங்க. என்னடா நம்ம வாழ்க்கை மட்டும் இவ்வளவு கொடுமையா போச்சே அப்படினு பீல் பண்ணுவேன்.

டாக்டர்: தம்பி... இந்த எபிசொட்-க்கு இந்த மொக்க போதும்... அடுத்த வாரம் இன்னொரு செஷனுக்கு வா... இப்போ நீ கெளம்பு...
நான்: சார்.. நான்
தூங்கும்போது என்ன சொன்னேன்...
டாக்டர்: டேய்.. நீ இன்னும் கெளம்பலையா....
நான்: [எஸ்கேப்]......


Tuesday, January 05, 2010

வெளியுலகம்-2


பாகம்-1

கிழக்கே வானம் வெளுக்க ஆரமித்திருந்தது. எப்போது கந்தசாமி அண்ணன் வருவார் என்று காத்திருந்தேன். இரவு முழுவதும் தூங்கினால்தானே விழிப்பதற்கு.

மணி ஆறரை இருக்கும். கந்தசாமி அண்ணன் வந்து கதவைத் தட்டி திறந்துவிட்டார். கண்களில் நீர் துளிர்த்து இருந்தது. 'தம்பி.. வாப்பா..போகலாம்..' என்றார். வெளியே வருகையில் அவரிடம் சொன்னேன். 'அண்ணே... நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று கூறி அவரது ஒப்புதலுக்கு காத்திருந்தேன். தலையசைப்பிற்க்கு பின், எனது இரண்டு அறைக்கு அடுத்து இருந்த மார்த்தாண்டன் அறைக்குச் சென்றேன்.

'மார்த்தாண்டம் அண்ணே, ராஜேஷ் வந்துருக்கேன்...இன்னிக்கு எனக்கு ரிலீஸ்... வரேண்ணே'
கண்ணில் கண்ணீர் பெருக, கட்டியணைத்து 'குரு... போறேன்னு சொல்லுங்க குரு..நீங்க எங்கயோ இருக்க வேண்டியவன்..இந்த பாழாப்போன இடத்துக்கு வராத குரு' என்றார். எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
சுப்ரமணி, 'குரு.. போ குரு.. இந்த வெளியுலகம் உனக்காக காத்திருக்கு.. நானும் வரேன்.. எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு குரு' என்றான் நட்புடன்.
மனோஜ், அறைக்குளிருந்தவாறே, கண்ணீரை அடக்க முடியாமல், 'நீ அப்படியே போயிடு குரு. என்னப்பாக்காத!!!' தூக்குதண்டனைக் கைதி. என்னை எப்போது மறுபடியும் பார்ப்பான். தெரியவில்லை.
வெளியே இருந்து உள்ளே வருகையில் எனக்கு யாருமில்லை, இப்போது நான்கு ஜீவன்கள் எனக்காக இருக்கின்றன, அழுகின்றன. வாழ்கையில் நானும் வெற்றிபெற்றுள்ளேன்.

கந்தசாமி அண்ணன் கையெழுத்து போடசொன்ன இடங்களில் கையெழுத்தைப் போட்டேன்.
'தம்பி, இத நீ போன வருஷமே பண்ணிருக்கணும். நெறைய முயற்சி பண்ணுனேன். குண்டுவெச்சவனுக்கு ரிலீஸ் குடுத்தானுங்க, உனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க. எப்படியோ இப் நடந்துச்சே. சந்தோஷம். '
'பரவால்ல அண்ணே'
'போ தம்பி, வீட்டுக்கு வா அடிக்கடி. இந்த நம்ம அட்ரஸ். எப்பனாலும் வா' பாசத்துடன் அவர் கூறியது, என்னையறியாமல் கண்ணீரை வெளியேற்றியது.

வெளியே காலெடுத்து வைத்தேன் புது லட்சியத்துடன், யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இதுவரையில் வராதவர்களா, இப்போது வந்திருப்பார்கள். எவரும் இல்லை. உள்ளே வேலைப் பார்த்ததில் கொடுத்த நான்காயிரம் ரூபாய் எனது பாக்கெட்டில் இருந்தது. எங்கே செல்லலாம், என்னதான் கோவம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வார்கள், என்று கந்தசாமி அண்ணன் சொன்னது எனக்கு நம்பிக்கையளித்தது.

