Thursday, December 09, 2010

செம்ம அடி...

அடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.


அடிகள் ரெண்டு வகைப்படும், ஒன்னு முதலில் சொன்ன துடைச்சுவிட்டு போகும் சும்மா அடி, இன்னொன்னு, நான் சொல்லப் போகும் செம்ம அடி. செம்ம அடிங்கறது, மெண்ட்டலி பாதிக்கக் கூடிய அடி. இது வாங்கினால் சுலபத்தில் அழியாது. கடந்த வாரத்தில் இது போல இரண்டு விஷயங்கள் நடந்தது.

கிரிக்கெட் என்றாலே தாங்கள்தான் என்று மார்த்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தற்போது முழு வேகத்தில் இயங்கும் இங்கிலாந்து அணி துவம்சம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் எங்கள் தெருவில் இருக்கும் வெங்கிட்டு தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் சிக்ஸர் அடிப்பார். அவ்வளவு மோசம், கடந்த இரண்டு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் மட்டுமே எடுத்து கிட்டத்தட்ட 1150 ரன்கள் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வார்னே மீண்டும் வரலாம் என்று பேச்சு எழுந்த்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் டான் பிராட்மேன் கல்லறையிலிருந்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், ரிக்கி பாண்டிங் ஒரு மொக்க கேப்டன், அவர் டீமில் இருந்த ஆட்கள் அவரை இவ்வளவு நாள் காப்பற்றி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. என்னதான் இன்னும் மூணு மேட்ச் இருக்குன்னாலும், ஆஸ்திரேலியா இதிலிருந்து வெளியே வருவது கஷ்டம்தான். தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் பண்ண சொல்லி அதில் செம்ம அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்தா ஒரு வரி சொல்ல வேண்டும்... ‘வாட் அ பிட்டி...’

இன்னொரு மிக முக்கியமான சம்பவம். அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை சீனாவைச் சேர்ந்த லியூ ஃசியாவ்போ என்பவர் பெற்றுள்ளார். அவர் ஜனநாயகத்திற்கு சாதகமாக எழுதிய கவிதையால் அவரை சிறை வைத்தது கம்யூனிச சீனா. அவருக்கு பரிசளித்ததையும் கண்டித்தது. அத்தோடு நில்லாமல், ஏதோ எனக்கு உடம்பு சரியில்ல அதனால பள்ளிக்கு லீவ் விடுங்க என்பது மாதிரி. யாரும் அந்த பரிசளிப்பு விழாவிற்க்கு செல்லக்கூடாது என்று சத்தம் போட்டு கத்தியது. இதனால் பாகிஸ்தான், வியட்னாம் போன்ற நாடுகள் செல்வதில்லையென முடிவெடுத்தது. இந்தியா என்ன செய்யும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரையில் முதுகெலும்பு இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக நிமிர்ந்து நின்று கண்டிப்பாக செல்வோம் என்று சொல்லியுள்ளது. குட்ட குட்ட குனிவார்கள் என்று எதிர்பார்த்த சீனாவிற்கு இது செம்ம அடி. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்கயாவது சீனா நமக்கு செம்ம அடி கொடுக்க போகுது... :)

நம்ம ரெண்டு அடியையும் பார்த்தச்சு, இன்னையோட பரிட்சை முடிஞ்சது வாத்தியார் செம்ம அடி கொடுக்கக் கூடாது... பார்ப்போம்...


Wednesday, November 24, 2010

என் இனிய தமிழ் மக்களே....

உங்கள் பாசத்திற்க்குறிய ஜிகர்தண்டா பேசுவது... என்னடா வலையுலக சிட்டுக்குருவி காணாமப்போச்சே என்று வருத்தப்பட்டவர்களையும், சீறிவந்த சிங்கம் செத்துப்போச்சே என்று சந்தோஷப் பட்டவர்களுக்கும் ஒரு விஷயம்... ஜில் ஜில் ஜிகர்தண்டா இங்க குளிர் தாங்க முடியாமல், தமிழக மக்களை மகிழ்விக்க இந்தியா வருகிறார்...


மன்மதன் அம்பு மற்றும் இன்ன பிற படங்கள் அண்ணனின் வருகையையொட்டி வெளிவருவதால் பயங்கர பிஸி.... பூ மிதிப்பது, திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பது, பிள்ளைங்களுக்கு பெயர் வைப்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

சிங்கார சேலத்தில் இருப்பதால், சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதாவது நடந்தால் தெரிவிக்கவும்... அடிக்கடி எழுததான் முடில (இனிமேல் அப்படி இல்ல) ... எழுதறவங்கள பார்ப்போம்...

