Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Saturday, November 07, 2009

துள்ளித் திரிந்த காலம்

இதோ அவன் தனியாக தெருவில் நடந்து கொண்டிருந்தான், நினைவுகளை அசைபோட்ட படி. இந்த அமெரிக்கத் ரோடுகள், பலமாடிக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு ஏனோ இன்று புதிதாக தோன்றியது. இரவு தோன்றிய கனவு காரணமா? கனவா, இல்லை இல்லை அது அவன் வாழ்வில் முன்னாட்களில் நடந்த உண்மையே இல்லையா, பிறகு எப்படி அது கனவாகும். கனவில் அவன் கல்லூரிக்கு சென்றிருந்தான், சுற்றிப்பார்க்க. நினைவுகள், கல்லெறிந்த நீர்நிலையைப் போல் அலையோட ஆரமித்தது.

கல்லூரிக்கு வந்தபோதும் இப்படித்தானே இருந்தது அவனுக்கு, நட்பு என்றால் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் மட்டுமே அறிந்த அவனுக்கு, கல்லூரிக்கு வரும்போது என்ன தெரிந்திருக்க முடியும். ஆனால் அந்த நாலு வருடத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்னும் அளவிற்கு அவனது நண்பர்கள் மற்றும் நட்பு வளர்ந்தது.

நட்பு மட்டுமல்ல, சில எதிரிகளும் இருந்தனர் அப்போது. தனக்கு பிடித்த பெண்ணைப் பற்றி இழிவாய் பேசிய நண்பர்களுடன் அவன் சண்டை போட்ட நாட்கள், இரு வாரங்கள் அவர்களை முறைத்துக் கொண்டு சென்றது. பின்னர் அவர்களிடமே, மச்சான் சாரி டா என்று கூடியது. ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று ப்ரோபசரிடம் பர்மிஷன் வாங்கி திருட்டுத்தனமாய் சினிமா சென்ற நாட்களும் அவன் நினைவில் நிழலாடின. அவன் கல்லூரி வாழ்கையில் அவன் பாதி நேரம் செலவு செய்த அந்த கான்டீன் மரத்தடி இன்று சற்றே மாற்றியமைக்க பட்டுள்ளது, மரத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால். அங்கு அவன் நண்பர்களுடன் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு ஷார்ஜா வாங்கிக்குடித்த ருசி நாவில் தங்கிவிட்டது. ருசித்துக் கொண்டான்.

ஏனோ அவனது கல்லூரி வாழ்கை அவனை சினிமாவின் பக்கம் இழுத்தது, நடிகனாய் அல்ல, ரசிகனாய். நேரம் கிடைத்தால் சினிமா, புதுப் படம் வந்தால் சினிமா, பரீட்சைக்கு நடுவிலும் சினிமா. ஒரு வேளை இதுதான் சினிமா பைத்தியமோ, இருக்காது. அதற்கும் காரணம் சுற்றியிருந்த நண்பர்கள்தான். பள்ளிநாட்களில் சினிமா என்றாலே ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றிருந்தவனை மாற்றியவர்கள் அவர்கள்தானே.

திடீரென்று தோன்றினால் கூட்டமாய் கிளம்பிவிடுவார்களே, தாபாவிற்கு. விடுதியின் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு செய்தி பாயும். 'மச்சான், நாலு ரொட்டி, ஒரு முட்டை மசால்' என்று ஒருவன் வந்து ஆர்டர் சொல்லிவிட்டு போவான். காசு, நட்பில் காசு என்ன பெரிய விஷயம், அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை அப்போது. இப்போது இருபது ரூபாய் செலவு செய்தால், 'மச்சி இந்தா பார்சல், ட்வென்டி ருபீஸ்' என்று சொல்லுகிறோம்.பணம் பெரிதாகிவிட்டதோ. தாபாவில் இருந்து வரும் வழியில் தர்பூசணி பழக கடை, அட அந்த கடைக்காரர் 'வாரம் ஒரு முறை வந்துட்டு போங்க' என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட்ட நாட்கள்.