வண்டியேறினேன் ஊருக்கு, சிறைக் காலங்களை அசைபோட்டபடி பயணித்தேன். முன்னிரவு தூங்காத காரணத்தால், தூங்கியும் போனேன்.

என் பேருந்து நிறுத்தம், என் தெரு, என் வீடு. சென்று கதவைத் தட்டினேன், ஒரு குல்லா போட்ட சேட்டு வந்தார்.
'நிம்பிள்க்கி.. யார் வேணும்...'
'Mr. கோவிந்தராஜன், இங்க இருந்தாரே'
'நம்பிள்க்கி தெரியாது... நம்பிள் இப்போதான் வந்தாங்கோ' என்று கூறி கதவை சாத்தினார்.

பக்கத்து வீடு கோமளம் ஆன்ட்டி, தாடியுடன் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'அவங்க மூணு வருஷம் முன்னாடியே மாத்தலாகிப் போயிட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியாது' என்று முன்னாட்களில் வாங்கிய காப்பி பொடிக்கும், சக்கரைக்கும் விசுவாசமாய் இருந்தார். இதேதான் எதிர் வீட்டு ஆன்ட்டியும் அதே கதைதான். முக்குக் கடை பாய் கூட தெரியாது என்று சொன்னது எனக்கு ஆச்சிர்யமாய் இருந்தது. மிட்டாய், பப்பிள் கம் மற்றும் ஊர்க் கதை என பல விஷயங்களை பகிர்ந்த எனது நண்பர் ஆச்சே அவர். சிறைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அனுபவம் புதியதாய் இருந்தது. இங்கு எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்றம் கசந்தது.

திலக், அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று கூட தெரியாது. முயற்சி செய்து பாப்போம், என்னைப் பற்றி அவனுக்கு தெரியுமே. கல்லூரிக்கு சென்றால் அவனது முகவரியை கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் எனது பைகளை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி பயணமானேன். கல்லூரி, முற்றிலும் புதிய தோற்றம். எல்லாமே மாறி இருந்தது. ஆபிஸ் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முன்பு நாக்கு வறண்டதால், டீ குடிக்க கண்டேன் சென்றேன். அவளை நான் சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'நீங்க ஊர்வசிதான?'
'நீங்க.... ராகுல்...'
'ராஜேஷ்'-திருத்தினேன்
'ஓ.. சாரி.. ரொம்ப நாள் ஆச்சில்ல அதான்'
'பரவால்ல.. இருக்கடும்ங்க. எப்படி இருக்கீங்க?'
'நான் நல்ல இருக்கேன்... நீங்க?'
'நான் இப்போதாங்க வந்தேன். உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். திலக் எங்க இருக்கானு தெரியுமா?'
'அவன் அமெரிக்கா-ல அவங்க பிசினஸ் பாத்துட்டு இருக்கான்...'
'அப்போ நீங்க?'
'நான் இங்க லெக்சரர். என் வீட்டுக்காரர் இந்த ஊர்ல வேல பார்க்கறார். நானும் இங்க சேர்ந்துட்டேன்'- அவர்க பிரிந்துவிட்டனர் என்பதை நானே புரிந்துகொண்டேன். இவளிடம் என்ன கேட்பது. திலக், ஆறு வருடத்தில் என்னை பார்க்க வராதவன். அவனை நம்பி என்ன பிரயோசனம்.
'நன்றிங்க, நான் வரேன்'
'ஏதோ கேக்க வந்தீங்க. காபி, டீ ஏதாவது சாப்பிட்டு போறீங்களா?'
'இல்லேங்க வேண்டாம்.'-என்று கூறி நகர்ந்தேன்.

சொந்தம், விட்டுச் சென்றது. நட்பு, பறந்து சென்றது. இனி என்னை நானே நம்பவேண்டியதுதான். படிப்பு இருக்கிறது என் கையில், யாரை நம்பவேண்டும் நான். ஏதாவது பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜெய் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். விண்ணப்பித்தேன், அழைப்பும் வந்தது.

'வாங்க ராஜேஷ், உக்காருங்க'
'நன்றி சார்'
'நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா? நீங்க எங்க படிச்சீங்க?'
'அனுபவம் இல்ல சார். நான் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல படிச்சேன்'
'ஓ.. பணக்கஷ்டமா?'
'இல்ல சார்... நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்'

அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அவர், தனது பேச்சை மாற்றினார். 'சாரி ராஜேஷ், இப்போ அறிவியல் ஆசிரியர்களுக்கு தேவை இல்லை. நீங்கள் அடுத்த முறை முயற்சியுங்கள்' என்று எனது ஃபைலை மூடினார்.

