Wednesday, December 30, 2009

வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்

இப்போதுதான் டிசம்பர் 31 2008 பெங்களூரில் எங்களது அறையில் நண்பர்கள் மதுவருந்த அவர்களது சைடு டிஷ் முழுவதும் சாப்பிட்ட பாவத்திற்கு திட்டு மற்றும் குட்டு வாங்கி கண்ணயர்ந்தேன், அதற்குள் வந்துவிட்டது 2010. இந்த வருடத்தில் என்ன ஆணி புடிங்கினோம் என்று தெரியவில்லை. வயது ஒன்று கூடிப் போயுள்ளது, பெரிய சாதனைதான்.

ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.

இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.

ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...

ஆஸ்கார் ரஹ்மான்:
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.

மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....

சச்சின் இருபது:
ஒரு நாள் பந்து போட்டு கிரிக்கெட் விளையாடினாலே, கை காலெல்லாம் வலித்து போய்விடும் எனக்கு. ஒரு மனிதன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு இஷ்டமானதாய் இருக்க வேண்டும். அதிலும் இன்றும் அதே இளமை துள்ளலுடன் விளையாடுகிறார். உலகே அவரைப் பார்த்து வாய் பிளந்துள்ளது. சச்சின் ஒரு சகாப்தம்.

கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.

பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?

ரியோ-டி-ஜெனிரோ:
2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அசால்டாக தட்டிக் கொண்டுப் போய்விட்டது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்க கண்டத்திற்கு சென்றுள்ளது. BRIC நாடுகளில், இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட்டன அல்லது நடத்த போகின்றன. இந்தியாவிற்கு எப்போ விடிவுகாலமோ. விழித்துக் கொண்டு காத்திருப்போம். முதலில் காமன் வெல்த் போட்டிகளை ஒழுங்காய் நடத்துங்கள் என்று சொல்லுவது காதில் விழுகிறது.

இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.

வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.

செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.


இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது

இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.




4 Comments:

vasu balaji said...

நல்லாருக்கு கார்த்திக். புத்தாண்டு வாழ்த்துகள். நேரம் கிடைக்கிறப்போ பாருப்பா.
http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.html

ஜிகர்தண்டா Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே,
அட நம்ம பேரு கூட வந்துருக்கே, ஆச்சரியம்தான்.
என்னையும் பதிவர்களுக்கு அறிமுகப்படுதினதுக்கு மிக்க நன்றி.
என்ன நீங்க சொன்ன மாதிரி இந்த சோம்பேறித்தனம்தான் நம்மள விட்டு போக மாட்டேன்குது. :)

பா.ராஜாராம் said...

நல்ல தொகுப்பு கார்த்தி.புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜிகர்தண்டா Karthik said...

நன்றி பா.ரா சார்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online