சுட்டெரிக்கும் வெயில், கண்ணிற்கு எட்டிய அந்த தூரத்தில் கானல் நீர் அலையாடிக் கொண்டிருந்தது. சென்னையில் கோடைக் காலம் என்றாலே இதுதானே காட்சி. இந்த வெயிலில் தன் முன்நெற்றியில் துளிர்த்த வியர்வையை கைகுட்டையில் துடைத்துக்கொண்டிருந்த அவர். வயது நாற்பதிற்கும் மேல் இருக்கும் என்பதை அவரது முன் மற்றும் பின் வழுக்கை அறிவித்துவிட்டிருந்தது. பெயர் குப்புசாமி. உப்புசாமி என்று இருக்கவேண்டும், இந்த மனித வெள்ளத்தில் தினமும் கரைந்துவிடுவதால். அனைத்து பேருந்துகளிலும் மக்கள் வெள்ளம் பேருந்தில் கையும் வெளியில் உடலுமாய் தொங்கிக்கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்களது பயணம் இந்த வாழ்கையில் எதை நோக்கி, இந்த கேள்விக்கான பதிலை அவர்களுடன் சேர்ந்தரிய பயணப்படும் ஒரு சாதாரண மனிதர், குப்புசாமி.
அதோ வந்துவிட்டது 21L, படியிலிருந்து இறங்கிய கூட்டத்தை தாண்டி உள்ளே சென்று தன்னை அங்கிருந்த ஒரு சிறு சந்தில் பொருத்திக்கொண்டார். இளவயதில் படிக்கட்டில் பயணப்பட்ட ஜீவன்தான் அவர். இப்போது, வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகன் முகம் மாறி மாறி வருவதால் எப்போதும் தன்னை பேருந்தினுள் பொருத்திகொள்ளும் சாதாரண குடும்பஸ்தர். அடையாரில் இருக்கும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஹெட் கிளார்க். மாதம் ஆறாயிரம் ருபாய் சம்பளம். வாங்கும் சம்பளம் வாயிக்கும் வயிற்றிற்கும் போதுமாகத்தான் இருக்கிறது, இதில் வாங்கியிருக்கும் டி.வி.எஸ் வண்டிக்கு எங்கிருந்து பெட்ரோல் போடுவது. வாய்திறக்காமல் குடும்பம் நடத்தும் மனைவி, பையன் பனிரெண்டாம் வகுப்பு, ஆஸ்துமா நோயால் அவதிப்படும் அப்பா. இந்த கதியில் போனால், என் பையனும் என்னைப் போல் ஆகிவிடுவான். கூடாது. என்ன செய்ய? இதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் இவரது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் பட்டிமன்றம், ஒரு பெரும் போராட்டம்.
அறிவு: படிக்கும் போது ஒழுங்கா படிச்சுருக்கலாம்.
மனம்: மனதிற்கு பட்டதைதானே அப்போது செய்தோம். என்.சி.சி மட்டும் என்.எஸ்.எஸ் என்று சமூகத்திற்க்குதானே சேவை செய்தோம்.
அறிவு: சமூகம் நமக்கு ஒன்னும் உதவி பண்ணலையே இப்போது
மனம்: எதையும் எதிர்ப்பார்த்து செய்யவில்லையே அப்போது
அறிவு: கூடப் படித்த மாணவர்களெல்லாம் கார், பங்களா என்று வசதியாய் இருக்காங்களே, இங்க சம்பளம் வரதும் தெரில போறதும் தெரிலையே
மனம்: ஒப்பிட்டு பேசக்கூடாது. கனவுகள் கொள்ளையாய் கொட்டிக் கிடக்கிறது. அதை நிஜமாக்க ஏனோ தயக்கம், குடும்பத்தை நினைத்து பயம்.
அறிவு: மனது வைத்தால் முடியும், மனதுதான் அனைத்து கோளாறுக்கும் காரணம்.
மனம்: அறிவு இருக்கிறது, அதை உபயோகப் படுத்த தெரியவில்லை. இதில் எனக்கு என்ன சம்மந்தம்.
மனம் சொன்னது, அறிவு சொன்னது இரண்டுமே நிஜம்தானே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் எத்தனை கனவுகள், தொழில் தொடங்க, பட்டாளத்தில் சேர என.
பாலைவனத்து நீரோடையாய்
பசித்தவன் எதிர்பார்ப்புகள்
கானல்நீர்க் கனவுகள்!
கானல்நீர் கனவுகள்தான் வாழ்க்கையோ... !!!
இந்த முறை இந்த போரட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று அவர் நேற்றே முடிவெடுத்துவிட்டாரே. முதலாளியிடம் சம்பளம் அதிகமாக்க விண்ணப்பம். அந்த அதிக சம்பளத்தை சேர்த்து வைத்து சின்னதாய் ஒரு தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளார். நல்ல தீர்க்கமான முடிவு. பிறகு என்ன செய்வார், பெயர்தான் ஹெட் கிளார்க், முதலாளி சொன்னால் கணக்கு பார்ப்பது முதல் கழிவறை கழுவும் வேலை வரை செய்ய வேண்டியுள்ளது. பதினைந்து வருடங்களாக வேலை பார்த்ததில் மிஞ்சியது இவ்வளவுதான். 'இன்று கேட்டுவிடுவோம்' சரியானமுடிவு.