என்ன செய்ததால் இந்த உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். செய்யாத தவறுக்கு, சிறையில் இருந்தேன். என்னால் முடிந்தவரை நல்லவனாய் இருந்தேன். என்ன தவறு செய்தேன். சிறையிலிருந்த எனது சகாக்கள் அளவுகூட வெளியுலகத்தில் அன்பு இல்லையா. நான் இப்போதுதான் சிறையில் இருப்பதாய் உணர்கிறேன். என்ன செய்ய இப்போது. மீண்டும் வெளியே முயற்சி செய்யலாம், ஆனால், இந்த பாழாய்ப் போன வெளியுலகத்தில் வாழ எனக்குப் பிடிக்கவில்லையே.
எல்லாரும் எல்லாரிடமும், எதையாவது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனரே. கந்தசாமி அண்ணனிடம் சென்று சிறையில் எதவாது வேலை இருந்தால் கேட்போமே. 'ஒன்றே செய் அதுவும் நன்றே செய், அதுவும் இன்றே செய்', அண்ணனை தேடித் போனேன் அவர் கொடுத்த விலாசத்திற்கு, அவர் அங்கு இல்லை. கண்டிப்பாக அவர் சிறையில்தான் இருப்பார். சென்று பார்த்துவிடுவோம்.

வெளியிலிருந்த காவலாளியிடம், 'அண்ணே, கந்தசாமி அண்ணனே பாக்கணும்.'
'பர்மிஷன் இல்லாம பாக்கமுடியாதுப்பா'
'அண்ணே, கொஞ்சம் அவசரம். வேல விஷயமா பாக்கணும். யார்க்கிட்ட பர்மிஷன் வாங்கணும்'
'அட அதுக்கெல்லாம் பெரிய எடத்துக்கு போகணும்ப்பா. இடத்த காலி பண்ணு'
'கொஞ்ச நேரம்ன்னே. அந்த பர்மிஷன் வாங்க இப்போ டைம் இல்லன்ன. கொஞ்சம் தயை பண்ணுங்க' - கெஞ்சினேன்
'டேய், உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாது. சோறுதான திங்கற?'-போலிஸ் போலவே எகிற ஆரமித்தார்.
'அவர இப்போ எப்படி பாக்கனும்னு எனக்கு தெரியும்'
'டேய், என்ன ரொம்ப தொகுருற, அடிபட்டு சாகாத நாயே. எப்படி பாக்கரன்னு நானும் பாக்கறேன்.'
போலிசும் என்னை மதிப்பதில்லை.

ஐந்து நிமிடம் கழித்து.....

இரண்டு போலிஸ்காரர்கள் என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தேன், அந்த காவலாளி மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார், ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அதோ, கந்தசாமி அண்ணன்....



Monday, January 04, 2010

வெளியுலகம்-1


அந்த கிழக்கு மேற்கை பார்த்த அந்த சிறிய அறையில், தற்போது வெயில் இல்லை. காலையிலும், மாலையிலும் வணக்கம் சொல்லிச்செல்ல வரும் கதிரவன், தனது வேலையை நேர்க்கோட்டில் செய்துகொண்டிருந்தான். இந்த ஒளியிருந்தும், இல்லாத நேரத்தில் புத்தகம் படிப்பது ஒரு தனிசுகம். கண்டிப்பாக மணி பனிரெண்டை தாண்டியிருக்க வேண்டும். அது சோத்துக்கட்சியின் தட்டு தட்டும் கூடம் வெளியே வந்துவிட்டதே.

விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
'டிங்...டிங்...டிங்.. ராஜேஷ் தம்பி..சாப்பிட வாப்பா..இங்க நீ சாப்பிட போற கடைசி மதியசோறு.. உனக்கு நினைவிருக்கில்ல நாளைக்கு உனக்கு ரிலீஸ் தம்பி..' அவர் சொல்லிச்சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இருந்தாலும் அவரது வருத்தம் தரித்த வரிகள் இவன் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனது துன்பத்தில் கை கொடுத்த ஒரே ஜீவன் ஜைளீர் கந்தசாமி அண்ணன்தான். புத்தகங்கள், படிக்க உதவியது என்று சிறையில் இவர்தான் அவனதுதந்தை.

