எப்போதும் ஏதாவது படத்துக்கு கூட்டமாய் செல்வது எங்கள் பழக்கமா. அதுமாதிரி பீமா படத்துக்கு போலாமா என்று கேட்க ஹேமாவிற்கு போன் செய்யலாமா என்று யோசித்த போது ஷாமாவிடமிருந்து கால் வந்தது. ஹேமா கோமாவில் இருக்கிறாளாம். வேகமா வண்டி ஓட்டும் போட்டியாமா, அதில் அவள் ஸ்கிட் அடித்து விழுந்தாலாமா....
கோமாவில் இருக்கிறாள் ஹேமா என்று தெரிந்ததும், நாமாக சென்று பார்க்கவேண்டும் என்று புறப்பட்டோம். அங்கே சென்றதும், ட்ரிம்-ஆனா அவளது மாமா அங்கே வந்து 'ஏம்மா, இப்படி ஆயிடுச்சேம்மா!!!' என்று அலற. டீமாக சென்ற நாங்கள் காமாக நின்று கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்த பாமாவிடம், 'என்னம்மா ஆச்சு!!!' என்றோம். 'கேமாக தொடங்கியது ஷேமாக முடிந்தது' என்றாள். பார்க்க பாவமா இருந்தது. 'அட ராமா, இதுவும் உன் கேமா. தாமாக எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டு செய்வாளே ஹேமா'
'என்னம்மா இங்க இவ்வளவு கூட்டமா? கிளம்புங்கம்மா' என்றார் நர்சம்மா. 'போவோமா' என்று தலையாட்டிய ஷாமாவிடம், ஆமா என்று சைகை செய்தேன். சும்மா வெளிய வந்த நான், 'அம்மா, ஹேமா சீக்கிரமா சாதரணமா ஆகணும்மா' என்று வேண்டினேன். அங்கே இருந்த டீக்காரம்மா, 'வந்து டீ சாப்ட்டு போங்கம்மா' என்று கூற. 'அஞ்சு டீ தாங்கம்மா' என்று கூறி நாங்கள் மௌனமா நின்றிந்தோம். 'போண்டா வேணுமா?' என்ற அந்த அம்மாவிடம், 'வேண்டாம்மா' என்றோம்.
அங்கிருந்து ஓடி வந்த பாமா, 'ஷாமா, ஹேமா!!! மாமான்னு கூப்பிட்டா' என்று கூற. 'அம்மா, நன்றிம்மா' என்று கூறிவிட்டு என் கால்கள் ஹேமாவை நோக்கி ஓடின. 'பணம்மா.... அட... பணம்மா... ' என்று கத்திக் கொண்டிருந்தார் போண்டாக்காரம்மா.
Thursday, December 31, 2009
ஹேமாவின் கோமா...
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 1:33 PM 5 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: காமெடி, சிறுகதை முயற்சி
Wednesday, December 30, 2009
வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்
ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.
இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.
ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.
மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....
சச்சின் இருபது:
கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.
பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?
ரியோ-டி-ஜெனிரோ:
இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.
வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.
செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.
இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது
இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:22 PM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: இன்பர்மேசன், ஊர் சுத்தல், சும்மா, புத்தாண்டு
Tuesday, December 29, 2009
பயம், இலக்கு, கல்யாணம் = 3 இடியட்ஸ்
பயம் என்ற ஒற்றைச்சொல் உலகை எப்படி ஆட்டிபபடைக்கிறது. நீச்சல் குளத்திற்கு அழைக்கும் நண்பர்களுடன் செல்லும் நான், தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று நெஞ்சுவரை தண்ணீரில் நிற்பதுபோல. பயம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. வல்லரசு அமெரிக்காவே பயத்தில் நடுங்குகிறது. Detroit நோக்கிச் சென்ற விமானத்தை தகர்க்க ஒரு இளைஞன் முயற்சித்துள்ளான். இதனால் அமெரிக்க செல்லும் விமானங்கள் தரையிரங்குமுன் ஒரு மணி நேரம் யாரும் கழிவறையை உபயோகிக்கக் கூடாதாம். யாரும் போர்வையை பயன்படுத்தக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:39 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: இன்பர்மேசன், சும்மா
Tuesday, December 22, 2009
எதனை விடுத்து எதனை எடுக்க...