தேதி : டிசம்பர் 14 - ஜனவரி 19

இனிமேல் மஜாதான்....


Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Friday, January 29, 2010

'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்

இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.



இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.





இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...




இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?


Wednesday, January 13, 2010

அடக்கி வாசி....


முதல்ல கிறிஸ்துமஸ் வந்தது, அப்புறம் புது வருஷமும் வந்தது, கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நல்ல பாடல்களும் வந்தது. இப்போ பொங்கலும் வந்தாச்சு. இதெல்லாம் வந்தபோது நல்ல சந்தோஷமா இருந்தேன். இப்போ என் செமெஸ்டர்-உம் வந்தாச்சு. படிக்கற வேலைய பாக்கதான இங்க வந்தோம், சரி அதையும் கொஞ்சம் பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

கை, ப்ளாக் எழுது எழுது என்று துடிக்கிறது
ஆனால் ப்ரொபசர் கொடுத்த அசைன்மென்ட் அதை அடக்கு அடக்கு என்கிறது.

அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கிதான் வாசிக்க போறேன். மன்னிக்கவும் அடக்கி எழுத போறேன். வாசிப்புல எந்த அடக்கமும் இல்ல, ப்ளாக் வாசிப்பு நடந்துகொண்டே இருக்கும்.

ஏதோ அப்போ அப்போ நம்ம கடை பக்கம் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு போங்க. :)

இப்போதைக்கு எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Wednesday, December 30, 2009

வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்

இப்போதுதான் டிசம்பர் 31 2008 பெங்களூரில் எங்களது அறையில் நண்பர்கள் மதுவருந்த அவர்களது சைடு டிஷ் முழுவதும் சாப்பிட்ட பாவத்திற்கு திட்டு மற்றும் குட்டு வாங்கி கண்ணயர்ந்தேன், அதற்குள் வந்துவிட்டது 2010. இந்த வருடத்தில் என்ன ஆணி புடிங்கினோம் என்று தெரியவில்லை. வயது ஒன்று கூடிப் போயுள்ளது, பெரிய சாதனைதான்.

ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.

இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.

ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...

ஆஸ்கார் ரஹ்மான்:
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.

மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....

சச்சின் இருபது:
ஒரு நாள் பந்து போட்டு கிரிக்கெட் விளையாடினாலே, கை காலெல்லாம் வலித்து போய்விடும் எனக்கு. ஒரு மனிதன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு இஷ்டமானதாய் இருக்க வேண்டும். அதிலும் இன்றும் அதே இளமை துள்ளலுடன் விளையாடுகிறார். உலகே அவரைப் பார்த்து வாய் பிளந்துள்ளது. சச்சின் ஒரு சகாப்தம்.

கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.

பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?

ரியோ-டி-ஜெனிரோ:
2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அசால்டாக தட்டிக் கொண்டுப் போய்விட்டது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்க கண்டத்திற்கு சென்றுள்ளது. BRIC நாடுகளில், இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட்டன அல்லது நடத்த போகின்றன. இந்தியாவிற்கு எப்போ விடிவுகாலமோ. விழித்துக் கொண்டு காத்திருப்போம். முதலில் காமன் வெல்த் போட்டிகளை ஒழுங்காய் நடத்துங்கள் என்று சொல்லுவது காதில் விழுகிறது.

இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.

வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.

செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.


இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது

இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.




Tuesday, December 29, 2009

பயம், இலக்கு, கல்யாணம் = 3 இடியட்ஸ்

பயம் என்ற ஒற்றைச்சொல் உலகை எப்படி ஆட்டிபபடைக்கிறது. நீச்சல் குளத்திற்கு அழைக்கும் நண்பர்களுடன் செல்லும் நான், தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று நெஞ்சுவரை தண்ணீரில் நிற்பதுபோல. பயம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. வல்லரசு அமெரிக்காவே பயத்தில் நடுங்குகிறது. Detroit நோக்கிச் சென்ற விமானத்தை தகர்க்க ஒரு இளைஞன் முயற்சித்துள்ளான். இதனால் அமெரிக்க செல்லும் விமானங்கள் தரையிரங்குமுன் ஒரு மணி நேரம் யாரும் கழிவறையை உபயோகிக்கக் கூடாதாம். யாரும் போர்வையை பயன்படுத்தக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?