ராஜேஷ் இங்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல குடும்பத்தில் பிறந்த பையன். அப்பா கவர்மென்ட் ஆபிசில் குமாஸ்தா. நன்கு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குள்ளும் இருந்தது. சில விஷயங்களை அவர் அவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்.

நான் ராஜேஷ், வயது 17. பனிரெண்டாம் வகுப்பில் ஏதோ அதிர்ஷ்டவசமாக நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் இன்று இந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். சென்னை, புதிய நண்பர்கள், பெண்கள். நான் படித்த பள்ளிகளில் எல்லாம் பசங்கதான். இன்று புதியதாய் பெண்களை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்தது. காரிலே வந்தே இறங்கி அங்கே இங்கே என்று வேடிக்கைப் பார்த்து நின்றிருந்தேன். சாமான்களை எடுத்து வைக்குமாறு அப்பா அதட்டியதில், 'எடுத்து வெச்சுட்டுதான் இருக்கேன், சும்மா கத்தாதீங்க!!!' என்று கத்தினேன். எனது கோவம் உலகறிந்தது. எங்கு போனாலும் கோவப்படுவேன், எனது பள்ளியில் எனக்கு மதிப்பெண் போடாத வாத்தியாரை திட்டியதில் பத்து நாள் சஸ்பென்ஷன் வாங்கினேன். நான் கத்தி அடங்கியபின் எனது அப்பா அம்மா, 'புது இடம், புது மக்கள் கோவப்பட்டு, ராகிங் அது இது ன்னு எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்கோ கண்ணு' என்று சொல்லிச் சென்றனர். 'சரி கிளம்புங்க, கப்பித்தனமா பேசிகிட்டு ' என்று மனதிற்குள் அவர்களை வைதேன். அவழ்த்து விட்ட கழுதை இல்லையா..

திலக், எனது ரூமில் இருந்த நண்பன். அவன் ஊரு கோயமுத்தூர். ஊட்டியில் படித்தானாம். ஆங்கிலத்தில் சும்மா வெளுத்துக்கட்டுவான். அவன்கூட இருந்தால் ஆங்கிலம் பேசக் கற்றுகொள்ளலாம் என்று எனக்கு எண்ணம். எங்கேயும் சேர்ந்துதான் சுத்துவோம். கான்டீன், கேர்ள்ஸ் ஹாஸ்டல் பின்னால் இருக்கும் ரோடு என சுற்றுவோம். அப்போதுதான் ஆரமித்தது வினை. ஒரு நாள் நாங்கள் கேர்ள்ஸ் விடுதி பக்கம் போகையிலே பிடித்தான் வெற்றி. எங்கள் சீனியர். பகலிலேயே குடிப்பான் போல, கண்கள் சிவந்து கேப்டன் கண்கள் போல இருந்தது. அவன் MLA பையன். என்னைவிட திலக் கொஞ்சம் ஸ்மார்டாக இருப்பான். அவனை வம்பிற்க்கிழுப்பதே அந்த சிவந்த கண்ணனின் வேலை. கோவம் பொத்துக்கொண்டு வந்தாலும், பல்லைக் கடித்து அடக்கிக் கொள்வேன்.

ஊர்வசி, எங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு தேவதை. பதிவேட்டில் அடுத்தடுத்த பெயராய் இருப்பதால் திலக் பென்சில் பேனா என்று வாங்கி ஓரிரு மாதத்தில் அவளை மடக்கிவிட்டான். அதெப்படி இவனுங்களுக்கு மட்டும் அப்படி அமையுதோ. இது ஒருபுறமிருக்க, ஒரு அழகான பெண் ஜூனியராய் வந்துவிட்டால் இந்த சீனியர் பசங்க விடும் ஜொள்ளை சொல்லிமாளாது. அப்படி அவளைப்பார்த்து வெற்றியும் ஜொள்ளு விட்டான். இந்த விஷயம் தெரிந்த திலக் அவளிடம் வகுப்பறையில் பேசும்போதெல்லாம், வெற்றி வருகிறானா என்று பார்த்து சொல்லும் வேலை எனக்கு. இதை கேவலமாக பல நண்பர்கள் ஓட்டி தள்ளுவார்கள். 'ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்... எனக்கொரு காதல் அமையாதா' என்று நம்பிக்கையுடன் அவனுக்கு உதவி செய்தேன். இவனிடமிருந்து அங்கு சிட் பாஸ் செய்வதும், அங்கிருந்து இங்கு பதில் வருவதுமாய் அவர்களது காதல், சாரி நட்பு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.