கடந்த இரண்டு நாட்களாய், ஒரு வித Hypothetical World போன்ற ஒரு உலகில் மிதந்து கொண்டிருந்தேன். இதை எழுதுவதா, அல்லது அதை எழுதுவதா என்ற ஒரு குழப்பத்தில் ஒரு 48 மணி நேரம் ஓடிவிட்டது. இப்போது எதனை விடுத்து மற்றொன்றை பிறகு எழுதலாம் என்று நினைத்தால் அதன் சுவாரசியம் குறைந்து விடும், எனக்கு. அதனால் மூன்றையும் பிணைந்து ஒரு கூட்டுக் கலவையாய் தரலாம் என்று முடிவெடுத்து திரும்புகிறேன், நாட்காட்டியில் இரண்டு தினங்கள் ஓடிவிட்டிருந்தது. Better Late than Never என்று சொல்லுவது போல் இன்று கலக்கி விடுவோம் அந்த கலவையை.
கற்பனை:
இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பன் உடுமலை மூலம் ஆர்டர் செய்து பெற்ற புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த எனக்கு கி. ராஜநாராயணன் எழுதிய பிஞ்சுகள் என்ற புத்தகம் கையில் சிக்கியது. அன்றைய தினத்தில் மிச்சமிருந்த நாலு மணி நேரத்தில் படிக்ககூடிய புத்தகமாக இருந்தது அது மட்டும்தான். எடுத்து புரட்ட ஆரம்பித்தேன், முடித்துதான் கீழே வைத்தேன். சொல்ல வந்த விஷயம் பெரியது இல்லை என்றாலும், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது.
ஒரு சிறுவன், அவனது கிராமம் மற்றும் அவனது ரசனை ஆகியவற்றி வைத்து ஒரு நூற்றி இருபது பக்க கதை, அதுவும் சுவாரசியமாக. அருமை. Facts are stubborn things என்று யாரோ கூறியது போல, பறக்கும் பறவையில் இருந்து, அது போடும் முட்டைகள் வரைக்கும் அனைத்தும் ஒருவித சாட்சியங்களுடன் அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் அளவிற்கு அதிகமான விளக்கங்களோ என்று தோன்றினாலும் ரசிக்க முடிந்தது. பறவைகளை ஒரு சிறுவன் எப்படி ரசிக்கிறான் அல்லது ரசிக்க முடியும் என்பது எனக்கு முன்னே காட்சிகளாய் ஓடியது. எங்கள் ஊரில் காகங்களை மட்டும் பார்த்த எனக்கு வல்லயத்தான், தேன் கொத்தி, பலவகை சிட்டுக்கள் என பிறவகை பறவைகளையும் அறிமுகப்படுத்தியது வெங்கடேஷ்-தான். அவனுக்கு நன்றி கூறியாக வேண்டுமே....
காக்காய் பிடிப்பது என்பது ஏதோ அரசியல் சம்மந்தப்பட்டது என்று எண்ணிய எனக்கு, அது உண்மையில் ஒரு கலை என்பது இந்த புத்தகம் படித்த பின்பே புலனாகியது. இந்த விஷயங்களை அழகாய் பூமாலை போல கி.ரா கோர்த்த விதம் அருமை. இவர் ஒரு வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக்.
பொறுமை:
அந்த புத்தகத்தை படித்து மூடி வைத்த மறுகணம், இன்னொரு நண்பன் techsatish.net-இல் நீயா? நானா? பார்க்க தொடங்கினான். நானும் முதலில் காது கொடுத்தேன், பின்பு எனது கவனம் முழுவதும் அதன் பக்கம் திருப்பினேன். 'வாழ்வில் தேவை சோம்பேறித்தனமா? சுறுசுறுப்பா?'. ஏதோ என்னைப் பற்றிய விவாதம் போல இருந்தது. நம்ம முதல் கூட்டம். பலர் பலவிதமாக பேசினாலும், இறுதியில் ஒரு நிறுவனத்தில் பெரிய முடிவுகள் எடுப்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார், சோம. வள்ளியப்பன். நம்ம சோம்பேறித்தனத்தை அவர் நிதானம் என்று கூறுவதை நானே என்னை தேற்றிக் கொண்டேன்.
அதற்கும் மேல், கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளவர்களால் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றையும் ரசிக்க முடியுமாம். சுறுசுறுப்பாய் இருப்பவர்களால் ரசிக்க முடியாதாம். அதனால்தான் நமக்குள் இருக்கும் கவிஞன் அப்பப்போ வெளியே வரான் போல இருக்கு. வென்றுட்டன்!!! பொறுமைதான் வெற்றியின் ரகசியம்.