ஆத்திரத்தை அடக்கலாம், அதை அடக்கலாமா? ஒருவன் எப்போது பயத்தை ஒழிக்கிறானோ, அப்போதுதான் அவனது முழு ஆற்றலும் வெளிப்படும். இது பல சுய முன்னேற்ற புத்தகங்களில் நான் படித்தது. இது எனக்கும் சேர்த்துதான்.

'டேய், ஸ்விம்மிங் போலாமா', பின்னால் இருந்து நண்பன்.
'நாளைக்குப் போலாம்டா' நான்.

--------------------------------------------------------------------------------------

ஒன்றாம் வகுப்பு முதல், முதல் ரேங்க் வாங்க வேண்டுமென்ற இலக்கு, எட்டாவது முதல், பத்தாவதில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டுமென்ற இலக்கு. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கினால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற இலக்கு. நான்கு வருடம் ஏதோ தாட்டிவிட்டு வந்து வேலை வாங்கினால், எனது மேனேஜர் சொன்ன முதல் வரி 'burn your butts for the first four years, then...' இதை எங்கேயோ கேட்டது போல இருக்கே என்றால், நான்கு வருடம் முன்னால், கல்லூரி முதல் நாள் வாத்தியார் சொன்ன அதே வார்த்தைகள். உலகில் முக்கால்வாசிப் பேர் மற்றவர்கள் போன அதே பாதையை தெரிவு செய்து போகிறோம். நாம் தேர்வு செய்த இலக்குதான் நமது இலாகாவா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அந்த முக்கால்வாசியில் நானும் ஒருவன். இனிமேல் இப்படி இருக்கக் கூடாதென்று முடிவெடுத்துள்ளேன். பார்ப்போம்.

--------------------------------------------------------------------------------------

மூன்றாவதாய் நாம் அலசப்போகும் விஷயம் அனைவரின் வாழ்வையும் திருப்பிப் போடும் பகுதி. திருமணம். எனக்கென்னவோ, திருமணம் என்னும் நிகழ்வு உலகில் தொண்ணூறு சதவிகித பேரை தங்களது மனதிற்கு தகுந்த பாதையை தெரிவு செய்ய விடாமல் தடுக்கிறது என்று தோன்றுகிறது. எங்கே எனக்கு இசையமைக்க ஆசையென்று கூறினால் பெண் தருவார்களா என்றும், புகைப்படம் எடுப்பதுதான் எனது லட்சியம் என்றால் துரத்தியடிப்பார்களோ என்ற எண்ணமும் நம்மை 'கிடக்குது கழுத இந்த பக்கமே போவோம்' என்று நமது எண்ணங்களை கிடப்பில் போடச் செய்கின்றன. இது எனது தாழ்மையான கருத்து, எதிர்ப்பவர்கள் வரவேற்க்கப் படுகின்றனர். எனக்குத் தெரிந்து திருமணத்தில் அழிந்த இலட்சியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.

--------------------------------------------------------------------------------------

பயத்தை விட்டு லட்சியத்தை தொடருங்கள் என்று கூறும் படம்தான் 3 இடியட்ஸ். அமீர், மாதவன், ஷர்மன் மூவரும் திரையில் வருகையில் படம் களைக்கட்டுகிறது. ராஜ்குமார் ஹிரானியின் மகுடத்தில் முன்னாபாய் M.B.B.S மற்றும் லகே ரஹோ முன்னாபாயை தொடர்ந்து மூன்றாவது முத்து 3 இடியட்ஸ். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.


Thursday, November 26, 2009

லீவு...லீவு...




அட... அட.. என்னடா படிக்க வந்த எடத்துல பரீட்சை எழுத சொல்றாங்க. சமூகத்துக்கு அடுத்த எட்டாம் தேதி வரை பரீட்சை இருக்கும் காரணத்தால், இரண்டு வாரங்களுக்கு ப்ளாக்க்கு லீவ் விட்டாச்சு. பொழச்சு போங்க... இதுனால நீங்க எழுதறத படிக்கமாட்டேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா படிப்பேன், பின்னூட்டத்தில் கலாய்ப்பேன்... சொல்லிபோட்டேன்...

வர்ட்டா..... விடு ஜூட்ட்ட்ட்


Wednesday, November 25, 2009

எட்டு விக்கெட் இழப்பிற்கு....