இப்படி ஒருநாள் நான் வெளியே நின்று காவல் காக்கையிலே வந்தான் அந்த கருத்தமச்சான் வெற்றி.
'டேய்.. எங்கடா அந்த ****'
'அண்ணே... யாரு..'
'அதாண்டா உன் கூடயே சுத்துவானே...அந்த நாதாரி...' சத்தம் கேட்டு வெளிய வந்தான் திலக்.
'டேய்.. இன்னாடா அவ பின்னாடி சுத்துரியாமே... அவ உன் அண்ணிடா டோமரு...' என்று கத்தினான்.. கூட்டம் கூட ஆரமித்தது.
'நீங்க வீணா எங்க விஷயத்துல தலையிடுறீங்க..நல்லதில்ல' திலக் எதிர்த்து பேசினான்...
'என்னடா தல வாலுன்னு பேசற... பேண்ட்ட கழட்டுரா' என்றான்.. இப்போது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன...
'கழட்டுரா நாயே'
'இங்க வேணாம் அண்ணே.. நைட் உங்க ரூம்க்கு நானே வந்து கழட்டுறேன். பொண்ணுங்கல்லாம் இருக்காங்க' திலக் கெஞ்சினான்.
'நைட் நீ என்னடா ரூம்க்கு வரது... அவளையே என் ரூம்க்கு வர வைப்பேன்டா.. இப்போ கழடுரா இல்ல என் ஆளுங்க உன் பேண்ட்ட அவுப்பங்க' என்றான் திமிராய்...
எனக்கு வந்த கோவத்தில்,'டாய்...' என்று கையை ஓங்கி முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தேன். சுவற்றில் உட்கார்ந்திருந்த அவன், பின்னால் சாய தலைக் குப்புற கீழே விழுந்தான். நான்கு மாடி அவன் சென்றதை பார்த்தேன், ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. க்ஷண நேரத்தில் என்னை எல்லாரும் கொலைகாரனைப்போல் பார்க்க. அவன் ஆட்கள் MLA-விற்கு அலைபேச. நாள் கொலைகாரானாக ஆகிவிட்டேன். ஆக்கப்பட்டேன்.

அதற்குபிறகு, நான் சுயநினைவிற்கு வருவதற்குள் போலீஸ் அங்கு இருந்தனர், கல்லூரியிலிருந்து என்னை விளக்கியிருந்தனர். அப்பா, அம்மா வந்துகொண்டிருந்தனர். MLA அவரது பிள்ளை மீது படுத்து கதறி, என்னை சும்மாவிடப்போவதில்லை என்று சூளுரைத்துக் கொண்டிருந்தார். என்ன அருகில் வரக்கூட என் கல்லூரி, மன்னிக்கவும் எனது முன்னாள் கல்லூரி நண்பர்கள் தயங்கினர். திலக் உட்பட.

அப்பா அம்மா அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்ததும், அவர்களும் எனது கோவத்தை சாக்காய் வைத்து நான்தான் செய்திருப்பேன் என்று நம்பினார். அவர்கள் என்ன செய்வார்கள், சுற்றி இருக்கும் சாட்சியங்கள் எனக்கு எதிராய் அமைந்துவிட்டதே.
'ஏண்டா, எத்தன தடவ சொல்லிட்டு போனோம்...இப்படி பண்ணிடையே டா...' அம்மா கண்ணீருடன் கத்தினார்...
'அம்மா... இல்லம்மா...நான் இல்லம்மா'.. அவர்களது சத்தத்தில் எனது சத்தம் அமிழ்ந்துபோனது.
'இனிமேல் ஊர்க்காரங்க மூஞ்சில எப்படிடா முழிப்பேன், நம்ம குடும்ப மானத்த வாங்கிட்டயேடா.' அப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
'இனிமேல் என் மூஞ்சிலையே முழிக்காதடா... வாடி போகலாம்' அப்பா அம்மாவையும் கூடிச்சென்றார்.... வருவார்.. என்று நம்பினேன்... நம்புகிறேன் இன்றுவரை...