கற்பனை+பொறுமை:
இது இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும், சேர்க்க முடியுமா என்று தமிழ் அறிஞர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் நான் இரண்டு நாள் முன்னர் பார்த்த அவதாரின் ரகசியம். நண்பர்கள் கூட்டத்துடன் ஒரு இரண்டு மணிநேரம் காரில் பயணித்து, கொலம்பஸ்-இல் இருக்கும் 3D- IMAX தியேட்டர் சென்று பார்த்தோம். பிரம்மாண்டம், இப்படி ஒரே வார்த்தையில் சொல்வது சரியா என்று கூட தெரியவில்லை. அதீத கற்பனை, பனிரெண்டு வருடங்கள் காத்திருக்க பொறுமை, இதுதான் இதன் வெற்றியின் ரகசியமா? அதுவும் தெரியவில்லை. ஒரு நாலு வார்த்தையை யோசித்துவிட்டு அதை எழுத்தில் கொண்டுவரவே நான் வில்லன் படத்தில் வரும் கிரண் போல கமுந்து படுத்து காலை ஆட்டி யோசிப்பேன். இந்த அளவு கற்பனையை அந்த வெள்ளித்திரையில் கொண்டு வர மிகவும் துணிச்சலும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது நமது கேமரூனிடம் உள்ளது. ஆஸ்கார் இந்த முறையும் அள்ளுவார் என எதிர்பார்கிறேன்.
வேட்டைக்காரனில் முடிவு மட்டும் பார்த்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, அவதாரின் முடிவும் அது போலத்தான். கண்டிப்பாக போய் பாருங்கள், அவதாரை.
அப்பா... எப்படியோ... எழுத நினைத்த மூன்றையும் சுருக்கி, குறுக்கி, முறுக்கி எழுதியாகிவிட்டது. பிடித்தால் ஒரு பின்னூட்டம் போட்டு செல்லுங்கள்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:28 AM 7 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: ஊர் சுத்தல், சினிமா
மார்கழி மஹா உற்சவம் - 5
சிட்னியில் நடைப்பெற்ற கணேஷ் குமரேஷ் கலக்கிய இசை. இவர்கள்ஆரம்பத்தில் கர்னாடக இசையை மட்டும் வாசித்து வந்தாலும், பின்னர் ஃபியுஷன்இசையில் இவர்கள் இசைக்க அரமித்தனர். ஜனரஞ்சனி ராகத்தில் பூந்துவிளையாடுகின்றனர். ஒருவர் கார்ட் பிடிப்பதும், அடுத்தவர் வாசிப்பதும் அருமை. இருவரும் நம் கண்முன் சிம்பனி போன்றதொரு தோற்றத்தை தருகின்றனர். ஒரேவருத்தம் காலியாய் இருக்கும் பல சீட்டுகள்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:51 AM 1 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: மார்கழி மகா உற்சவம்
Saturday, December 19, 2009
மார்கழி மஹா உற்சவம் - 4
கடந்த மூன்று பதிவுகளாய் நாம் பாடல்களை பார்த்தோம். இன்று நமது கர்னாடக சங்கீத உலகின் இசைக் கருவி மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த நமது மண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள். இதோ அவரின் இசை வெள்ளத்தில் நனையுங்கள். 'ஸ்ரீராம பாதமா...'
--------------------------------------
பி.கு: Youtube ShootMyMonkey அவர்களுக்கு நன்றி
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:09 AM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: மார்கழி மகா உற்சவம்
Friday, December 18, 2009
மார்கழி மஹா உற்சவம் - 3
இது ஒரு வித்தியாசமான பாடல். அதுவும் அருணா சாய்ராம் அற்புதமாய் செய்கைகளுடன் பாடுவதைப் பார்ப்பது ஒரு சந்தோஷத்தை தரும். பல பதிவுகளுக்கு முன்னால் சொன்னதுபோல, தமிழ் பாடல்களை பாடுவதே இவர் சிறப்பு.
இதோ செஞ்சுருட்டி ராகத்தில் இவர் பாடி இருக்கும் 'விஷமக்காரக் கண்ணன்...' அருமை, கிருஷ்ண லீலைகளை பாடலில் கூறுகிறார்.
ரசியுங்கள்.....
---------------------------------------------
பி.கு: கர்னடிகோபியா, நமது யூ டியுபின் கர்னாடக சங்கீத கலெக்டர்... அத்தனைபாடல்களும் அவர் சேர்த்து வைத்துள்ளார். நன்றி கர்னடிகோபியா.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 12:46 PM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: மார்கழி மகா உற்சவம்
Thursday, December 17, 2009
2080
ஜூன் 20, 2080 - மின்னல் வேகத்தில் என்னைத் தாண்டி இரு வாகனங்கள் காற்றில் சென்றன. வேகம் சுமார் மூவாயிரம் கீ.மீ.