ரேவதி ஆன்ட்டி வீட்டு எண்டில் இருந்து அப்பா பந்துடன் ஓடி வருகிறார். பந்தில் ஏதோ போட்டோக்கள் இருப்பது போல தெரிகிறது. விக்கெட் கீப்பராக அம்மா ஹெல்மெட் மாட்டி நின்றுள்ளார். கல்லியில் மாமாவும், பாய்ண்டில் அத்தையும், லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆனில் சித்தப்பா சித்தி என அனைவரும் களத்தில் துடுப்பாட்டக் காரரை அவுட் ஆக்க தயாராக உள்ள நிலையில். துடுப்புடன் நிற்கும் எனது நண்பன் அசாதியமாக பவுன்சரை யாருமில்லாத ஸ்லிப் திசையில் தூக்கி விட்டான். பிரமாதம்!! அடுத்த பந்து வர எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும்.

என்ன இது புது வித கமெண்ட்ரியா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. நீங்களும் இதை கடந்து வந்தவராகவோ, கடக்கப் போகிறவராகவோ இருப்பீர்கள். ஆமாம்.. இந்த 26-27 வயது வந்தாலே, பெற்றோர்கள் பிள்ளையை அவுட் ஆக்குவதில் குறியாக உள்ளனர். அதாங்க கல்யாணம். இதில் சுத்தி நம்ம சொந்தக்காரங்கா வேறு. இந்த மாதிரி பல பவுன்சர்களை சந்தித்து திக்கி திணறிக் கொண்டுள்ளனர் என் காலேஜ் மக்க. ஒரு.. ஒரு... வாரமா ஓட்டிட்டுஇருக்காங்க.

இதோ இதுவரைக்கும் ஆறு பேரு கிளீன் போல்ட் ஆகிவிட்டனர். அடுத்து ஏழு மற்றும் எட்டாவது விக்கெட் வரும் வெள்ளிக் கிழமை விழுகிறது. என்னத்த சொல்ல, சில பேரு வேணும்னே அவுட் ஆகுறாங்க. இப்போ நாம ப்ளேயர்ஸ்ல எத்தனை வகைன்னு பாப்போம்.

அடித்து ஆடுபவர்: சும்மா பந்து போடுவது யாராக இருந்தாலும், நம்ம ஷேவாக் மாதிரி அடி பின்னுவாங்க. கல்யாணம் வேணாம் நீங்க எதாவது சொன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் அப்படிங்கற பசங்க. 'மச்சி.. என்னடா அப்பாகிட்ட இப்படி பேசற?' அப்படினா.. 'ஸ்ட்ராங்கா இருக்கனும்டா.. இல்லாட்டி யார்கர் போட்ருவாங்க... நம்ம வாழ்கைய நாமதான் மச்சி வாழணும்.. இதுல கல்யாணம்னு அசிங்கமா பேசிக்கிட்டு.. எனக்குன்னு லட்சியம் இருக்குடா' என்று சொல்லும் லட்சியத்தை மனைவியாக கொண்ட லட்சிய புருஷர்கள்.

நிறுத்தி ஆடுபவர்: இவர் நம்ம திராவிட் மாதிரி. எந்த பால் போட்டாலும் அவுட் ஆக்கவே முடியாது. பிட்ச்லையே பால் இருக்கும். ரன்னும் அடிக்க மாட்டாங்க, அவுட்டும் ஆகா மாட்டாங்க. 'கல்யாணம் பண்ணிக்கோடா அதான் வேல கெடச்சு நல்ல நிலைமையில இருக்க இல்ல...' என்று சொல்லும் அப்பாவிடம். 'பண்ணிக்கலாம் பா... கொஞ்ச நாள் போகட்டும்' என்று நாள் கடத்துபவர்கள்.

நைட் வாச்மன்:
இப்போது இவர் இறங்கமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பொசுக்கென்று இவர் இறங்கிவிடுவார், அவசர அவசரமாக அவுட் ஆகியும் விடுவார். அதுமாதிரி, இவனுக்கெல்லாம் எங்கடா இப்போ அப்படின்னு நினைக்கும்போது. சல்ல்... என்று களத்தில் இறங்கி..'மச்சி...அடுத்த மாசம் பனிரெண்டாம் தேதி கல்யாணம்' என்று சொல்லும் கும்பல்.

மேட்ச் பிக்சர்: இவர்களே அப்பாவிடம் பந்தை கொடுத்து போட சொல்லி அவுட் ஆகிறவர்கள். அதாங்க நம்ம லவ் பண்ணற பசங்க. 'வேலில போற ஓணான வேட்டில விட்டுக்கரவங்க'.