பிறகு வழக்கு கோர்ட் அங்கு இங்கு என்று சென்று எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வந்தது. எனக்கென அழுக ஒரு கண்கள் கூட இல்லை, என் கண்கள் கூட இல்லை.

சிறை, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூடாரம் என்று எண்ணிய நான், என்னைப்போலவும் சிலர் இங்கு இருப்பர்களோ என்று எண்ணத்தொடங்கிய இடம். வந்த ஒரு மூன்று மாதங்கள் யாருடனும் தொடர்பற்று இருந்தேன். சிலர் கந்தசாமி அண்ணன், உறவுகளற்ற எனக்கு ஒரு உறவை இருந்தவர், அவருடன் மட்டும்தான் நான் பேசுவேன். எனது கதையைக் கேட்ட அவர், ஏதாவது படிக்கிறயா என்று கேட்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவேரா போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். எனக்காக மேலிடத்தில் போராடி சென்னை பல்கலைகழகத்தின் அஞ்சல் வழி முறையில் இளங்கலை அறிவியல் பட்டம் படிக்க உதவினார். ஓரிரு மாதங்கள் கழித்து, என்னிடம் வந்த கந்தசாமி அண்ணன். 'தம்பி, இங்க இருக்கறவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவங்கள குத்தவாளியா ஆக்கிருச்சு. அவங்களுக்கும் படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. நீ ஏன் இவங்களுக்கு சும்மா தெரிஞ்சதை சொல்லித்தரக்கூடாது? உனக்கு எல்லா புத்தகங்களும் நான் வாங்கித்தரேன்' எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த பெரியவரின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

எனது வகுப்பறை மாணவர்கள்,

மார்த்தாண்டம், தன் மனைவியை கொன்றுவிட்டு வந்தவர். எதனால் என்று நான் கேட்கவில்லை. ஆயுள்தண்டனை கைதி.
சுப்ரமணி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து வருபவன். வயிற்றுப் பிழைப்புக்காக.
மனோஜ், கூலி வேலை செய்து வந்தவன், தன் முதலாளியை அடித்துவிட்டு வந்திருந்தான்.

இவர்களுக்கு அ, ஆ முதல் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித்தந்து வந்தேன். அவர்களும் என்னை செல்லமாக குரு என்று அழைப்பார்கள். மார்க்ஸ் மீது ஏற்ப்பட்ட பற்றினால் நானும் தாடி வளர்க்க ஆரமித்தேன். இங்கும் அரசியல் மற்றும் ரவுடித்தனம் செய்து வந்த சிலர் இருந்தனர். அவர்கள் இல்லாத பக்கமாய் பார்த்து கந்தசாமி அண்ணன் எங்களுக்கு தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டுவந்தேன். மூன்று வருடங்கள் ஓடின. வகுப்பில் மாணவர்கள் அவ்வப்போது கூடியும் குறைந்தும் இருந்தனர். நானும் நல்ல மதிப்பெண் எடுத்து இளங்கலை பட்டம் முடித்துவிட்டேன். மீண்டும் படிக்க இருந்த ஆர்வத்தால் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது.

புத்தகங்கள், எனது உற்ற நண்பன். எனது அறை முழுவதும் புத்தகங்கள். வேலை நேரம், பாட நேரம் தவிர மீதிநேரம் புத்தகத்துடன் கழிந்தது. சுஜாதா, பாலகுமாரன், கர்ட் வன்னகேர்ட், அயன் ராண்ட், கப்ரியல் க்ராசியா மார்குவேஸ் போன்ற பல எழுத்தார்கள் என்னுடன் அந்த சிறை அறையில் வாழ்ந்தனர். நானும் சில கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத ஆரமித்தேன். இப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடின. முதுகலையும் முடித்துவிட்டேன். வெளியே சென்றால் நல்ல வேலை கிடைக்குமென கந்தசாமி அண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அப்படி சொல்லும்போதெல்லாம், அவரது கண்ணில் நீர் துளிர்க்கும். நான் அவரைவிட்டு செல்கிறேன் என்ற காரணத்தால்.

இந்த ஆறு வருடத்தில் என்னை பார்க்க யாருமே வரவில்லை, ஒரு வேளை நான் நன்கு படித்து பக்குவமடைந்தது தெரிந்திருக்காது. வெளியே சென்று சொல்லுவோம்வெல்லுவோம்.