'ச்சே..என்ன வேகமா போறாங்க... காத்துல போனா இவங்கதான் ராஜான்னு நெனப்பு', எனக்கு அருகில் தோளில் பையை மாட்டி நடந்து வந்தவர் சொன்னார். அவரது உடல் வாகில் என்னைப் போல் இருந்தாலும், வயது பதிமூன்று, பதினான்குதான் இருக்கும். இதனால் அவருக்கு ப்ரோகீரியா என்று அர்த்தம் இல்லை, இந்தக் காலத்தில் அனைத்து குழந்தைகளுமே அப்படித்தான்இருக்கின்றன. ஊரில் தண்ணீர் இல்லை, ஓசோன் படலம் முழுதும் ஓட்டையாகிவிட்டது. கடல் மட்டம் அதிகமானபடியால் மக்கள் வாழும் பகுதி குறைந்துவிட்டது.
அப்படியே நடந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். அடுக்கு மாடியில் ஐநூற்றி ஆறாவதுமாடி. ஹெலிபேட் போல இருக்கும் ஒரு இடத்தில் நின்று 5..0..6.. என்று சொன்னால் அடுத்த நொடியில் வீட்டு வாசலில் நிற்கலாம். என்ன ஒரு விஞ்ஞான முன்னேற்றம்.
'என்ன நீங்க RPS (Radiation Protection Suit) போடாமலே போயிருக்கீங்க. நாளைக்கு ஒன்னுனா யாரு பாக்கறது?' மனைவி அக்கறையுடன் கோபத்தை காட்டினாள். என் காலத்தில் சட்டம் போட்டபோதே ஹெல்மெட் போடாமல் போன ஆள் நான். எது என்னை என்ன செய்யும். 'இல்லை, என் சூட் பழசாகுற மாதிரி இருக்கு அதான் ரொம்ப தேவைன்னா போட்டுக்கலாமேன்னு வெச்சேன்'
'சரி..சரி..எல்லாருக்கும் மாத்திரை வாங்கிட்டு வந்தீங்களா?' என்றாள் எப்போதும்போல் அதிகாரத்துடன். என்னதான் வருடங்கள் பறந்தாலும், இந்த அதிகாரம் குறையாதோ?
'என்ன மாத்திரை?' என்ன சொன்னாள் இவள், எதை நாம் விட்டு விட்டோம். இந்த தள்ளாத வயதில் நாம் வெளியில் சென்று வீடு திரும்புவதே அரிது. இதில் நாம் இதை வேறு ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா? - 'என்ன மாத்திரைம்மா?' என்றேன் கெஞ்சலாய்.
'என்ன மாத்திரையா? TQT (Thirst Quenching Tablets) உங்ககிட்ட எத்தன தடவ சொல்லி அனுப்பினேன். அதோட விலைய வேற நாளைல இருந்து ஏத்த போறாங்களாம். ஒரு மாத்திரை ஒரு லட்சம் ரூபாய். எங்க போறது. சட்டுன்னுபோய் வாங்கிட்டு வாங்க. RPS போட்டுக்க மறக்காதீங்க' என்று அக்கறையுடன்கூறி சமயலறையில் மறைந்தாள்.
'இந்த பொம்மனாட்டிகள் இன்னும் திருந்தவே இல்லை. சமையல் செய்வது பெரியவேலையாம். சாம்பார் என்று ஒரு ரோபோட் முன்பு சொன்னால் அது செய்துகொடுக்கிறது. என்னை விடுதலை செய்துகொள்ள இந்த ரோபோட்வாங்கிக்கொடுத்திட்டேன்'
TQT, இன்று மக்கள் அனைவரும் அதற்குத்தான் அடிமை. எங்கள் காலத்தில் தண்ணீர் கேனில் வரும். இன்று தண்ணீர் என்பதே உலகில் இல்லை. தாகத்தை எப்படி தணிப்பது. அதை தவிர்க்க இதை கண்டுபிடித்த பெர்னாண்டோ பெர்லுஸ்கோனி என்பவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். இதை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். மூளை மற்றும் நாக்கில் தாகம் ஏற்படுத்தும் நரம்புகளை இது மரத்துப்போக செய்துவிடும். எல்லார் வீட்டிலும் உள்ளே நுழைந்தவுடன் குடுக்கும் முதல் மாத்திரை இதுதான். தங்கள் குடும்பம் போக மற்றவர்களுக்குஎன வாங்குவோர் அதிகமான காரணத்தால், விலையேற்றம். என்னைப்போல கீழ்க்காட்டில் வாழும் மக்கள், அதாவது மாதம் நான்கு கோடி சம்பாதிக்கும் மகனின் நிழலில் வாழும் மக்களுக்கு, கடினம்தான்.