வெளியே தங்கி இருந்த நாட்களில், காரை கொண்டுவந்து போட்ட ஆட்டங்கள். நண்பன் ஒருவன் சாதாரண கடைகளில் சாப்பிடாமல், 'டேய், கொஞ்ச நாள் தாண்டா, வா சிக்கன் சம்பூர்ணா போவோம்... AP உனக்கு அங்க fried rice வாங்கிக்கோ' என்று அவனையும் சமாதானப் படுத்துவான். தினம் காலை நேவி பேக்கரியில் சூரியன் fm கேட்டு பேருந்திற்கு காத்திருந்தது எல்லாம் அவன் நினைவில் வந்து செல்ல, கண்ணீர் துளிர்த்தது. பேருந்தை கோட்டை விட்ட நாட்களில் நண்பனின் CBZ-யுடன் தனது சன்னி வண்டியை போட்டி போட்டு ஓட்டிச்சென்றதும் அவன் நினைவில் ஒரு வெள்ளோட்டம் ஒட்டி சென்றது.

டீ குடிக்க கடைக்கு போவார்கள், ஆனால் ஈரோடு போய் அங்கிருந்து வண்டி எடுத்து கோபி போய்... கொடிவேரியில் குளித்து, சத்தியமங்கலம் போய்.. அடிவாரத்தில் சாமியை கும்பிட்டு, வீரப்பன் கோட்டையை இருந்த தாளவாடி சென்று டீ குடித்த கிறுக்கர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதே போல் இன்னொரு முறை காலை எழுந்து டீ கொடுக்க போலாம் என்று கூறிய நண்பனை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க செய்து வண்டிகளை ஏற்பாடு செய்து, பின்பு ஊட்டிக்கு வண்டியில் சென்றவர்கள் இவர்கள்தான், டீ குடிக்க. பின்னர் திரும்பி வருகையில், குளிர் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வெட்டர் வாங்கியது தனிக்கதை....

இதையெல்லாம் தனது நடைப்பயணத்தில் சிந்தித்த அவன், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களது நம்பர்களைத் தட்டினான்....

ஒரு ரிங்... இரண்டாவது ரிங்....

'you have reached the voice message box of........'

கனவுடன் நிறுத்தி இருக்கலாமோ என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.


Friday, November 06, 2009

கல்லூரி வாழ்கை-2

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல 'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்' (குறளில் பிழை இருந்தால் மன்னிக்கவும்) அது போலத்தான் நமது இரண்டாவது வகுப்பு. சரியாக இரண்டு மணிக்கு தொடங்கும் அதுவும் திங்கட்கிழமைதான். முதலில் நமது அக்கவுண்டிங் வகுப்பு முடிந்து எதாவது சாப்பிடலாம் என்று நினைப்பதற்குள் இந்த வகுப்பு தொடங்கி விடும்.

இது organisational behaviour, இப்படித்தான் நான் இங்கிலாந்து முறைப்படி எழுதினேன். ஆனால் அதை அமெரிக்க முறைப்படி organizational behavior என்று எழுத வேண்டுமாம். சரி பழகிக் கொள்கிறேன். முதலில் OB என்றால் என்ன, ஒரு நிறுவனத்தில் பணிசெய்யும் மக்களை எப்படி நிர்வகிப்பது, ஊக்கப்படுத்துவது, எப்படி தலைமை பண்பை வெளிப்படுத்துவது போன்றவைகளை நமக்கு சொல்லித்தரும் ஒரு வகுப்பு.

இதை நமக்கு சொல்லிதருபவர் Dr. Geisler, இவர் நாசா, அமெரிக்க பாதுகாப்புத்துறை போன்ற பல பெரிய நிறுவனங்களில் consultant- ஆக பணிபுரிந்துள்ளார், புரிந்துகொண்டுள்ளார். இவ்வாறு பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களால் என்ன நன்மை என்றால், அவர்கள் நடத்தும் போது அந்த பாடத்திற்கு ஏற்றவாறு தங்கள் அனுபவத்தில் நடந்ததையும், அதற்கு அவர்கள் எடுத்த முடிவையும் சுட்டிக்காட்டி நடத்துவார்கள். இது நமது இந்திய கல்வி முறையில் இல்லை. இதை நாம் வளர்க்க வேண்டும், வெறும் புத்தகத்தில் இருப்பதை சொல்லித்தர ஆசிரியர்கள் தேவை இல்லை என்பது எனது கருத்து.