டெயில் என்டர்: இவங்க களத்துல இறங்கரத்துக்கு பதிலா, அவுட் ஆயிக்கறேன்னு ஒத்துப்பாங்க. இவங்க அப்பா பந்தே போட வேணாம்.. 'என்னப்பா..இந்த பொண்ணு.....' என்று கேள்வியை முடிப்பதற்குள் 'சரிப்பா....' என்று சொல்லும் பசங்க.

மேட்ச் ரத்து: பசங்க ஆடி அவுட் ஆகணும்னு ஆசையா இருப்பாங்க... அவங்க அப்பா, அம்மா பந்து போடமாட்டேன்னு கறாரா சொல்லிடுவாங்க. இதுனால ஆட்டம் ரத்தாயிடும்.

டிக்ளேர் செய்பவர்: சுத்தி முத்தி நிக்கும் சொந்தக் காரங்க அத்தனை பெரும் செய்கின்ற டார்ச்சர் தாங்காமல்... 'சரி... பண்ணி தொலைச்சுக்கறேன்' என்று சொல்லும் பசங்க.

அதெல்லாம் சரி... நீ எதுல எந்த ரகம்னு கேக்குறது தெரியுது. நாம களம் இறங்கினாத்தான... 'ஐயோ.. உடம்பு வலிக்குதே.. காய்ச்சல் வர மாதிரி இருக்கே' அப்படி என்று டீமில் இடம் பெறாத வீரர் போல, இதோ படிக்க ஓடி வந்துட்டோம் இல்ல. அப்படியே பசங்கலாம் எப்படி சமாளிக்கராங்கங்கரத பாத்து.. நெளிவு சுளிவுகளை கத்துக்கறேன்.

இதுல இப்பவரைக்கும், நம்ம டெயில் என்டர்கள் கல்யாணம் நடந்து வருகிறது. மேட்ச் பிக்சர்களும் தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். நிறுத்தி ஆடுபவர்தான் நம்ம ஆளுங்க, நெளிவு சுளிவு சொல்லித்தராங்க. நைட் வாச்மன் எப்ப வருவாங்கன்னு தெரில.

நம்ம கிளாசுல மகளிர் டீமும் உண்டுங்க... அவங்கலாம் சரியான சொத்தை... இன்னும் ஒரு நாலு மாசத்துல ஆல் அவுட் ஆயிடுவாங்க போல இருக்கு. எல்லாருமே டெயில் என்டர்தான். இங்க பல பேரு படிக்க வராங்க. நம்ம கிளாஸ் பொண்ணுங்க பலபேருக்கு மேல படிக்கணும்னு ஆச இல்லையேன்னு நினைக்கும் போது. தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்கராங்களோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்ன சொல்றது? இருக்கற ரெண்டு மூணு பேராவது பாத்து ஆடின சரி.

இதோ வர வெள்ளிக்கிழமை, கிளாஸ் பசங்க ரெண்டு பேருக்கு கல்யாணம். இதோட எட்டு விக்கெட்...என்னதான் நாம கிண்டல் பண்ணினாலும். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் என் இரு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நம்மதான் போக முடில.... இங்க இருந்தே வாழ்த்துவோம்... 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்'


Monday, November 02, 2009

நமது அடுத்த பதிவு!!!

.... ஆஹா என்ன இப்படி இருக்கு....
.... ஹ்ம்ம்... கரெக்ட் அப்படிதான்....

நமது அடுத்த பதிவுக்கு trailer இது.... அடுத்த பதிவு கல்லூரி வாழ்கை பகுதி - 2..

நாளை சந்திக்கும் வரை வணக்கம் உறவுகளே....


Monday, October 26, 2009

சங்கத்துக்கு லீவு

டும்...டும்...டும்....

இதனால நம்ம பதினெட்டு பட்டி ஜனங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா, தலீவருக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு பெண்டு நிமுத்தர வேல இருக்கறதால, சங்கத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவுங்கோ.....

அதுக்குள்ள நீங்க எல்லாரும் எழுதன வரைக்கும் படிச்சுட்டு, உலவு பட்டன அமுக்கி அண்ணனுக்கு வோட்டு போடுங்க.

திரும்பி வரசொல்ல அண்ணன் ஒரு பெரிய ஆச்சர்யப்படற மாதிரி வேல செய்யப் போறதா சொல்லிருக்காரு. அதுனால மறுபடியும் வந்து பாருங்க, ஓடி போயிராதீங்கங்கோ......

டும்...டும்...டும்....


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online