அது கிடைக்கும் கடை மிகவும் தூரம். இங்கிருந்து Intra Air Shuttle பிடித்துஅடையார் சென்று அங்கிருந்து Air Space Rider பிடித்து விழுப்புரம் செல்லவேண்டும். போக வர கண்டிப்பாக ஒரு மணிநேரம் ஆகும். Air Pit Stop இதுதான் அதன் நிறுத்தம். இன்றும் பிச்சைகாரர்கள் உள்ளனர். பாவம், RPS இல்லாமல் அவர்கள் உடல்களில் பல பொத்தல்கள். எல்லாருக்கும் நூறு ரூபாய் தாள்களை வீசினேன்.
IAS21 வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். மக்கள் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்கள். அதில் இருவர் பேசியது எனக்கு சம்மட்டியில் அடித்தது போலஇருந்தது.
'இந்த நமக்கு முன்னால இருந்த மனுஷங்க இந்த பெட்ரோல் அது இதுன்னு உபயோகிச்சு நம்மள நாசப்படுத்தீட்டாங்க'
'அது கூட பரவாயில்லீங்க தண்ணிய கூட நமக்கு மிச்சம் வைக்காம தீர்த்துடாங்க, வாயில நல்ல கெட்ட வார்த்தை வருதுங்க'
என் காலத்தில் உபயோகித்த மற்றும் இருந்த இயற்கை வளங்களை இவர்கள் திரைப்படங்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சொன்னதும் உண்மைதானே, கிட்ட இருக்கும் கடைக்கு கூட வண்டியிலதானே செல்வோம். கேட்டுக்கொண்டு, எதிர்த்து பேசமுடியாமல் உட்கார்ந்துவந்தேன்.
மாத்திரை வாங்கி வருவதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. எப்போதும்போல் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொன்னதற்கு எதிர்மாறாய் அதிக வெயில்அடித்து தள்ளியதில் எனது RPS பொத்தல் போட்டுவிட்டது. இதை எப்படியாவதுமகனிடம் சொல்லி வாங்கவேண்டும். எந்த காலமானாலும் பிள்ளைகள் அம்மாவின் சொல்லைத்தான் கேட்பார்கள். மனைவியிடம் சொல்லவேண்டும்.
'தம்பி, அப்பாவோட RPS பொத்தல் விழுந்துருச்சு புதுசு வாங்கி கொடுத்துட்டு, கம்பெனி-ல திரும்ப வாங்கிருப்பா'
'அம்மா, கம்பெனி பாலிசி மாத்திட்டாங்க. அப்பா, அம்மாவெல்லாம் கவர்பண்றதில்லம்மா. அட்ஜஸ் பணிக்க சொல்லு, அப்புறமா டீல்-ல வாங்குவோம்.'
இந்த மாதிரி அவன் சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மீண்டும்அந்த RPS மாட்டிக்கொண்டு கோபமாக வெளியில் சென்றேன். இந்த கொடுமைக்கு, அவர்கள் சொன்னது போல 2012-இல் உலகம் அழிந்திருக்கலாமே. அந்த மரணவெயில்லில் எனது உடலில் பொத்தல் மேல் பொத்தலாய் போட்டு ரத்தம் பீயிச்சிஅடித்தது.
கை, முகம் மற்றும் உடம்பை தேய்த்தவாறே நான் எழுந்தேன். இது அனைத்தும்கனவா??? மிக கொடூரமாய் இருக்கிறதே.
அன்று காலை ஆபிஸ் கிளம்பும் வரை நான் ராகினியிடம் எதுவும் பேசவில்லை.
'என்னங்க, என்ன சீக்கிரம் குளிச்சுடீங்க, தினமும் அரைமணிநேரம் குளிப்பீங்க'
'இல்ல, சும்மாத்தான்'
'இந்தாங்க கார் சாவி...'
'இல்லமா... ஆபீஸ் இங்கதானே இருக்கு. நடந்தே போறேன்'
என்னால் வருங்காலத்தை மாற்றமுடியும் எனும்போது, மற்றவர்களால் முடியாதா. நம்பிக்கையுடன் நடந்தேன்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:50 PM 8 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, சீரியஸ்
மார்கழி மஹா உற்சவம் - 2
கர்னாடக இசை உலகின் இன்னொரு ஜாம்பவான் நமது பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்கள். கணீர் குரலில் அனைவரையும் கட்டிப்போடும் அவரது திறமை யாருக்கு வரும். எனக்கு என்னமோ அடுத்த பாரத ரத்னா பெற தகுதியான இசையுலக கலைஞர் இவர் என தோன்றுகிறார். இந்த பாட்டை கேட்டு நீங்களும் ஒரு ஆமோதிப்பை சொல்லிவிட்டு போங்கள்.
