Thursday, December 17, 2009

2080

ஜூன் 20, 2080 - மின்னல் வேகத்தில் என்னைத் தாண்டி இரு வாகனங்கள் காற்றில் சென்றன. வேகம் சுமார் மூவாயிரம் கீ.மீ.

'ச்சே..என்ன வேகமா போறாங்க... காத்துல போனா இவங்கதான் ராஜான்னு நெனப்பு', எனக்கு அருகில் தோளில் பையை மாட்டி நடந்து வந்தவர் சொன்னார். அவரது உடல் வாகில் என்னைப் போல் இருந்தாலும், வயது பதிமூன்று, பதினான்குதான் இருக்கும். இதனால் அவருக்கு ப்ரோகீரியா என்று அர்த்தம் இல்லை, இந்தக் காலத்தில் அனைத்து குழந்தைகளுமே அப்படித்தான்இருக்கின்றன. ஊரில் தண்ணீர் இல்லை, ஓசோன் படலம் முழுதும் ஓட்டையாகிவிட்டது. கடல் மட்டம் அதிகமானபடியால் மக்கள் வாழும் பகுதி குறைந்துவிட்டது.

அப்படியே நடந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். அடுக்கு மாடியில் ஐநூற்றி ஆறாவதுமாடி. ஹெலிபேட் போல இருக்கும் ஒரு இடத்தில் நின்று 5..0..6.. என்று சொன்னால் அடுத்த நொடியில் வீட்டு வாசலில் நிற்கலாம். என்ன ஒரு விஞ்ஞான முன்னேற்றம்.

'என்ன நீங்க RPS (Radiation Protection Suit) போடாமலே போயிருக்கீங்க. நாளைக்கு ஒன்னுனா யாரு பாக்கறது?' மனைவி அக்கறையுடன் கோபத்தை காட்டினாள். என் காலத்தில் சட்டம் போட்டபோதே ஹெல்மெட் போடாமல் போன ஆள் நான். எது என்னை என்ன செய்யும். 'இல்லை, என் சூட் பழசாகுற மாதிரி இருக்கு அதான் ரொம்ப தேவைன்னா போட்டுக்கலாமேன்னு வெச்சேன்'
'சரி..சரி..எல்லாருக்கும் மாத்திரை வாங்கிட்டு வந்தீங்களா?' என்றாள் எப்போதும்போல் அதிகாரத்துடன். என்னதான் வருடங்கள் பறந்தாலும், இந்த அதிகாரம் குறையாதோ?
'என்ன மாத்திரை?' என்ன சொன்னாள் இவள், எதை நாம் விட்டு விட்டோம். இந்த தள்ளாத வயதில் நாம் வெளியில் சென்று வீடு திரும்புவதே அரிது. இதில் நாம் இதை வேறு ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா? - 'என்ன மாத்திரைம்மா?' என்றேன் கெஞ்சலாய்.
'என்ன மாத்திரையா? TQT (Thirst Quenching Tablets) உங்ககிட்ட எத்தன தடவ சொல்லி அனுப்பினேன். அதோட விலைய வேற நாளைல இருந்து ஏத்த போறாங்களாம். ஒரு மாத்திரை ஒரு லட்சம் ரூபாய். எங்க போறது. சட்டுன்னுபோய் வாங்கிட்டு வாங்க. RPS போட்டுக்க மறக்காதீங்க' என்று அக்கறையுடன்கூறி சமயலறையில் மறைந்தாள்.
'இந்த பொம்மனாட்டிகள் இன்னும் திருந்தவே இல்லை. சமையல் செய்வது பெரியவேலையாம். சாம்பார் என்று ஒரு ரோபோட் முன்பு சொன்னால் அது செய்துகொடுக்கிறது. என்னை விடுதலை செய்துகொள்ள இந்த ரோபோட்வாங்கிக்கொடுத்திட்டேன்'

TQT, இன்று மக்கள் அனைவரும் அதற்குத்தான் அடிமை. எங்கள் காலத்தில் தண்ணீர் கேனில் வரும். இன்று தண்ணீர் என்பதே உலகில் இல்லை. தாகத்தை எப்படி தணிப்பது. அதை தவிர்க்க இதை கண்டுபிடித்த பெர்னாண்டோ பெர்லுஸ்கோனி என்பவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். இதை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். மூளை மற்றும் நாக்கில் தாகம் ஏற்படுத்தும் நரம்புகளை இது மரத்துப்போக செய்துவிடும். எல்லார் வீட்டிலும் உள்ளே நுழைந்தவுடன் குடுக்கும் முதல் மாத்திரை இதுதான். தங்கள் குடும்பம் போக மற்றவர்களுக்குஎன வாங்குவோர் அதிகமான காரணத்தால், விலையேற்றம். என்னைப்போல கீழ்க்காட்டில் வாழும் மக்கள், அதாவது மாதம் நான்கு கோடி சம்பாதிக்கும் மகனின் நிழலில் வாழும் மக்களுக்கு, கடினம்தான்.