அடுத்தது, இவரது வகுப்பில் தேர்வு கிடையாது. 'என்ன பரீட்சை இல்லாம என்னத்துக்கு படிச்சுகிட்டு' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் மூன்று கேஸ்களும், ஒரு ப்ராஜெக்டையும் வைத்து நமக்கு மதிப்பெண்கள் வழங்குவார். அது எனக்கு புதியது, அதிலும் இது அனைத்தும் ஒரு டீமுடன் செய்யவேண்டும். எனக்கென்னவோ இது சரியான முறையாகப்படுகிறது. ஏனெனில், நாம் வேலைசெய்யப் போகும் இடங்களில் இப்படித்தான் இருக்கப் போகிறது.

மூன்றாவது கேஸ் அடுத்த வாரம் சப்மிட் செய்யவேண்டும். அதற்கு ஒரு புத்தகத்தை படித்து, ஒரு கேள்விக்கு பதில் எழுத வேண்டும். கஷ்டம்தான்!!!

நாங்கள் எடுத்திருக்கும் ப்ராஜக்ட், இந்த பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் ஆட்டோமொபில் நிறுவனத்தில் அவர்களது பணியாளர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை பற்றி ஒரு கருத்துகணிப்பும் அதைப்பற்றி ஒரு ரிபோர்ட் தயார் செய்யவேண்டும்.

இதெல்லாம் இந்த வகுப்பில் பிடித்த விஷயங்கள். பிடிக்காதது என்னவென்றால், இவர் வகுப்பில் சில பி.பி.டி-களை வைத்து நடத்துவார். அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார், மற்றும் நாங்கள் நோட்ஸ் எடுப்பதற்குள் அடுத்த ஸ்லைடிர்க்கு சென்று விடுவார்.

இவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள,
http://www.stuart.iit.edu/about/faculty/eliezer_geisler.shtml


Wednesday, October 21, 2009

கல்லூரி வாழ்க்கை -1

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அதை நான் இங்கு நேரில் பார்த்து வருகிறேன். இங்கே வருகையில் என்னமோ நாமதான் பெரிய வேலைக்காரன் மாதிரியும், பல நாள் வேல செஞ்சுட்டு வந்த மாதிரியும் இந்த சின்ன பசங்க கூட எப்படி படிக்க போறேனோன்னு ஒரு பீலிங் எனக்கு இருந்தது. இங்கு வந்து பார்த்தால் தான் தெரியுது, என்னுடன் படிக்கும் சிலருக்கு எங்கள் ப்ரொபசரை விட வயது அதிகம். அந்த அங்கிள் கூட படிக்கும் போதும் அவர்கள் நிஜ வாழ்க்கையில நடந்த விஷயத்தை அலசும்போதும், அட இப்படியும் பண்ணலாமோ என்ற எண்ணம் நமக்கு வரும். அதை எதிர்பார்த்துதானே நான் இங்கு படிக்க வந்தேன்.

அதுசரி நான் மட்டும் படித்தால் போதுமா நம்ம ஐடியா-வை எதிர்நோக்கி நமது நண்பர் கூட்டமே காத்துக் கெடக்குதே. அதுவும் இங்கே நான் படிக்க வந்து மூன்று மாதங்கள் ஆச்சே, கண்டிப்பாக எனது எண்ணங்களை எழுதும் நேரம் வந்துருச்சு எனது பொதுச் சேவையை தொடங்குகிறேன். முதலில் எனது நான்கு ப்ரொபசர்களை பற்றியும், வகுப்புகளை பற்றியும் எழுதுவோம், அப்பறம் இங்க என்ன நடக்குதுன்னு எழுதலாம்னு நினைக்கறேன். எதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க பண்ணிரலாம். சரி நாம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?