தோடி ராகத்தில் அமைந்த 'தாயே யசோதா...'
------------------------------------------------------------------
பி.கு: SRN1000 அவர்கள் யேசுதாசின் மிகப்பெரிய ரசிகர் போல உள்ளது. யூ டியுப்பில் பல பாடல்களை upload செய்துள்ளார். நன்றி திரு. SRN1000 ஐயா.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:10 AM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: மார்கழி மகா உற்சவம்
Wednesday, December 16, 2009
குழப்பங்கள்
குழப்பம் என்பது எனது அரை டவுசர் காலம் தொட்டே என்னுடன் பயணிக்கும் என் இனிய நண்பன். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆரமிக்கும் குழப்பம், என்ன காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போடலாம் என்று சிந்திக்கும் வரை தொடரும். இது சற்றே விரிவடைந்து பத்தாவது முடித்தவுடன் கணினி பாடம் எடுக்கலாமா அல்லது உயிரியல் எடுக்கலாமா என்று சென்றது. எந்த கல்லூரி என்பதில் அடுத்த குழப்பம். தேர்ந்தெடுத்த கல்லூரியில் என்ன கிளாஸ், என்பதில் மரக்கிளை போல பரந்துவிரியத் தொடங்கியது.
வேலை கிட்டியவுடன், படிக்க போகலாமா இல்லை வேலைக்கு போகலாமா என்பதில் அடுத்த குழப்பம். சரி வேலைக்கு போய் கொஞ்சம் காசு பாப்போம் என்ற முடிவுடன் போனால், java தெரியுமா, C தெரியுமா என்று அவர்கள் கேட்டகேள்வியில் மிகப்பெரிய குழப்பம். அதையெல்லாம் தாண்டி, onsite போகலாமா வேண்டாமா என்பதில் அடுத்த பிரேக். சரி, வெளிநாடு போய் பணம் பார்த்தாச்சுஅதை வைத்து படிக்க போலாம் என்று நினைக்கும் போது, MBA படிப்பதா, MS படிப்பதா என்று குழப்பம் கூடவே வந்தது. எல்லாம் முடிவு பண்ணி படிக்க வந்தாகிவிட்டது. இப்போதாவது குழப்பம் நம்மை விட்டு போகிறதா என்றுபார்த்தால் இல்லை, இன்னும் தொடர்கிறது. என்ன குழப்பம் என்றுகேட்கிறீர்களா? வரும் சனிக்கிழமை என்ன செய்வது என்று. இரண்டு மாபெரும் ஜிகினா படங்கள் வெளிவருகிறதே, எதை முதலில் பார்ப்பது என்று பெரிய குழப்பம். இதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். வேட்டைக்காரனாஅல்லது அவதாரா... ஒரே கன்ப்யுசன்.... ஹெல்ப் ப்ளீஸ்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:51 AM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
மார்கழி மகா உற்சவம் - 1
அவர்கள் பாடிய தியாகராஜ கீர்த்தனை இந்த பதிவில். இதைத் தவிர ஏன் தியாகராஜ கீர்த்தனை அல்லாத மற்ற பாடல்களையும் இடக்கூடாதா என அதிகம் யோசித்து பார்த்ததில், அதையும் இடலாம் என்றே தோன்றுகிறது. எனவே மற்ற பாடல்களும் வரும், திரையிசை அல்லாத மற்ற பாடல்கள்.
ராதா விஸ்வநாதன் அவர்கள் உடன் பாட, கண்டதேவி அழகிரிஸ்வாமி வயலின்வாசிக்க, குருவாயூர் திரு துரை மிருதங்கம் இசைக்க, குயில் கூவுகிறது.
இது சற்றே பெரிய பாடல்.
கண்ணை மூடி, கேட்டு மகிழுங்கள்.
-------------------------------------------------------------
பி.கு - வீடியோ-வை அளித்து உதவிய youtube நவரசனுக்கு நன்றி.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:54 AM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: தொடர், மார்கழி மகா உற்சவம்
Friday, December 11, 2009
தாகம்
சுட்டெரிக்கும் வெயில், கண்ணிற்கு எட்டிய அந்த தூரத்தில் கானல் நீர் அலையாடிக் கொண்டிருந்தது. சென்னையில் கோடைக் காலம் என்றாலே இதுதானே காட்சி. இந்த வெயிலில் தன் முன்நெற்றியில் துளிர்த்த வியர்வையை கைகுட்டையில் துடைத்துக்கொண்டிருந்த அவர். வயது நாற்பதிற்கும் மேல் இருக்கும் என்பதை அவரது முன் மற்றும் பின் வழுக்கை அறிவித்துவிட்டிருந்தது. பெயர் குப்புசாமி. உப்புசாமி என்று இருக்கவேண்டும், இந்த மனித வெள்ளத்தில் தினமும் கரைந்துவிடுவதால். அனைத்து பேருந்துகளிலும் மக்கள் வெள்ளம் பேருந்தில் கையும் வெளியில் உடலுமாய் தொங்கிக்கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்களது பயணம் இந்த வாழ்கையில் எதை நோக்கி, இந்த கேள்விக்கான பதிலை அவர்களுடன் சேர்ந்தரிய பயணப்படும் ஒரு சாதாரண மனிதர், குப்புசாமி.