நாளை நான் விடுதலை ஆகிறேன். யார் வருவார்கள் என்னை வரவேற்க? அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனக்கு விடுதலை என்று. இந்த நினைவுடன் கண்ணயர்கிறேன். நாளை பாப்போம்.

(தொடரும்)




Wednesday, December 16, 2009

மார்கழி மகா உற்சவம் - 1

மார்கழி என்றாலே கச்சேரி சீசன், எல்லா சபாக்களும் நிரம்பி வழியும் காலம். இதை நமது பதிவிலும் கொண்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தொடர் இது.

கர்னாடக இசை என்பது நமது தென்னிந்திய, குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மிகப் பிரசித்தம். இசை என்றவுடன் நமக்கு குயிலின் ஞாபகம்தான் வரும். அதே போல் கர்னாடக இசையென்றால் நமக்கு இந்த குயிலின் ஞாபகம்தான் வரவேண்டும். திரையிசையில் 'காற்றினிலே...' பாடலில் மக்களை கட்டிப் போட்ட அந்த குரல்தான் பின்னாளில் 'குறை ஒன்றும் இல்லை...' என்று நம் சார்பில் கண்ணனுக்கு அறிவித்தது. நமது பாரத ரத்னா திருமதி. M S அம்மா அவர்கள்.

அவர்கள் பாடிய தியாகராஜ கீர்த்தனை இந்த பதிவில். இதைத் தவிர ஏன் தியாகராஜ கீர்த்தனை அல்லாத மற்ற பாடல்களையும் இடக்கூடாதா
என அதிகம் யோசித்து பார்த்ததில், அதையும் இடலாம் என்றே தோன்றுகிறது. எனவே மற்ற பாடல்களும் வரும், திரையிசை அல்லாத மற்ற பாடல்கள்.

ராதா விஸ்வநாதன் அவர்கள் உடன் பாட, கண்டதேவி அழகிரிஸ்வாமி வயலின்வாசிக்க, குருவாயூர் திரு துரை மிருதங்கம் இசைக்க, குயில் கூவுகிறது.


இது சற்றே பெரிய பாடல்.















கண்ணை மூடி, கேட்டு மகிழுங்கள்.
-------------------------------------------------------------
பி.கு - வீடியோ-வை அளித்து உதவிய youtube நவரசனுக்கு நன்றி.


Wednesday, October 21, 2009

கல்லூரி வாழ்க்கை -1

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அதை நான் இங்கு நேரில் பார்த்து வருகிறேன். இங்கே வருகையில் என்னமோ நாமதான் பெரிய வேலைக்காரன் மாதிரியும், பல நாள் வேல செஞ்சுட்டு வந்த மாதிரியும் இந்த சின்ன பசங்க கூட எப்படி படிக்க போறேனோன்னு ஒரு பீலிங் எனக்கு இருந்தது. இங்கு வந்து பார்த்தால் தான் தெரியுது, என்னுடன் படிக்கும் சிலருக்கு எங்கள் ப்ரொபசரை விட வயது அதிகம். அந்த அங்கிள் கூட படிக்கும் போதும் அவர்கள் நிஜ வாழ்க்கையில நடந்த விஷயத்தை அலசும்போதும், அட இப்படியும் பண்ணலாமோ என்ற எண்ணம் நமக்கு வரும். அதை எதிர்பார்த்துதானே நான் இங்கு படிக்க வந்தேன்.

அதுசரி நான் மட்டும் படித்தால் போதுமா நம்ம ஐடியா-வை எதிர்நோக்கி நமது நண்பர் கூட்டமே காத்துக் கெடக்குதே. அதுவும் இங்கே நான் படிக்க வந்து மூன்று மாதங்கள் ஆச்சே, கண்டிப்பாக எனது எண்ணங்களை எழுதும் நேரம் வந்துருச்சு எனது பொதுச் சேவையை தொடங்குகிறேன். முதலில் எனது நான்கு ப்ரொபசர்களை பற்றியும், வகுப்புகளை பற்றியும் எழுதுவோம், அப்பறம் இங்க என்ன நடக்குதுன்னு எழுதலாம்னு நினைக்கறேன். எதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க பண்ணிரலாம். சரி நாம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?