முதலில் நான் நமது இந்தியாவிலும் இங்கும் கல்லூரியில் காணும் வித்தியாசம் என்னன்னா, வகுப்பின் முதல் நாளே எந்த வாரம் என்ன நடத்த போகிறார் என்பதை பேராசிரியர் கொடுத்துவிடுவார். எந்த வாரம் என்ன assignment செய்யவேண்டியது என்பதும் அதில் அடங்கும். அதை பாலோ பண்ணலே போதும் நமக்கு எல்லாம் விளங்கீரும். பார்த்த உடன் ஆச்சிர்யம் தாங்கவில்லை. சே சப்ப மேட்டர்-ன்னு நெனச்சேன் ஆனா மெய்யாலுமே கஷ்டம்தாங்க.நம்ம சிவாஜி-ல சொல்ற மாதிரி 'ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு..' எங்க காபி அடித்தாலும் நம்ம சாமி விக்ரம் மாதிரி பாத்த எடத்துலயே சுட்ருவாங்க. சும்மா மிலிடரி ஆபிசர் கணக்கா கரெக்ட் டைம்க்கு கிளாஸ்-க்கு வருவாங்க. சொன்னத முடிப்பாங்க. போய்ட்டே இருப்பாங்க. உன் பேரு என்ன? உன் ஊரு என்ன-ன்னு நம்ம ஊரு காலேஜ்ல கேக்கற மாதிரி டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க. படி, எழுது, போய்டே இரு. அவளோதான் இவங்க பாலிசி.

இந்த செமஸ்டரில் நான் நாலு பாடங்களை எடுத்துருக்கேன். முதலில் எனக்கு வயிற்றில் புளியை கரைக்கும் Financial accounting, அடுத்தது எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் Economics, மூன்றாவதாய் Organizational Behavior, கடைசியாய் நம்ம Marketing.

முதலில் நம்ம accounting-அ பாப்போம்.

நம்ம ப்ரொபசர் பேரு ஹாமில்டன். (உடனே F-1 ரேசர் மாதிரி வருவாருன்னு நினைக்காதீங்க, சும்மா சட்டைல முதல் பட்டன கழட்டிவிட்டு வருவாரு) அவரு பல கம்பெனி-ல CFO வா இருக்காரு. கணக்கு வழக்கு தெரியாமல் செலவு பண்ணிய எனக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தந்தார் இவர். இவர் டீலிங் எனக்கு பிடித்து இருந்தது. சிறு குழந்தை கூட இவரிடம் பாடம் கற்றால் accounting பண்ண ஆரமித்துவிடும்.

இந்த வகுப்பிற்கு முன்னர் credit/debit என்றால் எனக்கு கார்டு ஞாபகம்தான் வரும். இப்போதுதான் அதன் அர்த்தமும் அதை எப்படி உபயோகிப்பது என்றும் தெரிகிறது. என்னதான் வயசானாலும் திங்கக்கிழமை காலைல ஸ்கூல் போனும்னா கஷ்டம்தான். அரைகுறை தூக்கத்துல எழுந்து, ஒரு காக்கா குளியலை போட்டுட்டு கிளாஸ்-க்கு போன நம்மள நித்ராதேவி அப்போதான் தேடி வருவாங்க. சரஸ்வதியும் நித்ராவும் நண்பிகள், சேர்ந்தே இருப்பாங்க. ஆனா, அந்த நித்ரதேவிய சும்மா அடிச்சு வெரட்டுற மாதிரி கிளாஸ் எடுப்பாரு. நல்ல வாத்தியார்.

பரிட்சைல சின்ன சின்ன தப்பு பண்ணினா க்ளோஸ், யோசிக்கவே மாட்டாரு மொத்த கிளாஸ் முன்னாடி மானத்த வாங்கிடுவாரு. இத சொல்றதாலே, எங்க என் மானம் போயிடுச்சோன்னு நீங்க நினைக்கலாம், சே சே நாம எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல.

மற்ற கல்லூரிகளில் accounting வாத்தியார் பற்றி தெரியாது, என்னை கேட்டால் இவர் சொல்லித்தருவது மிக மிக அதிகம்.

மொத்தத்தில் ஹாமில்டன் 'ஹோ'மில்டன்

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு
http://www.stuart.iit.edu/about/faculty/charles_hamilton.shtml


அடடா, மணி அடிச்சுடாங்களே, சரி அடுத்த கிளாஸ்-ல பாப்போம். (தொடரும்)


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online