அதோ வந்துவிட்டது 21L, படியிலிருந்து இறங்கிய கூட்டத்தை தாண்டி உள்ளே சென்று தன்னை அங்கிருந்த ஒரு சிறு சந்தில் பொருத்திக்கொண்டார். இளவயதில் படிக்கட்டில் பயணப்பட்ட ஜீவன்தான் அவர். இப்போது, வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகன் முகம் மாறி மாறி வருவதால் எப்போதும் தன்னை பேருந்தினுள் பொருத்திகொள்ளும் சாதாரண குடும்பஸ்தர். அடையாரில் இருக்கும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஹெட் கிளார்க். மாதம் ஆறாயிரம் ருபாய் சம்பளம். வாங்கும் சம்பளம் வாயிக்கும் வயிற்றிற்கும் போதுமாகத்தான் இருக்கிறது, இதில் வாங்கியிருக்கும் டி.வி.எஸ் வண்டிக்கு எங்கிருந்து பெட்ரோல் போடுவது. வாய்திறக்காமல் குடும்பம் நடத்தும் மனைவி, பையன் பனிரெண்டாம் வகுப்பு, ஆஸ்துமா நோயால் அவதிப்படும் அப்பா. இந்த கதியில் போனால், என் பையனும் என்னைப் போல் ஆகிவிடுவான். கூடாது. என்ன செய்ய? இதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் இவரது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் பட்டிமன்றம், ஒரு பெரும் போராட்டம்.
அறிவு: படிக்கும் போது ஒழுங்கா படிச்சுருக்கலாம்.
மனம்: மனதிற்கு பட்டதைதானே அப்போது செய்தோம். என்.சி.சி மட்டும் என்.எஸ்.எஸ் என்று சமூகத்திற்க்குதானே சேவை செய்தோம்.
அறிவு: சமூகம் நமக்கு ஒன்னும் உதவி பண்ணலையே இப்போது
மனம்: எதையும் எதிர்ப்பார்த்து செய்யவில்லையே அப்போது
அறிவு: கூடப் படித்த மாணவர்களெல்லாம் கார், பங்களா என்று வசதியாய் இருக்காங்களே, இங்க சம்பளம் வரதும் தெரில போறதும் தெரிலையே
மனம்: ஒப்பிட்டு பேசக்கூடாது. கனவுகள் கொள்ளையாய் கொட்டிக் கிடக்கிறது. அதை நிஜமாக்க ஏனோ தயக்கம், குடும்பத்தை நினைத்து பயம்.
அறிவு: மனது வைத்தால் முடியும், மனதுதான் அனைத்து கோளாறுக்கும் காரணம்.
மனம்: அறிவு இருக்கிறது, அதை உபயோகப் படுத்த தெரியவில்லை. இதில் எனக்கு என்ன சம்மந்தம்.
மனம் சொன்னது, அறிவு சொன்னது இரண்டுமே நிஜம்தானே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் எத்தனை கனவுகள், தொழில் தொடங்க, பட்டாளத்தில் சேர என.
பாலைவனத்து நீரோடையாய்
பசித்தவன் எதிர்பார்ப்புகள்
கானல்நீர்க் கனவுகள்!
கானல்நீர் கனவுகள்தான் வாழ்க்கையோ... !!!
இந்த முறை இந்த போரட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று அவர் நேற்றே முடிவெடுத்துவிட்டாரே. முதலாளியிடம் சம்பளம் அதிகமாக்க விண்ணப்பம். அந்த அதிக சம்பளத்தை சேர்த்து வைத்து சின்னதாய் ஒரு தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளார். நல்ல தீர்க்கமான முடிவு. பிறகு என்ன செய்வார், பெயர்தான் ஹெட் கிளார்க், முதலாளி சொன்னால் கணக்கு பார்ப்பது முதல் கழிவறை கழுவும் வேலை வரை செய்ய வேண்டியுள்ளது. பதினைந்து வருடங்களாக வேலை பார்த்ததில் மிஞ்சியது இவ்வளவுதான். 'இன்று கேட்டுவிடுவோம்' சரியானமுடிவு.