அது கிடைக்கும் கடை மிகவும் தூரம். இங்கிருந்து Intra Air Shuttle பிடித்துஅடையார் சென்று அங்கிருந்து Air Space Rider பிடித்து விழுப்புரம் செல்லவேண்டும். போக வர கண்டிப்பாக ஒரு மணிநேரம் ஆகும். Air Pit Stop இதுதான் அதன் நிறுத்தம். இன்றும் பிச்சைகாரர்கள் உள்ளனர். பாவம், RPS இல்லாமல் அவர்கள் உடல்களில் பல பொத்தல்கள். எல்லாருக்கும் நூறு ரூபாய் தாள்களை வீசினேன்.

IAS21 வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். மக்கள் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்கள். அதில் இருவர் பேசியது எனக்கு சம்மட்டியில் அடித்தது போலஇருந்தது.
'இந்த நமக்கு முன்னால இருந்த மனுஷங்க இந்த பெட்ரோல் அது இதுன்னு உபயோகிச்சு நம்மள நாசப்படுத்தீட்டாங்க'
'அது கூட பரவாயில்லீங்க தண்ணிய கூட நமக்கு மிச்சம் வைக்காம தீர்த்துடாங்க, வாயில நல்ல கெட்ட வார்த்தை வருதுங்க'

என் காலத்தில் உபயோகித்த மற்றும் இருந்த இயற்கை வளங்களை இவர்கள் திரைப்படங்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சொன்னதும் உண்மைதானே, கிட்ட இருக்கும் கடைக்கு கூட வண்டியிலதானே செல்வோம். கேட்டுக்கொண்டு, எதிர்த்து பேசமுடியாமல் உட்கார்ந்துவந்தேன்.

மாத்திரை வாங்கி வருவதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. எப்போதும்போல் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொன்னதற்கு எதிர்மாறாய் அதிக வெயில்அடித்து தள்ளியதில் எனது RPS பொத்தல் போட்டுவிட்டது. இதை எப்படியாவதுமகனிடம் சொல்லி வாங்கவேண்டும். எந்த காலமானாலும் பிள்ளைகள் அம்மாவின் சொல்லைத்தான் கேட்பார்கள். மனைவியிடம் சொல்லவேண்டும்.

'தம்பி, அப்பாவோட RPS பொத்தல் விழுந்துருச்சு புதுசு வாங்கி கொடுத்துட்டு, கம்பெனி- திரும்ப வாங்கிருப்பா'
'அம்மா, கம்பெனி பாலிசி மாத்திட்டாங்க. அப்பா, அம்மாவெல்லாம் கவர்பண்றதில்லம்மா. அட்ஜஸ் பணிக்க சொல்லு, அப்புறமா டீல்- வாங்குவோம்.'

இந்த மாதிரி அவன் சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மீண்டும்அந்த RPS மாட்டிக்கொண்டு கோபமாக வெளியில் சென்றேன்.
இந்த கொடுமைக்கு, அவர்கள் சொன்னது போல 2012-இல் உலகம் அழிந்திருக்கலாமே. அந்த மரணவெயில்லில் எனது உடலில் பொத்தல் மேல் பொத்தலாய் போட்டு ரத்தம் பீயிச்சிஅடித்தது.

கை, முகம் மற்றும் உடம்பை தேய்த்தவாறே நான் எழுந்தேன். இது அனைத்தும்கனவா??? மிக கொடூரமாய் இருக்கிறதே.

அன்று காலை ஆபிஸ் கிளம்பும் வரை நான் ராகினியிடம் எதுவும் பேசவில்லை.
'என்னங்க, என்ன சீக்கிரம் குளிச்சுடீங்க
, தினமும் அரைமணிநேரம் குளிப்பீங்க'
'இல்ல, சும்மாத்தான்'
'இந்தாங்க கார் சாவி...'
'இல்லமா... ஆபீஸ் இங்கதானே இருக்கு. நடந்தே போறேன்'

என்னால் வருங்காலத்தை மாற்றமுடியும் எனும்போது, மற்றவர்களால் முடியாதா. நம்பிக்கையுடன் நடந்தேன்.


8 Comments:

Ragavendran Madhusudanan said...

amazing thought machan... fantastic write up... hats off!

Chitra said...

என்ன நீங்க RPS (Radiation Protection Suit) போடாமலே போயிருக்கீங்க. நாளைக்கு ஒன்னுனா யாரு பாக்கறது?' மனைவி அக்கறையுடன் கோபத்தை காட்டினாள்....................சிகாகோ குளிரில் சும்மா புலம்பிக்கிட்டு இருக்காமா, கற்பனை குதிரையை என்னமா தட்டி விட்டுருக்கீங்க!

ஜிகர்தண்டா Karthik said...

Ragav... Thanks machan... edho try panunen..

ஜிகர்தண்டா Karthik said...

நன்றி சித்ரா,
குளிருல வெளில போக முடியறதில்ல...
இப் குளிருது.. பிற்காலத்துல எப்படி இருக்கும்னு தினக் பண்ணேன்.

vasu balaji said...

good one.

Sivaprakash Panneerselvam said...

Karthi miga arumai....Nalla Ariviyal Kathai....

Shan said...

Very good imagination, see below song which well trying match your imagination
http://www.youtube.com/watch?v=P2A_Juv213s

Ananya Mahadevan said...

Hi,
It reminded me of sujatha's thimila but yours had more social responsibility.well done karthik.:)

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online