முதலில் நான் நமது இந்தியாவிலும் இங்கும் கல்லூரியில் காணும் வித்தியாசம் என்னன்னா, வகுப்பின் முதல் நாளே எந்த வாரம் என்ன நடத்த போகிறார் என்பதை பேராசிரியர் கொடுத்துவிடுவார். எந்த வாரம் என்ன assignment செய்யவேண்டியது என்பதும் அதில் அடங்கும். அதை பாலோ பண்ணலே போதும் நமக்கு எல்லாம் விளங்கீரும். பார்த்த உடன் ஆச்சிர்யம் தாங்கவில்லை. சே சப்ப மேட்டர்-ன்னு நெனச்சேன் ஆனா மெய்யாலுமே கஷ்டம்தாங்க.நம்ம சிவாஜி-ல சொல்ற மாதிரி 'ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு..' எங்க காபி அடித்தாலும் நம்ம சாமி விக்ரம் மாதிரி பாத்த எடத்துலயே சுட்ருவாங்க. சும்மா மிலிடரி ஆபிசர் கணக்கா கரெக்ட் டைம்க்கு கிளாஸ்-க்கு வருவாங்க. சொன்னத முடிப்பாங்க. போய்ட்டே இருப்பாங்க. உன் பேரு என்ன? உன் ஊரு என்ன-ன்னு நம்ம ஊரு காலேஜ்ல கேக்கற மாதிரி டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க. படி, எழுது, போய்டே இரு. அவளோதான் இவங்க பாலிசி.

இந்த செமஸ்டரில் நான் நாலு பாடங்களை எடுத்துருக்கேன். முதலில் எனக்கு வயிற்றில் புளியை கரைக்கும் Financial accounting, அடுத்தது எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் Economics, மூன்றாவதாய் Organizational Behavior, கடைசியாய் நம்ம Marketing.

முதலில் நம்ம accounting-அ பாப்போம்.

நம்ம ப்ரொபசர் பேரு ஹாமில்டன். (உடனே F-1 ரேசர் மாதிரி வருவாருன்னு நினைக்காதீங்க, சும்மா சட்டைல முதல் பட்டன கழட்டிவிட்டு வருவாரு) அவரு பல கம்பெனி-ல CFO வா இருக்காரு. கணக்கு வழக்கு தெரியாமல் செலவு பண்ணிய எனக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தந்தார் இவர். இவர் டீலிங் எனக்கு பிடித்து இருந்தது. சிறு குழந்தை கூட இவரிடம் பாடம் கற்றால் accounting பண்ண ஆரமித்துவிடும்.

இந்த வகுப்பிற்கு முன்னர் credit/debit என்றால் எனக்கு கார்டு ஞாபகம்தான் வரும். இப்போதுதான் அதன் அர்த்தமும் அதை எப்படி உபயோகிப்பது என்றும் தெரிகிறது. என்னதான் வயசானாலும் திங்கக்கிழமை காலைல ஸ்கூல் போனும்னா கஷ்டம்தான். அரைகுறை தூக்கத்துல எழுந்து, ஒரு காக்கா குளியலை போட்டுட்டு கிளாஸ்-க்கு போன நம்மள நித்ராதேவி அப்போதான் தேடி வருவாங்க. சரஸ்வதியும் நித்ராவும் நண்பிகள், சேர்ந்தே இருப்பாங்க. ஆனா, அந்த நித்ரதேவிய சும்மா அடிச்சு வெரட்டுற மாதிரி கிளாஸ் எடுப்பாரு. நல்ல வாத்தியார்.

பரிட்சைல சின்ன சின்ன தப்பு பண்ணினா க்ளோஸ், யோசிக்கவே மாட்டாரு மொத்த கிளாஸ் முன்னாடி மானத்த வாங்கிடுவாரு. இத சொல்றதாலே, எங்க என் மானம் போயிடுச்சோன்னு நீங்க நினைக்கலாம், சே சே நாம எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல.

மற்ற கல்லூரிகளில் accounting வாத்தியார் பற்றி தெரியாது, என்னை கேட்டால் இவர் சொல்லித்தருவது மிக மிக அதிகம்.

மொத்தத்தில் ஹாமில்டன் 'ஹோ'மில்டன்

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு
http://www.stuart.iit.edu/about/faculty/charles_hamilton.shtml


அடடா, மணி அடிச்சுடாங்களே, சரி அடுத்த கிளாஸ்-ல பாப்போம். (தொடரும்)


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online