'அடையார் டெர்மினஸ் இறங்கு...இறங்கு...' நடத்துனர் அறிவித்தார்.
'சந்தோஷ் எக்ஸ்போர்ட்ஸ்' பெரிய பெயர்ப் பலகை. உள்ளே சென்றார். மேஜைமேல் அவரைவிட உயரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள். லெட்ஜர்கள். சலிப்புடன் தொடங்கியது வேலை. 'எப்படி ஆரம்பிப்பது? நேரவே போய் கேட்டுரலாமா?' ஒவ்வொரு கோப்பாய் எடுத்து வைத்தபடி சிந்தனையை தட்டி விட்டார்.
'சாமி சார், முதலாளி கூப்பிடறார்', பியூன் முனுசாமி டேபிளில் டீயை டொக்கென்று வைத்துவிட்டு சொன்னான்.
'நாம் யோசித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ, வேற என்ன விஷயமா இருக்கும். எதாவது கொடேஷன்ல தப்போ' என்று முதலாளியின் அறைக்கதவை தட்டும்முன் இவ்வளவு சிந்தனைகள் அவரது மனக்கதவை தட்டிப் போயிருந்தது. 'எக்ஸ்க்யுஸ் மீ சார்' என்றார் தயங்கியபடி.
'வாங்க மிஸ்டர் சாமி, உக்காருங்க'
'இருக்கட்டும் சார், ஏதோ வர சொன்னீங்களாமே'
'ஆமாம், குட் நியூஸ். நீங்க பண்ண கொடேஷன் மூலமா நமக்கு ஒரு கோடி ரூபாய்க்கான டீல் கிடச்சுருக்கு, ஐ யாம் வெரி க்ளாட்'
'ரொம்ப நல்லது சார்'
'உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சாமி, மாசம் ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி'
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது சாமிக்கு, 'சார், ரொம்ப நன்றி சார்' கண்ணீர் மல்க.
'அட, இதுல என்ன இருக்கு. நீங்க போங்க...'
இடத்திற்கு வந்ததில் இருந்து வேலை சூடுபிடிக்க, கதிரவன் சாய்வதற்குள் அனைத்து கோப்புக்களும் சரி பார்த்தாகிவிட்டது.
'முனுசாமி, ஐயா கேட்டா நான் வேலையெல்லாம் முடிச்சுட்டேன், கேளம்பீட்டேனு சொல்லு' என்று சந்தோஷம் பொங்க வெளிய வந்தார். இந்த பணத்தை சேத்து வெச்சு சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரமிக்கலாம். கமலம் வீட்டுல சும்மாத்தான இருக்கா, அவ பாத்துக்கட்டும். இல்லாட்டி லோன் அப்ளிகேஷன் போட்டு ஒரு சின்ன இன்டர்நெட் சென்டர் ஆரமிக்கலாம். கமலத்துகிட்ட இந்த விஷயத்த சொல்லணும்.
வீட்டிற்க்குள் நுழையும்போதே, அப்பாவின் இருமல் வரவேற்ப்பை வழங்கியது. கை கால்களை கழுவிக்கொண்டு வந்தவுடன், அன்பான மனைவி எப்போதும் போல டிபன் ரெடி செய்து வைத்திருந்தாள்.
'கமலம் உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்'
'சொல்லுங்க'
'முதலாளி என்ன இன்னிக்கு பாராட்டி சம்பளத்துல ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி பண்ணிருக்காரு. அத வெச்சு...'
'அப்பாடா... ரெம்ப நல்லதுங்க... நானே உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன். பையன் அரைப் பரிட்சைல வெறும் 750 மார்க் வாங்கிருக்கான். கோடி வீடு முத்தம்மா பையன் 1000 மார்க் வாங்கிருக்கான்'
'ஏன்.. இவனுக்கு என்ன குறைச்சல்... என்ன பண்ணினா துரை படிப்பாராம்?'
'அவன டியுஷன் அனுப்பனுமாம்'
'எவ்வளோ பீஸ்'
'மாசம் ஆயிரத்து ஐநூறு'
'ஓ...ஓ....'
'நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க போல இருக்கே'
'இல்ல தண்ணி கொடு... தாகத்தை போக்கிக்கணும்....'
------------------------------------------------------------------------------------------
பி.கு: கவிதைக்கு உதவிய வானம்பாடிகள் அண்ணனுக்கு நன்றி
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 3:58 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, சீரியஸ்