'அடையார் டெர்மினஸ் இறங்கு...இறங்கு...' நடத்துனர் அறிவித்தார்.
'சந்தோஷ் எக்ஸ்போர்ட்ஸ்' பெரிய பெயர்ப் பலகை. உள்ளே சென்றார். மேஜைமேல் அவரைவிட உயரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள். லெட்ஜர்கள். சலிப்புடன் தொடங்கியது வேலை. 'எப்படி ஆரம்பிப்பது? நேரவே போய் கேட்டுரலாமா?' ஒவ்வொரு கோப்பாய் எடுத்து வைத்தபடி சிந்தனையை தட்டி விட்டார்.
'சாமி சார், முதலாளி கூப்பிடறார்', பியூன் முனுசாமி டேபிளில் டீயை டொக்கென்று வைத்துவிட்டு சொன்னான்.
'நாம் யோசித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ, வேற என்ன விஷயமா இருக்கும். எதாவது கொடேஷன்ல தப்போ' என்று முதலாளியின் அறைக்கதவை தட்டும்முன் இவ்வளவு சிந்தனைகள் அவரது மனக்கதவை தட்டிப் போயிருந்தது. 'எக்ஸ்க்யுஸ் மீ சார்' என்றார் தயங்கியபடி.
'வாங்க மிஸ்டர் சாமி, உக்காருங்க'
'இருக்கட்டும் சார், ஏதோ வர சொன்னீங்களாமே'
'ஆமாம், குட் நியூஸ். நீங்க பண்ண கொடேஷன் மூலமா நமக்கு ஒரு கோடி ரூபாய்க்கான டீல் கிடச்சுருக்கு, ஐ யாம் வெரி க்ளாட்'
'ரொம்ப நல்லது சார்'
'உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சாமி, மாசம் ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி'
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது சாமிக்கு, 'சார், ரொம்ப நன்றி சார்' கண்ணீர் மல்க.
'அட, இதுல என்ன இருக்கு. நீங்க போங்க...'
இடத்திற்கு வந்ததில் இருந்து வேலை சூடுபிடிக்க, கதிரவன் சாய்வதற்குள் அனைத்து கோப்புக்களும் சரி பார்த்தாகிவிட்டது.
'முனுசாமி, ஐயா கேட்டா நான் வேலையெல்லாம் முடிச்சுட்டேன், கேளம்பீட்டேனு சொல்லு' என்று சந்தோஷம் பொங்க வெளிய வந்தார். இந்த பணத்தை சேத்து வெச்சு சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரமிக்கலாம். கமலம் வீட்டுல சும்மாத்தான இருக்கா, அவ பாத்துக்கட்டும். இல்லாட்டி லோன் அப்ளிகேஷன் போட்டு ஒரு சின்ன இன்டர்நெட் சென்டர் ஆரமிக்கலாம். கமலத்துகிட்ட இந்த விஷயத்த சொல்லணும்.
வீட்டிற்க்குள் நுழையும்போதே, அப்பாவின் இருமல் வரவேற்ப்பை வழங்கியது. கை கால்களை கழுவிக்கொண்டு வந்தவுடன், அன்பான மனைவி எப்போதும் போல டிபன் ரெடி செய்து வைத்திருந்தாள்.
'கமலம் உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்'
'சொல்லுங்க'
'முதலாளி என்ன இன்னிக்கு பாராட்டி சம்பளத்துல ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி பண்ணிருக்காரு. அத வெச்சு...'
'அப்பாடா... ரெம்ப நல்லதுங்க... நானே உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன். பையன் அரைப் பரிட்சைல வெறும் 750 மார்க் வாங்கிருக்கான். கோடி வீடு முத்தம்மா பையன் 1000 மார்க் வாங்கிருக்கான்'
'ஏன்.. இவனுக்கு என்ன குறைச்சல்... என்ன பண்ணினா துரை படிப்பாராம்?'
'அவன டியுஷன் அனுப்பனுமாம்'
'எவ்வளோ பீஸ்'
'மாசம் ஆயிரத்து ஐநூறு'
'ஓ...ஓ....'
'நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க போல இருக்கே'
'இல்ல தண்ணி கொடு... தாகத்தை போக்கிக்கணும்....'
------------------------------------------------------------------------------------------
பி.கு: கவிதைக்கு உதவிய வானம்பாடிகள் அண்ணனுக்கு நன்றி
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
3 Comments:
கார்த்திக்! அருமை. எங்க பார்த்த இது. சாதாரண உழைக்கும் வர்க்கத்துல இருக்கிற காட்சிதான்னாலும் பக்கதில இருந்து பார்த்தா மாதிரி சொல்லி இருக்கப்பா. பிரமாதம். பரீட்சைல்லாம் எப்படி பண்ணின?
நன்றி வானம்பாடிகள் அண்ணே...
பரீட்சை நல்லபடியா போச்சு, அடுத்த வாரம் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும் :)
good to read all ur post...they are simple and good...dei engaloda thaana irudha..ivvanukulayum ippadi oru thirma irukkunu theariyama pochaae ;)
Post a Comment